தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை எந்த ஆணுக்கும் இல்லையெனத் தெரிவித்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்.
தான் ஒருதலையாகக் காதலித்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, அந்த பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமேஷ்க்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவருக்கு மனநல ஆலோசனை வழங்க அறிவுறுத்தினார்.
தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை எந்த ஆணுக்கும் இல்லை எனக்கூறிய நீதிபதி, பெண் என்பவர் தனது விருப்பப்படி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் ஆணாதிக்க எண்ணமே இது போன்ற சம்பவங்கள் நிகழக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், பெண் பழகும் முறைகளே அவரை மணம் முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அதற்காகப் பெண்ணைக் கத்தியால் குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். எனினும், இது போன்ற வழக்குகளில் அனுதாபம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.