ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்துக்கு ரூ.309.375 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபானி புயல். இந்தப் புயலானது அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு பகுதியில் நகர்ந்து நாளை மாலை ஒடிசாவை நெருங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று தொடங்கி நாளை வரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபானி புயல் அதி தீவிரப் புயலாக மாறியதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்துக்கு ரூ.309.375 கோடியும், ஆந்திராவிற்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.340.875 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.235.50 கோடியும் நிதியாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.