உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் போராட்டம் நடத்திய நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழிய பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுப் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையே இதில் தனக்கு நீதி கிடைக்காது என்று புகார் தெரிவித்த பெண், விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறிய நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை நேற்று (மே 6) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரத்தை அணுகிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்களும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று (மே 7) போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மேற்கொண்டு போராட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது உச்ச நீதிமன்றத்தை சுற்றி தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.