அமெரிக்க அரசாங்கத்தின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட ஜூலியன் அசாஞ்சே இன்று(ஏப்ரல் 11) கைதி செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரான அசாஞ்சேவைக் கைது செய்ய அமெரிக்கா பலமுறை முயற்சித்து வந்தது. இந்நிலையில் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர் அசாஞ்சே, கடந்த ஏழு ஆண்டுகளாக ஈக்வேடார் தூதரகத்தில் வாழ்ந்துவந்துள்ளார். ஏற்கனவே அசாஞ்சேவை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஈக்வேடார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது.
சமீப காலமாக அசாஞ்சேவின் உடல்நிலை சிக்கலாகியுள்ளதால் அவர் எளிதாக ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க முடியாது எனக் கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் அவரது பாஸ்போர்ட் சிக்கல்கள் சரி செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று ஈக்வேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அசாஞ்சேவை லண்டன் போலீஸார் கைது செய்தனர். கடந்த 2012-ம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வாரண்டின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் அசாஞ்சே.