மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்.370 (MH 370) ரக விமானம் காணாமல்போய் 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த விமானத்தை பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
காணாமல் போன எம்.எச்.370
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்.370 ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 227 பயணிகளும், 12 விமான பணியாட்களும் என மொத்தம் 239 பேருடன் அதிகாலையில் புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற இரண்டு மணி நேரத்தில், தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் அப்போது கூறப்பட்டது. விமானத்தின் கறுப்பு பெட்டிகள் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று ஏற்கனவே கடல்சார் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தது.
விமானத்தின் நிலை என்ன?
அதைத் தொடர்ந்து மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 140 மில்லியன் டாலர் பொருட்செலவில் தேடுதல் பணிகளை மேற்கொண்டன. 2 ஆண்டுகளாக நீடித்த அந்தப் பணிகளில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. அதனால் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று பின்னர் கைவிடப்பட்டது. எனினும், கடந்த ஜூன் மாதம் எவ்வித முடிவுகளுமின்றி தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த விமானத்திற்கு என்ன நடந்தது? 239 பேரின் நிலை என்ன என்பது வரலாற்றில் மிகப்பெரிய தீர்க்கப்படாத புதிர்களில் ஒன்றாக இதுவரை தொடர்கின்றது.
விமானத்தில் பயணம் செய்த 239 பேர்களின் குடும்பத்தினரும் தங்களது உறவினரை காணாது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல் கடந்த ஐந்து வருடமாக தவித்து வருகின்றனர். ஒரு வேளை இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் எம்.எச்.370 விமானத்திற்கு என்ன நடந்தது என்ற மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும்.