பொன்மாணிக்கவேல் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாஷா அளித்த புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராகப் பொய் வழக்குப் பதிவு செய்வதாகவும், உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தை அவர் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சிபிசிஐடிக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.