இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் என்றவுடன் நம் நினைவில் வருவது அனில் கும்ளே, கவாஸ்கர், சச்சின், சேவாக், தோனி போன்றோர்தான். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவர்கள் பெரும் பங்காற்றினாலும் அவ்வப்போது இந்திய அணியின் குறிப்பிடதகுந்த வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கேப்டன்கள் அல்லாது சில திறமை வாய்ந்த வீரர்கள் நம் உணர்வுகளுடன் கலந்து இருப்பார்கள். இவர்களில் நமக்கு முதலில் நியாபகம் வருவது 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கவில் நடந்த 20ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிக்கொண்டிருந்த பொழுது மிடில் ஆர்டரில் களமிறங்கி, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றது மட்டுமில்லாமல் இந்திய ரசிகர்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்த பஞ்சாப் சிங்கமான யுவராஜ் சிங் தான். இவர் தற்போது சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் இந்திய அணி வீரர் யோக்ராஜ் சிங்கின் மகனான யுவராஜ் சிங்கிற்கு இளம்வயதிலிருந்தே டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் அதிகம். 14 வயதுக்குட்பட்டோரின் ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இவரின் பதக்கங்களை யோக்ராஜ் தூக்கி எறிந்து, கையில் கிரிக்கெட் மட்டையைக் கொடுத்து அதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அன்று அவரின் தந்தை கிரிக்கெட் மட்டையை யுவியின் கையில் கொடுத்திராமல் போயிருந்தால் இப்படிப்பட்ட ஒரு வீரரை நாம் அறியாமல் போயிருந்திருப்போம்.
ரசிகர்களால் செல்லமாக ‘யுவி’ என்று அழைக்கப்படும் யுவராஜ் சிங் இந்திய அணியில் மறக்க முடியாத பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தூணாக இருந்த யுவியின் சில சாதனைகளைக் காண்போம்.
2000 ஆம் ஆண்டு: U19 உலகக்கோப்பை தொடர்
இத்தொடரின் 3-வது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய யுவராஜ் சிங் 68 ரன்களை குவித்து 4 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த யுவி அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் யுவராஜ் தட்டிச் சென்றார். மேலும் அந்தத் தெடாரில் 203 ரன்கள் விளாசி, 12 விக்கெட்களை வீழ்த்தி U19 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய வீரராக யுவராஜ் இருந்தார். மேலும், இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடரை நடத்திய இலங்கை அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டு: ஐசிசி நாக்அவுட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் பெவிலியன் திரும்பிய நிலையில் தனி வீரராகப் போராடிய யுவி 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மட்டுமில்லாமல் இந்திய அணியை அரையிறுதிக்கு முன்னேற வைத்தார்.
2007 ஆம் ஆண்டு: டி20 உலகக்கோப்பை
ஐசிசி நடத்திய முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான சச்சின், சேவாக், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் இளம்வீரர்களுக்கு வழிவிட்டு தொடரிலிருந்து விலகினர். அந்தத் தொடரில் தான் தோனி முதன்முதலாக கேப்டனாக செயல்பட்டார். இளம்வீரர்களை கொண்டிருந்த இந்திய அணியில் யுவராஜ் சிங் மட்டுமே அனுபவ வீரராக வலம் வந்தார். அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து வீரர் ப்ராடு வீசிய ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். இந்தச் சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை. 12 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங் மற்றொரு சாதனையும் நிகழ்த்தினார்.
2011 ஆம் ஆண்டு: ஐசிசி உலகக்கோப்பை
இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கிய போட்டியில் 74 ரன்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 261 ரன்கள் எடுத்தது. கடைசி 12 ஓவர்களில் பிரெட் லீ, ஷான் டைட், மிட்செல் ஜான்சன் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு யுவராஜ் 74 ரன்கள் எடுத்து காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.
கடந்த 2012ம் ஆண்டு யுவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு பல சிகிச்சைக்களுக்கு மத்தியில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மீண்டும் பிறந்தார் என்றே சொல்லவேண்டும். தற்போது இவர் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஓய்வு குறித்து யுவி கூறுகையில், “2000ம் ஆண்டில் முதல் முறையாக ஒருநாள் தொடரில் அறிமுகமானது மறக்க முடியாது. அதன் பின்னர் 2007ல் டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியது எனக்கும், ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத நினைவாக உள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரிலும், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுக்க உதவியது என்னால் மறக்க முடியாத விஷயம். அதன் பின்னர் என் உடல் நிலை காரணமாக இந்திய அணிக்காக விளையாட முடியாதது மிகுந்த வேதனை அளித்தது. அதிலிருந்து மீண்டும் அணியில் இடம் பெற தான் போராடியது அதிகம். இருப்பினும் சரியான வகையில் போட்டியில் இடம் கிடைக்கவில்லை, சரியாகவும் விளையாட முடியவில்லை.
இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்த சந்து போடே, டி.ஏ சேகர் ஆகியோருக்கு நன்றி. எனது மிக நெருங்கிய நண்பர்களான கம்பீர், ஜகீர்கான், சேவாக் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதோடு,என்னோடு விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த ஐபிஎல் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அதே சமயம் கடைசியாக, என்னை உலகிற்கு காட்டிய தன்னை குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் “ என தெரிவித்தார்.