தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு  நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு முழுவதுமாக 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதே நேரத்தில் கொரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார மந்தத்தால் இந்திய மாநிலங்கள் அனுபவித்து வரும் நிதி நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மாதிரி கடந்து செல்கிறது மத்திய அரசு.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,33,530.30 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்கு ரூ.11,127.30 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வெறும் 10% மட்டுமே வருவாயாக கிடைத்துள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் மாதத்தில் வரவேண்டிய வருவாயில் 90% அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது தமிழக அரசு.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் 1000 கோடி மற்றும் 15வது திட்டக் குழுவின் நிதி 16 ஆயிரம் ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி உதவி கோரியிருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் கொரோனா நிவாரண நிதியாக வட மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.510 கோடியும் மகாராஷ்ட்ராவுக்கு ரூ.1,611 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 10 வரை 361 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.966 கோடியும் கொரோனா தாக்குதல் பட்டியலில் குறைந்த பாதிப்பு விகிதத்தில் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு முறையே ₹910 கோடி, ₹708 கோடி என அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் தென்னிந்திய மாநிலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உணவு தானிய கொள்முதலுக்காக ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக  தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்கும்படி மத்திய அரசை கோரியிருந்த நிலையில்! தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்றே அறிய முடிகிறது.  கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி  நிலுவைத் தொகை ரூ.6,420 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்து விட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதி இது தான் என்று கூறுகிறது மத்திய அரசு.! ஏற்கனவே கஜா புயலுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி  இதுவரை வந்து சேரவில்லை என்பது கொசுறு செய்தி.

அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகைத் திட்டம் உள்பட கடந்த பிப்ரவரி மாதக் கணக்கின்படி தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய மானிய நிதி மொத்தமா ரூ.12 ஆயிரத்து 263 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, பேரிடர் கால நிதி ,மருத்துவ சேவைகளுக்கான நிதி என இதுவரை எதையும் வழங்காத காரணமாக

தற்போதைய நிலைமையை சமாளிக்க தமிழக அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.8,000 கோடிக்கு பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது, மேலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதன் உண்மையான காரணம் இதுதான். தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட நிதிகளை வைத்து கொரோனா பாதுகாப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழக அரசின்  கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினை ஈடுபட்ட தமிழக ஒட்டுமொத்தமாக மேலும் 1 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக்கு குழு.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்யும் தேதியை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வளர்ந்துள்ள தகவலை அடுத்து. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு முடங்கியுள்ளது. கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிதியைக் கூட மத்திய அரசு வழங்காத காரணமாகவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணி சுணக்கமடைந்து இன்று சென்னை நகரமே சுடுகாடாக மாறி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கிற்கு மாநில அரசு தலைசாய்த்து நிற்பதைக் கண்டு திகைத்து நின்றனர் இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள்.

ஏற்கனவே 2020 – 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடியாக  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு வாங்கியுள்ள கடன் தொகைக்கு ஆண்டுகளுக்கு 37 ஆயிரத்து 120 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே செலுத்துவதால், தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 59 ஆயிரத்து 346 கோடி என்று கணிக்கப்பட்டிருந்த வேளையில்.

தற்போதைய ஊரடங்கு காலத்தில் அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம், ஒரே நாடு, ஒரே வரி என்று கூறிய மத்திய அரசு தற்போது தென்மாநிலங்களுக்கு வஞ்சனை செய்து வருகிறது. அதை நம்பி கையெழுத்து போட்டதன் விளைவு, இப்போது ஏதாவது பார்த்து போட்டு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன மாநில அரசுகள். ஏற்கனவே ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி உள்ளதால் தேசிய அளவில் வேலையிழப்பை சந்தித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி வேலையிழப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 43.5 சதவீதம் உயர்ந்து தற்போது 49.8 சதவீதமாக உள்ளது. ஜார்கண்ட், பீகார் மாநிலங்களை விட தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வளவு நெருக்கடி சூழலிலும் டிசம்பர் – ஜனவரி மாதத்துக்கான பங்கீடு தமிழக அரசுக்கு 2,400 கோடி கடந்த பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பாக்கியை மத்திய அரசு கடந்த 4 மாதங்களாக தராமல் உள்ளது.இந்த தொகையை தரவில்லை என்றால் மாநில அரசு எப்படி இந்த பிரச்னையை சமாளிக்கும்?

கொரோனாவுக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் இருக்கும் குளறுபடிகளைப்போலவே, நிதி திரட்டுவதிலும் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.

தற்போது நம் நாடு மிகப்பெரிய இக்கட்டில் சிக்கியுள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றாலும், கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் மத்திய அரசு செவிகொடுக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கே சவால் மிகுந்ததாக உள்ள இந்த சூழலில் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்  ரகுராம் ராஜன், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அளிக்கும் யோசனைகளையும் கேட்டு, அவற்றில் சிறந்த யோசனைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொருளாதார அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

அண்டை நாடுகளுடனான உறவு எவ்வளவு முக்கியமோ அதேபோல, அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுவாக நடந்துகொண்டு நல்லுறவைப் பேணுவதும் மத்திய அரசின் கடமை.

நேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டு வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று உரிமைக்குரல் எழுப்பியது அன்றைய அண்ணா தலைமையிலான திமுக. ஆனால் இன்று அவரின் பெயரில் செயல்படும் மாநில ஆளும் கட்சி மத்திய அரசின் பாரா முகத்தை எதிர்க்கவும் முடியாமலும் மாநில வருவாயை கேட்கவும் திறனின்றி நட்டாற்றில் தவித்து வருகிறது.

மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒடிஸா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என 8 மாநிலங்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் 50 சதவிகித வருவாயைக் கொடுக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த கடந்த 2013 – 14 முதல் 2018 – 19 வரையிலான 6 நிதி ஆண்டுகளில் மட்டும் 3.39 லட்சம் கோடி ரூபாயைச் செலுத்தி உள்ளது . அதிக மக்கள் தொகை கொண்ட உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கூட குறைவாகவே நேரடி வரி வருவாயைக் கொடுத்துள்ள இந்த வேளையில். தென்னிந்தியாவின் 8 மாநிலங்கள் சேர்ந்து 62 சதவிகித நேரடி வரி வருவாய் கொடுக்கின்றன, மீதமுள்ள எல்லா மாநிலங்களையும் சேர்த்து 38 சதவிகிதம் எனும் போதே தென் இந்தியா மூலம் மத்திய அரசுக்கு எவ்வளவு நிதி கிடைக்கிறது என்பதைக் காண முடிகிறது. இவ்வளவு நிதி மற்றும் வரிகள் கொடுத்தும் ஆபத்து காலங்களில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கூட கொடுக்காமல் தமிழகத்தை தனித்து விட்டுள்ளது மத்திய அரசு.