தமிழகத்தில் தெற்கு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தை காண முடிகிறது. அவ்வப்போது தலைநகர் சென்னையிலும் மழை எட்டிப்பார்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் ஒரே நாளில் 91.9 மில்லிமிட்டர் மழை பெய்துள்ளது. இதனால் மும்பை நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து விமான போக்குவரத்து ஆகியவை ரத்தாகியுள்ளன. இந்த மழையால் பல ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே வீட்டுச் சுவர்கள் இடி விழுந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் 13 காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியோரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாது கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புனேவில் நள்ளிரவில் கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேர் பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் ஜூலை 2,4 மற்றும் 5ஆம் தேதிகளில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மகாராஷ்டிராவில் பாதிப்புகள் அதிகமாக தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.