செயலாகும் சொற்கள் – 5
காட்சி-1
அந்த அறை அமானுஷ்ய தன்மையோடும் பச்சிலைகளின் வாசனையோடும் இருந்தது. எழுபது வயது மதிக்கத் தக்க நந்தீச சித்தர். அவர் பூசாரியா வைத்தியரா என பிரித்துப் பார்க்க முடியாதபடி இருந்தார். தாடி கொஞ்சம் சடைப் பிடித்த தலைமுடி, இடுப்பில் சின்ன துண்டு மட்டுமே . நெற்றில் திருநீறு கூடவே ஒரு கருப்பு நாய் அவரை உரசியப்படியே நிக்கும். கூப்பிடும் தூரத்தில் குடிசையோ ஆட்களோ இல்லாத தனிமை கவ்விய குடிசை. எந்த விளம்பமும் இல்லை.
இரவு காரில் பயணம் செய்து கதிரேசன் தன் உற்ற நண்பன் மணியுடன் விடியற்காலை 4.30 மணிக்கெல்லாம் இந்த வைத்தியம் பார்க்கும் குடிசைக்கு வந்தாயிற்று. இவர் அவ்வளவு சீக்கிரம் பார்க்க அனுமதி தரமாட்டார். சிவ உத்தரவு கிடைத்தால் மட்டுமே ”வாருங்கள் ஈசன் அழைத்து இருக்கான் ”என கூப்பிடுவார். ஒரு மாதத்தில் ஆறு முறை கெஞ்சி கூத்தாடி அந்த அபூர்வ வைத்தியத்தியரிடம் அனுமதி வாங்கி இதோ எப்படியோ வந்தாயிற்று.
கதிரேசனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. இன்னும் சில தலைமுறைக்கு அது வரும்.. ஆனால் பனை போல் நிமிர்ந்த அப்பா இப்படி திடீரென வேர் அறுந்த பசலைக்கொடி போல் துவண்டு நோயில் வீழ்வார் என யாருக்குத் தெரியும்? சென்னையில் பிரபல டாக்டர் ருத்ரன் சொன்னதை இன்னும் நம்ப முடியவில்லை. ” உங்க அப்பாவின் மூளை செல்கள் திடீரென சுருங்க ஆரம்பித்து இருக்கு. உடனே உயிருக்கு ஆபத்தில்லை. கொஞ்ச கொஞ்சமா உங்க அப்பா செயல்பாடு மாறி குறைஞ்சி ஒரு குழந்தை போல் படுத்த படுக்கையா மாறிடுவார்.ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமோ அதான் அப்போ தெரியும். இதுக்கு மருந்து இங்கு சரியா இல்லே..வெளிநாட்டிலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்யலாம்… அங்கிருந்து டாக்டர் ஒருவரையும் வரவழைக்கலாம்…அல்லது இவரையும் அழைத்தும் போகலாம்” என்று சொல்லி இருந்தார்
நல்லவேளையாக மணி தான் இப்படி ஒரு சித்தர் இருப்பதை சொல்லி போனில் அவரிடம் பேச வைத்தான். அவர் பேசுவதுக்கு கூட நேரம் காலம் ஜாதக குறிப்பு, கூடவே ஈசன் உத்தரவும் இருந்தால் மட்டுமே பேசுவாராம். அவர் செய்த ஐம்பது வருட ஆராய்ச்சியில் அரிய மூலிகைகள் அவரிடம் இருப்பது மணி கதைகதையா சொல்லி இருக்கான். மணி ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்ட்டர். ஆன்மிக கட்டுரை எழுத சதுரகிரி மலைக்கு போன போது இந்த சித்தர் தொடர்பு கிடைத்து என்று சொல்லி இருக்கான்.
நந்தீச சித்தர் அவர்கள் முன் வந்து அமர்ந்தார். கதிரேசனைப் பார்த்து ” உன் அப்பாவுக்கு பூநீர் சிகிச்சை தான் தரணும்.யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மரத்திலிருந்து தான் பூநீர் எடுக்கணும். தியானம் செய்து சிவன் அருளால் மட்டுமே இரவில் தெரியும் .அந்த மரத்திலிருந்து தான் ஒவ்வொரு இரவும் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கணும். அகத்தியர் கூட
”புதிய மரம் ஒன்றுக் கண்டேன் பூநீரப்பா ,
பூக்காமல் கதிர் வாங்கும் பதி கண்டேன்
காய் காணேன் கனி காணேன்
இலை கண்டேன் பாங்கான கொட்டியது தானும் கண்டேன்”
இப்படி பாடிய மரத்திலிருந்து தான் உங்க அப்பாவுக்கு மருந்து எடுத்து தரப்போறேன். நான் ஒரு ஒரு பெரிய சிவ சித்த வைத்திய சாலையை ஈசன் கோயிலோடு சேர்த்து கட்டும் திட்டமிருப்பதால் அந்தப் புண்ணிய காரியத்துக்கு தான் பத்து லட்சம் கேட்டேன். பணம் மருத்துக்கு அல்ல. நல்ல காரியத்துக்கு உன் அப்பாவின் நோய் ஒரு கருவி அவ்வளவு தான் “ என்றார்.
காட்சி-2
”மேடம்,அப்படியே விட்டு இருந்தா கூட கொஞ்ச வருஷம் என் அப்பா உயிரோடுஎங்கக்கூட இருந்திருப்பாரு இல்ல..வெளிநாட்டுக்கு கொண்டுபோயாவது ட்ரை பண்ணி இருப்பேன். அகத்தியர் சித்தர் பாட்டு பாடி, பச்சிலைன்னு சொல்லி கொடுத்த அந்த மருந்து பலிக்கலைன்னாக்கூட பரவாயில்லை..அந்த ஆள் என்னை ஏமாத்துனதை தான் தாங்க முடியல.”என்றார் அப்பா மீது அதீத அன்புக்கொண்ட கதிரேசன்.
”மேடம் இப்பவும் சொல்றேன்..பணம் ஏமாந்தது முக்கியமில்ல நான் நம்புற மதிக்கிற மதத்தை சித்தவைத்தியத்தை காட்டி அதுக்கு களங்கம் வர்ரா மாதிரி நடந்துக்கிட்ட அந்த நாடக சித்தனை உள்ளே வைக்கணும் அதான் முக்கியம்.’’ என்றார் கதிரேசன். நான் இந்த கேஸை கண்டுபிடிக்க ஒத்துக்கொண்டேன்.
காட்சி-3
கதிரேசனிடம் அந்த போலி சித்தர் பயன் படுத்திய போன் எண் வாங்கி , அந்த எண் மூலம் யார் யார் எல்லாம் பேசினார்கள் என்ற தகவலை பெற முயன்றேன். ஆனால் இப்போது அந்த எண் பயன் படுத்தப்படுவது இல்லை ..எனவே கண்டுபிடிப்பதில் கொஞ்சம் சிக்கல். முதலில் நானும் எங்கள் குழுவும்சதுரகிரிஅருகே உள்ள அந்தக் கிராமத்துக்கு சென்று அந்தக் குடிசை இருந்த பகுதியில் போய்ப் பார்த்தோம், அவர்கள் சொன்ன பகுதிக்கு போனோம். அது பச்சை பசேலென வெட்டவெளி. எந்த குடிசையும் காணோம். சில வாரம் தான் என்றாலும் திடீரென ஒரு குடிசை போட முடியுமா? அந்த கிராம பெரியவர்கள் எப்படி சட்டுன்னு அனுமதிப்பாங்க.என்ன ஏது யார்ன்னு விசாரிப்பாங்க இல்ல. ஆக அந்த சின்ன கிராமத்தின் பெரியவங்களை சந்தித்தேன்.அதிதிப்பட்டி என்பது கிராமத்தின் பெயர். நல்ல பேர் தான் . அதிதி ன்னா எதிர்பாராத விருந்தாளினு அர்த்தம். ஊர் பெரியவர் ஞான வேல் ராஜா வை சந்தித்து விஷயத்தை சொன்னேன்.அவர் முகம் கவலையானது என்னம்மா இப்படி பண்றாங்க..எனக்கு எப்படிமா இவன் அசலா போலியான்னு தெரியும் தாடி வெச்சன்னையெல்லாம் நம்பிடுறோம்னு வருந்த்தப்பட்டார். அவரோட எண்ணும் வாங்கிட்டு கிளம்பினோம்.இன்னும் எதுவும் பிடிப்படல.
இப்போது வேறு ஒரு தொழில்நுட்பத்தை அணுக வேண்டியது தான்.
டிடெக்டிவ் ,துப்பறிதல் என்றால் துப்பாக்கி சண்டை ,எதிராளியோடு நேருக்கு நேர் மோதுவது, கார் ரேஸிங் இதெல்லாம் சினிமாவில் தான் நிஜத்தில் அப்படி இல்லை. மூளையும் தைரியமும் விவேகமும் தான் கருவிகள் . சரி போன் வேலை செய்யாவிட்டால் என்ன போனின் IMI எண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினோம்.ஒரு சில நாளில் அது சாத்யமானது .இப்போ அந்த IMI நெம்பரை பயன் படுத்தி அந்த போன் இப்போ எங்கே இருக்குன்னு கண்டுபிடிச்சோம். அட அது இப்போ யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சது ரெண்டு விஷயம்..அந்த போனை யாருக்காவது வித்து இருந்தா கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டம் ஆனா கண்டுபிடிக்க முடியாதுன்னு இல்ல..அந்த போனை சம்பந்தப்பட்ட நபரே வெச்சிருந்தா வேலை ஈஸி.
பத்து லட்சம் சுருட்டிய போலிசித்தர் பயன் படுத்திய போன் சமிக்ஞை இப்போ எழும்பூரில் இருப்பதாக காட்டியது . நானும் எங்கள் குழுவில் இருவரும் களத்தில் இறங்கினோம் இப்போ சென்னை நோக்கி பயணம். எங்க குழுவின் தொழில்நுட்ப கில்லாடி ஜான்சன் போன் பண்ணி ”மேடம் அந்த போன் IMI எண் இப்போ மாலையில் சென்னை கடற்கரையில் இருப்பதாக காட்டுது அது மூவ் வாகிட்டே இருக்கு மேடம் ”என்றார்..”சரி பாத்துக்கலாம்” என்று சொல்லி நான் இப்போ பூக்காரி வேஷத்துக்கு மாறினேன்.அது தான் சுலபமா சென்னையை சுற்ற ஏத்த வேஷம் . அடுத்த நாள் மீண்டும் காலை எழும்பூரில் பூக்காரியாய். இப்போ அந்த போன் எண்ணும் எழும்பூரில் தான் இருப்பதாக காட்டியது கிட்டத்தட்ட நெருங்கிட்டோம்.உடனே கதிரேசனையும் எழும்பூருக்கு வரவழைத்தோம்.
கதிரேசனிடம் கேஸ் கொடுத்த அடுத்த நாளே எந்த விஷயமும் உங்க நண்பருக்கு கூட தெரியக்கூடாது..உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் எல்லா டீலும்னு என்று சொல்லியிருந்தேன்.
ஆச்சரியம் போனை வைத்து நாங்க நெருங்கிய நபர் அந்த சித்தர் இல்லை. ஒருசாதாரண கிளி ஜோசியர் .சே என்ன இது எல்லாம் வேஸ்ட்டோ என்ற எண்ணம் சலிப்பாய் இருந்தது, கிளி ஜோசியரிடம் இருபது ரூபா கொடுத்து” மவராசா எப்போ என் கஷ்டம் தீரும் வெள்ளநிவாரண பணம் எப்போ கிடைக்கும்னு பாத்து சொல்லு’ ந்னு சொல்லிட்டு அவன் முகத்தையே பார்த்தேன் . கிராப் முடி,பொருத்தமான மீசை, கட்டம் போட்ட சட்டை ,மேல வெள்ள துண்டு ,வாய் நிரைய வெத்தலை,…ஆனால் ….எல்லாம் சரி கதிரேசன் சொன்ன மூக்கு கண் புருவத்துக்கு மேல ஒரு வெட்டுக்காயம் இதெல்லாம் அப்படியே போலி சித்தர் போலவே இருந்தது. ஒவ்வொரு செகண்டும் ஒரு யுகம் போல் கழிந்தது. அப்பாடா சரியாக என்னை நோக்கி கதிரேசன் வந்துக்கொண்டு இருந்ததை எதேச்சையாக பார்த்த ஜோசியர் சடாரென எழுந்ததும் ஓரத்தில் டீ குடித்தப்படி நின்று இருந்த எங்க டிடெக்டிவ் ஆட்கள் வலையில் மானை பிடிப்பது போல் கப்பென பிடிக்க போலி சித்தராக இருந்த ஜோசியர் வகையாக மாட்டினார்..
காட்சி-4
கண்டுபிடிக்க சொல்லி விசாரிக்க சொல்லி தகவலைக் கேட்டு வரும் கேஸ்களுக்கு அதை சமுக அக்கறையோடும் தொழில்ரீதியாகவும் கண்டுபிடிப்பது மட்டும் தான் எங்க வேலை . ஆக்ஷன் எடுப்பது , தண்டிப்பது விசாரிப்பது இதெல்லாம் காவல் துறையின் ஆக சிறந்த பணிகள். அட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் இப்போ கதிரேசன் ப்ரெண்ட் மணியும் போலிஸ் ஸ்டேஷனில் தான் இருக்கார். அவர் எதுக்கு அங்க? சொல்ரேன் இருங்க…
கதிரேசன் தன்னை ஏமாற்றி பத்து லட்சம் போலி சித்தரும் நண்பன் மணியும் சேர்ந்து திட்டமிட்டு அபகரித்ததாக காவல்துறையில் புகார் செய்ய அவர்களை கைது செய்து விசாரணையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த பணம் பறித்தலில் நண்பன் மணி தான் பிரதான மூளை. .கதிரேசனுக்கு பணம் ஒரு பொருட்டு அல்ல . அவன் அப்பாவும் மிக சிக்கலான நோயில்..இப்போது இதை சாக்காக வைத்து தனக்கு தெரிந்த ஒரு கிளி ஜோசியர் சிவாவை தேர்வு செய்து அவனுக்கு ஒரு லட்சமும் திடீர் குடிசை போட அனுமதி கொடுத்த கிராமபெரியவர்க்கு ஒரு லட்சமும் கொடுத்து விட்டு மீதி எட்டு லட்சத்தை தான் சுருட்டிக்கொள்ள நண்பன் மணி தீட்டிய கனகச்சிதம் நாடகம் தான் இது. இதில் அந்தக் கிராமப் பெரியவர்க்கு எதுவும் தெரியாது.
இதில் நண்பன் மணியின் தப்பான கணக்கு எது என்றால் இந்த பத்து லட்சத்துக்க்காக போலிஸ், டிடெக்டிவ் னு கதிரேசன் போக மாட்டார். அப்பாவே போயாச்ச்சு இப்போ எதுக்கு போலிஸ் கேஸு ந்னு குடும்ப மானம் மட்டும் அல்ல தான் ஏமாந்ததை வெளியே சொல்ல அசிங்கப்பட்டு விட்டுடுவார்ன்னு நெனைச்சுது தான்.
மணி கேட்டார்.”.எப்படி மேடம் என் ப்ரெண்டு தான் இந்த ஏமாத்து வேலைக்கு காரணம்னு கண்டுபிடிச்சீங்க.?” உங்களை விட அவர் தான் ரொம்ப கோவப்பட்டார் .ஒரு படத்தில ஆடு திருட்டு பஞ்சாயத்தை கலைக்க வடிவேலு ரொம்ப நேர்மையா குரல் கொடுப்பாரே அப்படி இருந்தது. அதை விட முக்கியம் போலி சித்தர் பயன் படுத்திய பழைய போனுக்கும் ஜோசியர் பயன்படுத்திய புது போனுக்கு வந்த நிறைய கால்ஸில் உங்க நண்பன் மணியோட எண் தான் இருந்தது அதுவும் அவர் போனில் இருந்து பண்ணல…வேற ஒரு நெம்பரிலிருந்து…நீங்க சொன்ன அடையாளத்தை வெச்சி சரியா நேரில் பார்த்து கணிக்க தான் அந்த ஜோசியக்காரர் கிட்ட நான் பூக்காரியா போய் ஜோசியம் பார்த்தேன். அப்போ தான் ஊர்ஜிதமாச்சு பூசாரிதான் போலி சித்தர்ன்னு.ஜோசியர் என்பதால் இடம் மாறிக்கிட்டே இருந்ததில் IMI எண்ணும் இடத்தை மாத்தி மாத்தி காட்டுச்சி..நீங்க சொன்னா மாதிரி செஞ்சிட்டீங்க ஒரு தவறு செஞ்சா அது தேவன் என்றாலும் விடமாட்டேன்ன்னு ”என்றேன்
அது சரிதான் மேடம் ஆனா அப்பாவை காப்பாத்தாம விட்டுட்டேனே..என்றார் அப்பாவுக்கு வந்தது இயற்கையான மரணம் தானே .கடவுளின் கடைசி பரிசான மரணத்தை யாராலும் டிடெக்டிவ் பண்ணமுடியாதே .அதை விட முக்கியம் யாரையும் 100% நம்பாதீங்க அப்படி நம்பிட்டா ஏமாத்தத்தை தாங்க முடியாது தங்கத்தில் தாமிரத்தை கலப்பது போல் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வும் இருக்கணும் என்றேன்.
(தொடரும்)