கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நிபா வைரஸ் குறித்து யாரும் பதற்றம் அடைய வேண்டாமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியபோது, இந்தக்காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவில் பரவியுள்ளதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேரள சுகாதாரத் துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதியான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் திரிச்சூரைச் சேர்ந்த 8 பேர் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரள அரசு நிபா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் செய்தி குறித்து கருத்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நிபா வைரஸ் குறித்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது குறித்து யாரும் பயப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள். சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும். வவ்வாலின் கழிவுகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுகாதாரத் துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் வைரஸ் காய்ச்சல் கடந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடுமையான காய்ச்சல், தசைமூட்டுவலி, தலைவலி, கண் எரிச்சல், தொண்டைவலி, தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு வலிப்பு, மூளை காய்ச்சல் போன்றவை நிபா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். எனவே எந்த மாதிரியான காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளவேண்டும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.