நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதி நடைபெற்று ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.

தபால் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதியன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதைதொடர்ந்து, 14ஆம் தேதி நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். மேலும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசானது, மாநில மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. இந்நிலையில் நாடுமுழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வானது செப்டம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும், தமிழகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.