புவியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்த ”ரிசாட் 2பி” செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற ”பிஎஸ்எல்வி சி-46” ராக்கெட் இன்று (மே 22) காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்தியாவின் எல்லைகளைக் கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ரேடார் பார்வை மூலம் பூமியைக் கண்காணிக்க ரிசாட் 2பி செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்தச் செயற்கோளை பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி.சி-46 ராக்கெட் இன்று காலை சரியாக 5.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
சுமார் 615 கிலோ எடை கொண்ட ரிசாட் 2பி ரேடார் செயற்கைக்கோள் 555 கிலோமீட்டர் தொலைவுக்குப் புவி வட்டப்பாதையில் சுற்றிவரும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட் காலம் 5 ஆண்டுகள் ஆகும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ரிசாட் 2பி ரேடார் செயற்கைக்கோள் பெரிதும் உதவும். இதில் உள்ள ரேடார்கள் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் மிக துல்லியமாகப் புகைப்படமெடுக்கும் திறன் கொண்டவை.
ரிசாட் 2பி ரேடார் செயற்கைக்கோள் பூமிக்கு மேலே 555 கிலோமீட்டர் உயரத்தில், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வரும் ஆண்டில் ஐந்து ரிசாட் செயற்கைகோள்களை ஏவுவதற்கு திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்தவர்கள் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு ராக்கெட் ஏவப்படுவதைக் கண்டு களித்தனர். இஸ்ரோ மையம் நடப்பு ஆண்டில் விண்ணில் செலுத்தும் மூன்றாவது ராக்கெட் பிஎஸ்எல்வி-46 என்பது குறிப்பிடத்தக்கது.