இந்திய மீனவர்கள் 55 பேர் உட்பட 60 இந்தியர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.
இந்திய மீனவர்கள் 55 பேர் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர். தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குச் சென்ற இந்திய மக்கள் ஐந்து பேர் உட்பட 60 பேர் கராச்சியில் உள்ள மாலீர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் 60 பேரையும் நன்னடத்தை அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு. இதைதொடர்ந்து, 60 பேரும் பலத்த பாதுகாப்புடன் கராச்சி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் நேற்று (ஏப்ரல் 30) ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இந்திய அதிகாரிகள் மீனவர்களை அழைத்து அமிர்தசரஸ் பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் விரைவில் அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் இருக்கும் கைதிகள் 360 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யவுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் முதல் கட்டமாகக் கடந்த 5ஆம் தேதி 100 கைதிகளும், அதைதொடர்ந்து 14ஆம் தேதி 100 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய ராணுவத்தின் மீது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியிருந்தது. அதைதொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே இருந்த அனைத்து தொடர்புகளும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு நன்னடத்தை அடிப்படையில் 60 இந்தியர்களை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.