பல நேரங்களில் மதங்கள், சாதிகள் கற்பிக்கும் வித்தியாசங்கள் காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும், அப்படியான ஒரு நிகழ்வு அஸ்ஸாமின் ஹைலகந்தி மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்டதை தொடர்ந்து உருவான மதக் கலவரத்தில் பதினான்கு பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மாவட்டத்தின் ராஜ்யேஷ்வர் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு மனிதநேயத்தை காண்பிக்கிறது.
அஸ்ஸாமின் ஹைலகந்தி மாவட்டத்தில் உள்ள ராஜ்யேஷ்வர் கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் ரூபன் – நந்திதா. கர்பிணியான நந்திதாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் மருத்துவமனை இல்லாததால், சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குதான் அனைவரும் செல்ல வேண்டும்.
இந்நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல ரூபன் அருகில் உள்ளவர்களிடம் உதவி கோரினார். ஆனால், அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவினால் உதவி செய்ய அனைவரும் தயங்கினார்கள். இதற்கிடையில், நந்திதாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. யாரும் உதவ முன்வாரதபோது, அருகில் வசித்த மக்பால் என்பவர் தனது ஆட்டோ ரிக்ஷாவுடன் நந்திதாவுக்கு உதவ முன்வந்தார்.
இருவரையும் அழைத்துக்கொண்டு உதடுகளில் பிரார்த்தனைகளைச் சொல்லிக்கொண்டே எஸ்.கே ராய் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் மக்பால். சிறிது நேரத்திலேயே நந்திதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. உடனே, இந்த சூழலின் நெகிழ்வில் ரூபன் அந்த குழந்தைக்கு ‘ஷாந்தி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் எல்லோருமே மக்பாலுக்கும், ரூபனுக்கும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை இது போன்ற நிகழ்வுகள்தான் சமூகத்திற்கு உணர்த்தும் என்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்கள்.