ஃபானி புயல் ஒரிசாவில் கரையைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் வறுமையின் பிடியில் ஆழ சிக்கியிருக்கும் மாநிலங்களில் ஒன்றான ஒரிசா இந்த ஃபானி புயலை எதிர்கொண்டிருக்கும் விதம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு ஒரு பெரும்புயலை சந்தித்து, ஆயிரக்கணக்கில் தன் மக்களைப் பலிகொடுத்த ஒரு மாநிலம், இன்று தேவையான ஒருங்கிணைப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அர்ப்பணிப்புணர்வுடன் செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியினை விதைத்திருக்கிறது.
கடந்த நூறு வருடங்களாகத் தொடர்ந்து ஒரிசா வெள்ளம், பஞ்சம், புயல் என இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வந்திருக்கிறது. 1998-இல் வெப்பச் சலனத்தால் மட்டும் 1500 பேர் இறந்து போயிருக்கிறார்கள். பூகோளரீதியில் ஒரிசாவின் இட அமைவே இப்படியான பேரிடர்கள் தொடரக் காரணம். மேலும், ஒரிசாவின் சூழல் பெருமளவு கடந்த வருடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது, மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 30,000 பேர் இயற்கைப் பேரிடர்களில் இறந்து போயிருக்கிறார்கள். ஆகவே, ஃபானி புயலுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னதாகவே தொடங்கப்பட்டிருக்கின்றன.
ஃபானி புயலை அது பல நூறு மைல்கள் தொலைவில் இருக்கும்போதே கவனமாகத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். புயலின் பாதையை, அது கரையைக் கடக்கும் விவரங்களை வானிலை ஆய்வு மையமும் துல்லியமாகக் கணித்திருக்கிறது. கடந்த வியாழன் அன்று காலை ஒரிசா அரசு தனது செயல் திட்டத்தை வெளியிட்டது. பலமுறை சரிசெய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட செயல்திட்டம் அது. எல்லா அதிகாரிகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்திட்ட மையங்களில் தயாராக இருந்தார்கள்.
புயலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சரியான உறைவிடங்கள் இல்லாத மக்கள் மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, முக்கியமாக வயதானவர்களும் குழந்தைகளும் பத்திரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கவும் முழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரிசாவுக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். வியாழன் அன்று மழை பெய்யத் தொடங்கியபின் தெருக்களில் பிராந்திய மொழியில் அனைவரையும் வீட்டுக்குள், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்கச் சொல்லி ஒலிப்பெருக்கியின் மூலம் அறிவுப்புகள் தரப்பட்டது. கடலோர ஊர்களில், குறிப்பாக புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட பூரியில் இருந்து மக்கள் பத்திரமான இடங்களுக்கு முன்னதாகவே அழைக்கப்பட்டுவிட்டனர். வியாழன் அன்று இரவு ஃபானி உக்கிரம் அடைந்துகொண்டிருந்தபோது மக்கள் குடும்பம் குடும்பமாக பாதுக்காப்பான உறைவிடங்களில் புயலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
வெள்ளி அன்று காலை புயல் கரையைக் கடந்தது, கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது காற்று. நூற்றிற்கும் அதிகமான மக்கள் காயமடைந்திருக்கிறார்கள், பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்திருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஊடகங்களுக்குக் கிடைத்த தகவலின்படி கிட்டத்தட்ட 8 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரிசா முன்பு சந்தித்த இயற்கைப் பேரிடர்களில் பார்த்த உயிரிழப்புகள், சேதங்கள் பல இலக்க எண்களாக இருந்தன. இப்போது ஒரிசா மக்கள் ஒருங்கிணைந்து ஃபானியை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒரிசா அரசின் ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உயிரிழப்புகள்தான் குறைவு, புயலால் பொருட்சேதம் அதிகம் என மக்கள் சொல்கிறார்கள்.
வாழ்வின் ஆதாரமாக இருந்தவற்றை ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் தொலைப்பதும், மீண்டும் வாழ்க்கையைப் பூஜ்யத்திலிருந்து தொடங்குவதுமாக இருக்கிறார்கள் ஒரிசாவின் நடுத்தர, அடித்தட்டு வர்க்க மக்கள். மறுபடி மறுபடி அடிப்பட்டு வீழ்ந்து போகும் மாநிலம் இன்று ஃபானி புயலை எதிர்கொண்டு நின்றுகொண்டிருக்கிறது.
நன்றி: நியூயார்க் டைம்ஸ்