‘மத்திய ஆயுதக் காவல் படை’களுள் (CAPF) ஒன்றான ‘மத்திய ரிசர்வ் காவல் படை’யில் (CRPF) பணிபுரியும் பெண்களுக்கென்று பிரத்யேகமான பாதுகாப்பு கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) ஓர் ஆராய்சிக்கூடமான உடலியங்கியல் ஆராய்ச்சி நிறுவனம் (DIPAS) இந்த சிறப்பு பாதுகாப்புக் கவசத்தை வடிவமைத்துள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படை என்றால் என்ன?

மொத்தம் ஏழு மத்திய ஆயுதக் காவல் படைகள் நாட்டில் செயல்படுகின்றன. அசாம் ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை, சசாஷ்திர சீமா பல் ஆகிய ஏழு படைகள் மத்திய ஆயுதக் காவல் படைகள் என்று அழைக்கப்படும். இவை உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும்.

பெண்கள் பங்கு:

1987 முதல் மத்திய ரிசர்வ் படையில் பெண்களும் பணியாற்றுகின்றனர். மஹேலா படை என்று அழைக்கப்படும் இவர்கள் பாபர் மசூதி இடிப்புக் கலவரத்தின்போது சிறப்பாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெற்றனர். ஆனாலும் 1992 வரையிலும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் பெண்கள் மேற்பார்வை அதிகாரிகளாகவே சேர்க்கப்பட்டனர்.

1992ற்கு பிறகு உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எஃப். மற்றும் சி.ஐ.எஸ்.எஃப்-இல் 15% மற்றும் பி.எஸ்.எஃப், எஸ்.எஸ்.பி, ஐ.டி.பி.எஃப் ஆகியவற்றில் 5% என பெண்களுக்கு ஆயுதக் காவல் படைகளில் இடஒதுக்கீடு அறிவித்த பிறகு பெண்கள் போர்படை அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர்.  கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மத்திய ரிசர்வ்- மற்றும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் (CISF) படைகளில்  பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்திய – திபெத் எல்லைக் காவல் படை (ITBF) மற்றும் சசாஷ்திர சீமா பல் (ITBF) ஆகிய படைகளில் 14 முதல் 15 % வரை இடஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.பி.எஃபின் கீழ்  மொத்தம் 6 மஹேலா படைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 3 சி.ஆர்.பி.எஃப் படைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனி பாதுகாப்புக் கவசம்:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கு வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புக் கவசங்களையே பெண்களும் பயன்படுத்திவந்தனர். இனி பெண்களுக்கு அந்தக் கவலை இல்லை. உடலில் கச்சிதமாக பொருந்தும் வகையில் தற்போது புதிதாக பாதுகாப்புக் கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் படையில் பணியாற்றும் பெண்களுக்கு பெரும் நிம்மதியை வழங்கியுள்ளது மட்டுமல்லாமல் அவர்கள் பல்வேறு வகைகளில் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.