இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 போட்டியை அடுத்து விமர்சனத்துக்குள்ளான தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிலென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 15 வது ஓவர் வரை நன்றாக ஆடிய இந்திய அணியால் கடைசி 5 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இறுதி வரை விளையாடிய தோனி 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே போல் நிதானமாக ஆடியதால் தோனி விமர்சனத்துக்கு உள்ளானார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது. இத்தகைய நிலையில் மீண்டும் அவர் விமர்சனங்கள் தொடர்கின்றன. அவர் டி20 போட்டியிலிருந்தும் விலக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான கிலென் மாக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,” விக்கெட் வீழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சீரான ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகவும் முக்கியமானது. ஒருபக்கம், விக்கெட் சரிந்து கொண்டிருக்கிறபோது ரன் எடுப்பது சிரமமான ஒன்று. தோனி ஒரு உலகத்தரமான பினிஷர். அவர் சரியான ஷாட்அடிப்பதற்காக மிகவும் முயற்சித்தார். அவர் இடத்திலிருந்து முயற்சித்தது சரியே. ஆனால் அவர் இறுதி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார், அந்த இடத்தில் அது அடிப்பது மிகவும் கடினமான ஒன்று,”என்றார்.