2020-2021 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 3.5 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாக கிரிசில் தரக்குறியீட்டு நிறுவனம் கணித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக உலகின் பல்வேறு தறக்குறியீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நடப்பு நிதியாண்டின் நலத்திட்டங்களை செயல்படுத்த குறைந்தபட்சம் ₹ 3.5 முதல் 5 லட்சம் கோடி வரை நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஆட்டோமொபைல் ஜவுளி மென்பொருள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கடந்த மார்ச் மாத தரவுகளின் படி ஆட்டோமொபைல் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 44 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. ஏற்றுமதி 35 சதவீதம் சரிந்துள்ளதால் குறிப்பாக கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் உள்ள முறைசாரா தொழிலாளர்களின் வருமானம் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதன் காரணமாக தினசரி கூலி தொழிலாளர்கள்  கடந்த சில நாட்களாக அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கார்ப்பரேட் பணியாளர்களின் நிலைமையோ இன்னும் மோசமாகி வருகிறது. கிரிசில் நிறுவன ஆய்வின் படி நாடு முழுவதும் உள்ள சுமார் 40 ஆயிரம் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளமாக மட்டும் 12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக போதிய வருமானம் இன்றி செலவினங்கள் அதிகரித்துள்ளதால் அடுத்து வரும் சில மாதங்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பயணப்படிகளை குறைக்க தீர்மானித்துள்ளன.

இதனால் எதிர்வரும் காலண்டர் ஆண்டில் நுகர்வோர் சேவைகளான விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஆட்டோமொபைல்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருந்து அல்லாத ஏற்றுமதி வர்த்தகம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள போகின்றன.  தகவல் தொழில்நுட்பச் செலவுகள் குறித்த உலகளாவிய வரவு செலவுத் திட்டங்கள் வீழ்ச்சியடைவதால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி முடக்கப்படும் அபாயத்தில் உள்ளது.

வங்கித் துறையை கணக்கிடும் போது சிறு கடன்கள் உட்பட வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி அதிகரித்து  வராக்கடன் மற்றும் ஊழியர்களுக்கான செலவுகள் அதிகரிக்க உள்ளதால் வங்கிகள் மற்றும் NBFC கள் வணிக வருவாய் பாதிக்க வாய்ப்புள்ளது.  வருகின்ற மார்ச் 2021ல் வங்கிகளின் வராக்கடன் விகிதம் 11 முதல் 11.5 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கிறது.ஏற்கனவே கடந்த 2020 மார்ச் நிலவரப்படி இந்தியாவில் உள்ள வங்கிகளின் வராக்கடன் 9.6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.