மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 700 பயணிகளுடன் நடுவழியில் சிக்கிய மகாலஷ்மி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து இதுவரை 117 பேரை மீட்டுள்ளனர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சாலைகள் மற்றும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் மழை வெள்ளம் அதிகமாக சூழ்ந்துள்ள பத்லாபூர், வங்கனி பகுதியில் சிக்கியுள்ளது. இந்த ரயிலில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர்.

ஆகவே அவர்களை பத்திரமாக மீட்க ரயில்வே நிறுவனமும் மகாராஷ்டிர அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பயணிகளை மீட்க விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் உதவியை நாடியது மகாராஷ்டிர அரசு.

இதனைத் தொடர்ந்து 8 படகுகளுடன் ரயில் பயணிகளை மீட்க சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் இதுவரை குழந்தைகள் உட்பட 117 பேரை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

ரயிலில் இருக்கும் பயணிகள் யாரும் வெளியே இறங்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பயணிகளுக்குத் தேவையான பிஸ்கேட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அளிக்கவும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.