ஒரு பொருள் கவிதைகள் -4

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

# தேவதச்சன் 

O

சிட்டுக்குருவியைப் போலே . . .

# சுகுமாரன்

இருந்தேனே தவிர வாழவில்லை அவ்வீட்டில்; என்பதனால்
மாற்றத்தால் விசனமில்லை; ஆனாலும்
பொருட்கள் நீங்கிய காலி அறைகளுக்குள்
கீச்சிட்ட குரலால் கண்கள் கசிந்தேன்
கழிவுநீர்க் குழாயிடுக்கிலிருந்து
குருவிக் குடும்பம் விடை சொல்லி அனுப்பியது:
‘கூடு மாறுகிறீர்களாக்கும். கீச் கீச் கீச்
போய் வாருங்கள் கீச் கீச் கீச்’. 

வாழவிரும்பிக் குடிபுகுந்தேன் இவ்வீட்டில்; இருப்பினும்
மாற்றத்தால் நிறைவில்லை; எனினும்
பொருட்கள் திணித்த குறுகிய சுவர்களுக்குள்
கீச்சிட்ட குரலால் கண்கள் மலர்ந்தேன்
சன்னல் கம்பி மேல் வந்தமர்ந்து
குருவிக்குரல் விசாரித்தது:
‘புதிய கூடு வசதிதானே? கீச் கீச் கீச்
நலமாய் இருங்கள் கீச் கீச் கீச்’. 

இருந்த வீட்டில் வசிக்கும் குருவியா இது?

இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம்.
எதுவாயினும் எனக்கு
இந்தக் குருவி அந்தக் குருவியே.

o

சிட்டுக்குருவி

# க.நா.சு.

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்கு மேலே இருக்கும் ஓடாத விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா
என்று பார்க்கிறது. முடியவில்லை. விசிறி
நகருகிறதே தவிர அதன் சிறிய மூக்கில்
வர மறுக்கிறது. அசையாது உட்கார்ந்து
படித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும்
என் தலைமயிரைக் கொத்தி இழுக்கப்
பார்க்கிறது – ஊஹூம் வரவில்லை.
மேஜைமேல் கிழிந்து கிடக்கும்
சிகரெட்தாள் கிழிசலைத் திருட்டுத்தனமாகத்
தூக்கிக் கொண்டு பறக்கிறது.
மீண்டும் இரண்டு நிமிஷம் கழித்து வந்து
விசிறியை ஆட்டிப் பார்க்கிறது.
சீப்சீப் என்று கூவிக்கொண்டே
மூலையிலிருக்கும் விளக்குமாற்றிலிருந்து
ஒரு குச்சியை லாவகமாக எடுத்துப் போகிறது.
ஒவ்வொருதடவையும் விசிறியை ஆட்டிப் பார்த்து விட்டு
ஒரு கடலைத் தொலி, ஒரு காகிதத் துண்டு
ஒரு ஜிகினாத்தாள், ஒரு கடலைத் தொலி
இவற்றை எடுத்துப் போகிறது.

கவிதை எழுத உட்கார்ந்த நான்
எனக்கும் அந்த சிட்டுக் குருவிக்கும்
என்ன வித்தியாசம் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

o

என் புது வீட்டில்

# எம். யுவன்

குடியேறின மூணாம் மாசம்
தானும் வந்து சேர்ந்தது
அந்தக் குருவி.
தலைவாரப் போகும் போது
கண்ணாடியில் அலகு பார்த்து
கொத்திக் கொண்டிருக்கும்.
பாத்ரூமில் இருப்பதறியாது
கதவைத் திறந்தால்
வீரிட்டலறி விரட்டும்.
பால் தயிர் மிளகாய்ப் பொடி
பாயசம் புளி சகலமும்
ருசி பார்க்கும் முதல் ஆளாய்.
தரையில் கொட்டிப்
பொறுக்கும் குழந்தையுடன்
பிரியமாய் பொரியைப்
பகிர்ந்துண்ணும்.
நேற்று முதல் நாங்கள்
ஒரே இலையில்
சாப்பிட்டு வருகிறோம்.
அந்தக் குருவியின் வீட்டில்தான்
இப்போது குடியிருக்கிறேன்.

O

இன்று
என் பழைய புகைப்படம் பார்த்தேன்.
நடுக்கமும் பயமுமற்ற
இருப்பின் பத்திரத்தோடிருந்த
என் மழலை முகம்தான் அது.

எழில்மிகுந்த அப்புகைப்படத்தில்
அச்சாகியிருந்தது அப்பழுக்கற்ற
ஒரு சிட்டுக்குருவியின் குதூகலம்.

# பாலை நிலவன்

O

ஒரு குருவிகள்
# ப. தியாகு 

கண்ணாடியினுள்ளிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக…
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள்.

O

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வாசிப்பின் மீதான கவிதைகள்
  2. பூனை கவிதைகள்
  3. 'குழந்தை' கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  4. ‘வீடு’ - கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்
  5. ‘பறவை’ கவிதைகள்- செல்வராஜ் ஜெகதீசன்