கனமழை தொடர்பாகத் தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், வரும் 29ஆம் தேதி வங்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து.
இந்தப் புயலுக்கு (FANI) ஃபானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தமிழகம் – ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கவுள்ளதால், வரும், 28, 29ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்30, மே 1ஆம் தேதி கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் எனவும் கனமழை தொடர்பாகத் தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஏப்ரல் 25, 26இல் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏப்ரல் 27, 28இல் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்.