நான் பார்த்தவரை psychiatric treatment எடுத்துக்கொள்பவர்களுக்கு எபிலெப்சி, வாய் கோணிக்கொள்வது, கை கால்கள் இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. என்னுடைய கேள்வி: மனநோய் என்பது நரம்பியல் சம்பந்தப்பட்டதா?
சம்பத்குமார், மதுரை
பதில்: மனம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் பெரும்பாலான குழப்பங்களுக்கு காரணம் மனதிற்கு என்று மற்ற உறுப்புகளைப் போல ஒரு உருவம் இல்லாததே. இதயத்தைபோல, நுரையீரலைப் போல, மூளையைப் போல மனதிற்கும் ஒரு உருவம் என்று இருந்தால் மனம் தொடர்பாக இங்கு இருக்கும் அத்தனை கட்டுக்கதைகளும் பொய்த்துப் போகும். இந்த உருவமற்ற நிலையினால்தான் அதற்கான வைத்தியத்தையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் கேட்டது போல மனநோய்கள் ஒரு நரம்பியல் பிரச்சினைகளாக புரிந்துகொள்ளப்படுகின்றன; மனநோய்கள் என்றாலே அதற்கு கவுன்சிலிங் என சொல்லக்கூடிய ஆலோசனைகள்தான் தீர்வு, அதற்கென்று எந்த மருந்து மாத்திரைகளும் கிடையாது என்ற எண்ணத்திற்கு கூட மனதின் இந்த உருவமற்ற நிலைதான் காரணம். “மாத்திரைகள் போடுகிறோம் டாக்டர் அது எங்க போய் வேலை செய்யும்?” என்பது நான் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி. பொதுபுத்தியில் மனநோய் என்பது ‘நரம்பு தளர்ச்சி’ அப்படி என்றால் நீங்கள் சொல்வதுபோல இது ஒரு நரம்பியல் பிரச்சினைகளாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது
மனம் என்பது ஒரு செயல் அலகு. அதாவது மூளை என்ற ஒரு அமைப்பு செயல்படுவதற்கு மனம் என்பது அவசியம். ஒரு கணிப்பொறியில் இருக்கும் மென்பொருளைப் போல மனம் நமது மூளையில் பதியப்பட்டிருக்கிறது. எப்படி இம்மென்பொருளை நம்மால் பார்க்க முடியாதோ, அதேபோல மனம் என்ற மென்பொருளையும் நம்மால் பார்க்க முடியாது. ஒரு கணினி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதற்கு அதன் ஹார்ட்வேரிலும் பிரச்சனை இருக்கலாம், சாஃப்ட்வேர் என சொல்லக்கூடிய மென்பொருளிலும் பிரச்சனை இருக்கலாம். அதேபோலதான் மூளையின் செயலில் ஏதாவது கோளாறு வந்தால் மூளை என்ற ஹார்டுவேரிலும் பிரச்சனை இருக்கலாம், மனம் என்ற சாப்ட்வேரையும் பிரச்சினை இருக்கலாம் இரண்டு பிரச்சனைகளும் சரி செய்யக்கூடியது அப்போது மனம் என்னும் சாஃப்ட்வேரிலும் பிரச்சினை இருக்கலாம். மனம் என்னும் மென்பொருளில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கு நாம் சில மருந்துகள் கொடுக்கும் பொழுது அது மூளை என்ற ஹார்ட்வேரின் வழியாகவே கொடுக்க முடியும், அப்போது அந்த மருந்தினால் வரக்கூடிய விளைவுகள் மூளை தொடர்பான சில நரம்பியல் பிரச்சினைகளாகத்தான் இருக்கும். ஆனால் அவை மிக சாதாரணமானவை. மனம் நோய்களுக்காக நாம் வைத்தியத்தை செய்யும் போது, நம்முடைய பிரதானமான நோக்கம் மனநோயை சரி செய்வது மட்டுமே. ஏனென்றால் அதுதான் மோசமானது அதை சரி செய்வதன் வழியாகவே ஒரு தரமான வாழ்க்கையை நாம் அந்த நபருக்கு உறுதிசெய்ய முடியும். இந்த வைத்தியம் தொடர்பாக ஏற்படும் பக்க விளைவுகள் அனைத்தும் மிக சாதாரணமாக சரி செய்யக் கூடியவை; மேலும் வைத்தியத்தில் மாற்றம் செய்யும்போது இந்த பக்கவிளைவுகளும் முழுமையாக குணமடைந்துவிடும். ஆனால் அதை பிரதானமாக கருதி மன நோயை நீடிக்க விடுவதுதான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
நீங்கள் சொல்வதுபோல வாய் கோணி கொள்வது அல்லது வலிப்பு நோய் போன்று வருவது எல்லாம் பொதுவானது அல்ல. மிக மிக அரிதான பக்க விளைவுகள். நம் உடல் நோய்களுக்கு வைத்தியம் செய்யும் போதுகூட இது போன்ற பக்க விளைவுகள் வரலாம், அதே அளவுக்கு அரிதானதுதான் மனநோய் வைத்தியங்களில் விளைவாக உருவாகும் இந்த நரம்பியல் பிரச்சனைகளும். ஏன் நரம்பியல் பக்கவிளைவுகளாகவே வருகின்றன என்றால், மனம் நோய்களுக்காக நாம் கொடுக்கும் மருந்து மாத்திரைகளும் மூளையின் வழியாகவே கொடுக்கிறோம், ஏனென்றால் மனம் என்பது மூளையின் ஒரு பகுதி. உதாரணத்திற்கு குடல் இறக்கம் நோய்க்காக நீங்கள் அறுவை சிகிச்சை செய்தால் குடல் தொடர்பான பிரச்சனைகள் தான் வரும் அதேபோல மூளையில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யுபோது மூளை தொடர்பான பக்க விளைவுகளே வரும். அந்தப் பக்கவிளைவுகள் தீர்க்கக்கூடியதே அதற்காக மனநோய்க்குரிய வைத்தியத்தை புறக்கணிப்பதே மோசமானது.
முந்தையை கேள்வி -பதில்:https://bit.ly/2VwPOzS
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com