கேள்வி: சமீப காலங்களில் ஒரு தாயே தனது குழந்தையை கொல்லும் நிறைய சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். உண்மையில் இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது, தாய்மை என்பதை மிக உயர்வாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் எப்படி ஒரு தாயால் தனது குழந்தையையே கொலை செய்யும் அளவிற்குச் செல்ல முடிகிறது. முந்தைய காலங்களில் இருந்த தாய்க்கும், குழந்தைக்குமான ஒரு ஆழமான பிணைப்பு இன்றைய காலகட்டத்தில் குறைந்து இருக்கிறது என இதை வைத்து சொல்ல முடியுமா? இதுபோன்ற செயல்களை அல்லது அதுபோன்ற முடிவெடுக்கும் மனநிலைகளையும் நாம் எப்படி புரிந்துகொள்ள முடியும்?
பெரியசாமி சரவணன், திருச்சி
பதில்: ஒரு தாயே தனது குழந்தையைக் கொல்லும் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் ஒரு அதீத குற்றச்செயல்கள். இப்படிப்பட்ட ஒரு அதீத நிகழ்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு நாம் ஒரு சமூகத்தின் பொது மன ஓட்டம் இப்படித்தான் இருக்கும் என்று பொதுமைப்படுத்த முடியாது. ஒரு சமூகம் என்பது அத்தனை விதமான மனிதர்களையும் உள்ளடக்கியது, அது நெறிபிறழ்ந்த, மனநிலை பிறழ்ந்த மனிதர்களையும் ஒருங்கே கொண்டது. ஒட்டுமொத்த சமூகத்தைப் கணக்கிடும்போது, இப்படிப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம், அந்த பிறந்த மனிதர்கள் செய்யும் நடவடிக்கைகளை வைத்து அந்த சமூகத்தின் பொது மனசாட்சியை நான் எப்படியும் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்பது நியாயமாகவும் இருக்காது. இவைபோன்ற சம்பவங்கள் எல்லாம் தனிநபர்களின் வாழ்வியல் நெருக்கடிகளில், அந்த தனிநபர்களின் தங்களது பிறழ்வான மனநிலை வழியாக எடுக்கக்கூடிய முடிவுகள். இந்தப் பிறழ்வான நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு தர்க்க மனநிலையில் நின்று எப்படியும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அனைத்துவிதமான தனிமனித குற்றங்களுக்கும் இது பொருந்தும். சில நேரங்களில் இந்த தனிமனித குற்றங்களுக்கு பின்னால் சில சமூக காரணிகள் இருக்கும். உதாரணத்திற்கு திருடுவது என்பது தனிநபர் குற்றம் என்றால் திருடும் நிலைக்கு ஒருவனை தள்ளியதற்கு அந்தச் சமூகத்தில் ஏதோ ஒரு நிலைப்பாடு காரணமாக இருக்கும். அந்தக் குற்றத்தில் அதனுடைய பங்கும் உண்டு ஆனால் இவையெல்லாம் குற்றச்செயல்கள். ஆனால் ஒரு தாய் தனது குழந்தையை கொல்வதென்பது ஒரு சாதாரண குற்ற செயல் இல்லை, அதீத செயல். இங்கு சமூகக் காரணிகளின் பங்கு என்பது வெகு குறைவு. அந்த தனிப்பட்ட மனிதரின் பிறழ்வான மனநிலையே இதுபோன்ற அதீத குற்றங்களுக்கு பிரதானமான காரணமாக இருக்கும், அதனால் இதை வைத்துக்கொண்டு இந்தச் சமூகத்தில் உள்ள எல்லா பெண்களுக்கும் இதே மன ஓட்டம்தான் இருக்கும் என சொல்வது அபத்தம்.
இந்தச் செயல்களை நாம் எப்படி தவிர்ப்பது? குடும்பமும், சமூகமும் இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு காரணம் இல்லை என்றாலும் ஒரு குடும்பம் சில கணக்குகளை, சில நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதன் வழியாக இந்த சம்பவங்களை தடுக்க முடியும் என நான் நம்புகிறேன். குறிப்பாக பெண்கள் தொடர்பாக நமது குடும்பம் கொண்டிருக்கும் ஸ்டீரியோடைப் சிந்தனைகளை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும். ‘பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், சகித்துக்கொள்ள வேண்டும், அத்தனையையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்று இன்னமும் நமது குடும்பங்கள் ஒரு இறுக்கத்தை பெண்களுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தால் அந்த இறுக்கம் நமது குடும்ப அமைப்பின்மீது ஒரு பெரும் வெறுப்பாக மாறிப்போகும். கல்வியும் பொருளாதாரமும் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் அதை இறுக்கத்தைத் தளர்த்தி நிபந்தனையற்ற பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பெண்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் அதன்வழியாகவே நமது குடும்ப அமைப்பில் பெண்களின் பங்கை உறுதிசெய்ய முடியும், இல்லை என்றால் அதே கெட்டிப்பட்டு போன்ற சிந்தனைகளை வைத்துக்கொண்டிருந்தால் அது பெண்ணின்மீது ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டு இருக்கும், அந்த அழுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஒரு வெடிப்பாக நிகழலாம். ஒரு இயல்பான மனநிலை கொண்ட பெண் அதில் இருந்து மீள்வதற்கு தீவிரமில்லாத சில முடிவுகளை எடுத்துக் கொள்வாள் ஆனால் பிறழ்வான பெண் இதுபோன்ற ஒரு அதீத குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஒரு அதீத குற்றச்செயல்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தின் பொது மனப்பான்மையை வரையறை செய்ய முடியாது, நமது குடும்ப அமைப்பு பெண்கள் தொடர்பான கொண்டிருக்கும் இறுக்கமான நிலைப்பாடுகளை இன்னமும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அது நமது குடும்ப அமைப்பையே பாதிக்கும் நிலைக்குச் செல்லும்.
முந்தையை கேள்வி -பதில்: https://bit.ly/2Wp1Q2S
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com