மனவெளி திறந்து-9 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்

கேள்வி: உங்கள் பணிக்கு வாழ்த்துகள். எனக்கு ஒரு சந்தேகம். நான் இணையத்தில் சில தளங்களில் சில காணொளிகளைக் காண்கிறோம். அவற்றில் சில, நாம் சிரிப்பதற்காக இணையத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றில் பெரும்பாலானவை சில மனிதர்கள் தவறான செயல்களைச் செய்யும்பொது (funny) நமக்கு நகைப்பு வருவது ஏன்? உதாரணம் ஒரு மனிதன் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு கீழே விழும்பொழுது அவனுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் அல்லது வலி ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க நாம் அந்தக் காணொளி கண்டு சிரிப்பது ஏன்? அவற்றை நகைச்சுவை என்று ஏன் பதிவிட வேண்டும்?

சீனிவாசன், பெங்களூரு

 

பதில்: அவல நகைச்சுவை (black humor) என்பது காலம்காலமாக இருக்கும் நகைச்சுவையின் ஒரு வகை. சார்லி சாப்ளின் முதல் நமது வடிவேலுவரை இந்தச் சுய பரிகாசத்தை நகைச்சுவையாக மாற்றிய பல முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள். “ஒரு தனி மனிதனின் அபத்தமான சூழ்நிலை எப்படி மற்றவர்களுக்கு வேடிக்கையானதாக மாறுகிறது?” என்ற நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்கானப் பதிலை பிளாட்டோ, அரிஸ்டாட்டில் உட்பட உலகின் மிக மூத்த தத்துவஞானிகள் அனைவரும் தேடியிருக்கிறார்கள். இதற்கான உளவியல் தத்துவங்கள் இங்கு ஏராளமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவரின் துன்பத்தை நகைச்சுவைக்கு மூலதானமாக மாற்றுவது ஒரு உளவியல் முரண்.

பிளாட்டோ “ஒவ்வொரு மனிதருக்குள்ளாகவும் ஒரு மேட்டிமை மனப்பான்மை இருக்கிறது. அதாவது நாம் மற்றவர்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம், மற்றவர்கள் ஒரு அவலத்தில் சிக்கும்போது நாம் இதுபோன்ற அவலங்களில் சிக்க மாட்டோம் என்ற ஒரு தற்காலிக ஆசுவாசமே சந்தோசமாக, நகைச்சுவையாக வெளிப்படுகிறது” என்கிறார்.

ஃபிராய்ட் இதற்கு வேறொரு தத்துவத்தை முன்வைக்கிறார் “ஒரு வினோதமான சூழல் நமக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது, அந்தச் சூழலின் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக இந்தப் பதட்டம் நமக்குள் அதிகரிக்கிறது, ஒரு கட்டத்தில் அந்தச் சூழல் ஆபத்தற்றதாக அதே நேரத்தில் எதிர்பாராதவிதமாக முடியும்போது அந்தப் பதட்டம் திடீரென குறைந்த நமக்குள் ஒரு ஆசுவாசம் உருவாகிறது அதுதான் நகைச்சுவையாக வெளிப்படுகிறது” என்கிறார். எதிரிகள் கூட்டத்தில் வடிவேலு சிக்கும்போது ஒரு பதட்டம் நமக்குள் உருவாகிறது, அந்தச் சூழல் இன்னும் கடினமானதாக மாற, மாற நமக்குள் பதட்டம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் “சங்கமே அபராதத்தில்தான் ஓடுது” என்று அவர் அந்தச் சூழலை சட்டென இலகுவாக மாற்றும்போது ஏற்படும் ஆசுவாசமே அந்த மொத்த சூழலையும் நகைச்சுவையானதாக மாற்றுகிறது.

ஒரு சூழலை பொறுத்து நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பிற்கும் அதன் உண்மைத்தன்மைக்கும் உள்ள முரணே நகைச்சுவையாகிறது என்பதும் ஒரு தத்துவம். மிதிவண்டி ஓட்டிக்கொண்டு செல்பவர் கீழே விழும்போதெல்லாம் அது நகைச்சுவயானதாக மாறுவது இல்லை. அந்தச் சூழலை பொறுத்த நமது எதிர்பார்ப்பு, அதைப் பொறுத்த நமது பார்வை, அதை ஓட்டுபவரைப் பற்றியான நமது எண்ணம் என இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. நகைச்சுவையை அப்படி ஒற்றைத்தன்மையில் வரையறுக்க முடியாது. ஃபிராய்ட் நகைச்சுவையை மட்டுமே இருக்கும் மற்ற உணர்வுகளைவிட ‘மேம்பட்ட உணர்வு’ என்கிறார்.

ஒரு இறுக்கமான சூழலை இலகுவாக்கும் ஒரு வழியே நகைச்சுவை எனவும் சொல்கிறார். இந்த அவல நகைச்சுவை தொடர்பாக சமீபத்திய விளக்கங்களின்படி, ஒரு சூழல் எப்படி வேடிக்கையானதாக மாறுகிறது என்றால் அந்தச் சூழல் ஏதேனும் ஒரு விதி மீறலைச் செய்ய வேண்டும், (உதாரணத்திற்கு டாக்டர்களின் மோசமான வைத்தியம் தொடர்பான நகைச்சுவைகள்) அந்தச் சூழல் ஆபத்தற்றதாக இருக்க வேண்டும். மேல் சொன்ன இரண்டும் ஒரே நேரத்தில் ஒருவரால் உணரப்படும்போது அந்தச் சூழல் நகைச்சுவைக்குரிய சூழலாக மாறுகிறது. மனிதன் என்பவன் பல அபத்தங்களால் நிறைந்தவன், நாம் புனிதமானதாய் கருதும் பல விஷயங்கள் அபத்தமானவை. ஒரு தொடர் உளவியல் நெருக்கடியில் இருந்து ஒரு விடுதலையை, ஒரு ஆசுவாசத்தை இவை போன்ற அபத்தங்களே நமக்குக் கொடுக்கின்றன. அதனல் அந்தச் சூழலை வேடிக்கையானதாக மாற்றுவது குறித்து நாம் குற்றவுணர்ச்சி கொள்ளத் தேவையில்லை ஒரு கடுமையான சூழலைகூட நமது மனம் நகைச்சுவை மூலம் இலகுவானதாக மாற்றுவிடுகிறது என நினைத்து நாம் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

முந்தையை கேள்வி -பதில்: https://bit.ly/2JIvppj

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
வடிவேலு, மேம்பட்ட உணர்வு, black humor, அவல நகைச்சுவை, சார்லி சாப்ளின், இறுக்கமான சூழல், வினோதமான சூழல்