தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 7) செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், வட மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நீலகிரி மற்றும் கோவையின் மலையோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் 40 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் மத்திய, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால், அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.