சாமி ஆகாசத்தைப்பார்த்தபடி படுத்திருந்தது. வெடித்துக்கொண்டுவரும் சிரிப்பை அடக்கிக்கொள்வதுபோல ஒர் சிரிப்பு முகத்தில். ரோஜாக் கன்னங்கள் , மை தீட்டியமாதிரி கண்கள். அவனுடைய அம்மி அவனுக்கு தினமும் சுர்மா இடுவதுபோல சாமிக்கு அதனுடைய அம்மா இடுவாரோ என்னமோ. அத்தனை அழகான சாமி , கணேசா ,குப்பையும் கூளமும் நீரும் கொண்ட மேட்டில் கிடந்தது. அதை இழுத்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று இம்ரானுக்குப் பரபரத்தது. கண்ணில் நீர் கோர்த்தது. அதைப் புறங்கையால் துடைத்துக்கொண்டான் இரண்டு நாள் முன்பு அவனும் அவனது நண்பர்களும் கையில் அதைத் தூக்கிக்கொண்டு ‘கணேசா பந்தா , காய் கடுபு திந்தா’ கணேசன் வந்தான் , தேங்காயும் கொழுக்கட்டையும் தின்றான் என்று பாடிக்கொண்டு தெருத்தெருவாய்ப் போனார்கள். வீடு வீடாகச் சென்று அங்குக் கிடைத்த கோசம்ப்ரியும் பூராஸக்ரேயும் [பொடித்த சக்கரையும் பொட்டுக்கடலையும் தேங்காய் கொப்பரைத்தூளும் கலந்த தின்பண்டம்] சுண்டலும் மொசுக்கினார்கள். தொன்னையில் இருந்த கோசம்ப்ரி நீர் வடிவதைக்கண்டு கணேசனைக் கீழே இறக்கி தின்று முடித்து வாயைச் சட்டையில் துடைத்து மீண்டும் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்- கணேசா பந்தா, காய் கடுபு திந்தா… பழனி என்று ஒரு தமிழ்ப் பையன் இருந்தான் அவனுடைய தெருவில். அவனும் சேர்ந்து கொள்வான். கன்னடத்தில் கணேசா பந்தா என்று சொன்னாலும் அவன் பிள்ளையார் என்று வீட்டில் சொல்வானாம். சாமிக்கு எல்லா பாஷையும் வரும் என்று கன்னடம் பேசும் சுப்பண்ணா சொன்னான். எல்லாருக்கும் கணேசா சாமி. தெலுங்கு பேசும் ரங்காவுக்கும் . இம்ரானுக்கும். எப்பவும் சிரிக்கும் சாமி. அவர்களைப்போல சாப்பாட்டுப்ப்ரியன். …