ஒரு பொருள் கவிதைகள் 5 – தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன் 

 

வித்தியாசமான மியாவ்

 சுந்தர ராமசாமி

 

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று

நேற்று இறந்தது

சவ அடக்கத்துக்கு

நாங்கள் போயிருந்தோம்

என் நண்பனின் மனைவி

அழத் தொடங்கியபோது

என் மனைவியும் அழுதாள்

குழந்தைகள் அழுதன

சில வார்த்தைகள் பேசும்படி

என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்

நான் பேசத் தொடங்கினேன்:

‘இந்தப் பூனையின் மியாவ் மியாவ்

வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து

வித்தியாசமானது

மேலும்…

 

O

 

பூனை

சுகுமாரன்

 

மனிதர்கள் தவிர

மற்ற பிராணிகளுடன்

பழக்கமில்லை எனக்கு

 

எனினும்

உள்ளங்கைச் சூடு போல

மாறாத வெதுவெதுப்புள்ள

பூனைகளின் சகவாசம்

சமீப காலமாய்ப் பழக்கமாச்சு

 

மயிலிறகை அடைவைத்தப் பருவத்தில்

கால்குலுக்கக் கைநீட்டி

விரல் கிழித்தப் பூனையால்

‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்

 

இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்

வடுவாக மிஞ்சிய இப்போது

பூனைப்பயம் பொய்த்துப் போச்சு.

 

வீடு மாற்றியபோது புரிந்தது

நன்றியின் சொரூபம்

நாய்களல்ல

பூனைகள்

 

நாய்கள்

மனிதரைச் சேர்ந்தவை

சுதந்திரமற்றவை

 

எப்போதோ

சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை

இன்னும் உறிஞ்சியபடி

காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது

 

பூனைகள்

வீடுகளைச் சார்ந்தவை

சுதந்திரமானவை

 

நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு

பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்

 

உலர்ந்த துணியில் தெறித்த

சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்

பூனைகளுடன் இப்போது

பகையில்லை எனக்கு

 

உடல் சுத்தம்

சூழ்நிலைப் பராமரிப்பு

ரசனையுள்ள திருட்டு

காதற்காலக் கதறல்

பொது இடங்களில் நாசூக்கு – என்று

பூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல

 

எனினும்

என்னைக் கவரக்

காரணங்கள் இரண்டு

 

ஒன்று:

 

எனக்குத் தெரிந்த

இந்தக் கடவுளுக்கும்

வாகனமாய்ப் பூனை இல்லை

 

இரண்டு:

 

பூனை கண் மூடினால்

இருண்டுவிடும் உலகம்

 

நானும்

கண்மூடுகிறேன் ‘மியாவ்’.

 

o

 

சாபம்

வைதீஸ்வரன்

 

என்

காலடியில் ஒரு பூனை

கடவுளை வேண்டித்

தவமிருக்கிறது.

என் கைதவறி விழும்

இட்டிலிக்காக………….

அதன் தவத்தை உண்மையாக்க

நான் குட்டிக் கடவுளாகி

இட்டிலியைத் தவற விடுவேன்…

பலதடவை நான்

கோணங்கிக் கடவுளாகி

இட்டிலியைக் கை விடாமல்

கட்டை விரல் காட்டுவேன்

பொறுமை வறண்ட பூனையின்

அரை வெள்ளைக் கண்களில்

ஒரு நரகம் தெரியும்

விரல் முனையில் சிறிது

பல் முளைக்கும்!

நள்ளிரவில்

இருள் அறுக்கும் ஓலம்………..

பூனைக் குரவளைக்குள்

ஓரெலியின் இரத்தம்

பீச்சியடிக்கும்.

கனவுக்குள் நான் எலியாகி

இறந்த பின்னும்

விழித்துப் பதறிக் கொண்டிருப்பேன்

ஏனென்று தெரியாமல்!!

 

O

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

ரமேஷ் பிரேதன்

 

தவிட்டுக் குருவிகள்

ஜன்னலின் வழியே உள்நுழைந்து

சுழலும் மின் விசிறியில்

அடிபட்டுச் சாகின்றன

ஜன்னலை அடைக்க வேண்டும்

அல்லது விசிறியின் சுழற்சியை நிறுத்த வேண்டும்

எதையும் செய்யவில்லை

எனது பூனைக்கு உணவு வேண்டும்.

 

o

 

அருங்காட்சியகத்தில் பூனையுடன்

றியாஸ் குரானா

அருங்காட்சியகத்தில் பூனையுடன்

விளையாடிக்கொண்டிருந்தது எலி.

பூனையின் மீது இட்டுக்கட்டப்பட்டிருந்த

புராதனமான குற்றச்சாட்டு

கூண்டுக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தது.

 

 

O

 

பூனை

 இசை

பூனை ஒரு விலங்கு

அதற்கு தெரிந்திருக்கிறது

பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே

பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென

ஸ்பரிசிக்கும போது

நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென.

 

O

 

பூனைகள்

செல்வராஜ் ஜெகதீசன்

 

பூனைகளுக்கென்று பொதுவாய்

புகலிடங்கள் ஏதுமில்லை.

பூனைகள் பொதுவில் வாழும்.

 

பூனைகள் கூட்டமாய்  திரிதல்

பொதுவினில் காண்பதரிது.

பூனைகள் தனித்தும் வாழும்.

 

வசிக்குமிடம் பற்றியெதுவும்

வரையறைகள் பூனைகளுக்கில்லை.

 

தகிக்கும் சூழலில் தனித்து

தாழ்தள இடங்களில் நிற்கும்

கார்களுக்கிடையே வாழும்

 

பூனைகளுக்கென்று பொதுவாய்

புகலிடங்கள் ஏதுமில்லை.

 

நிலை குத்தும் பார்வை கொண்டு

நெருங்கும் வரை நின்று வெறிக்கும்.

 

நேரெதிரே குதித்துக் கடக்கும்

நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில்

 

இருத்தல் இறத்தல் குறித்தெந்த

முகாந்திரமின்றி முடிந்து போகும்

பூனைகளின் எளிய வாழ்வு.

 

0

 

பூனை

பாவண்ணன்

 

காவல் பலிக்கவில்லை

தினமும் பால்திருட

எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய்

முன்வைக்கவோ

பின்வைக்கவோ

உனது தந்திரம் புரியவில்லை

துடிக்கும் மீசையில் கர்வம்

கண்களில் கவியும் குரூரம்

உடம்பில் புரளும் முறுக்கு

உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்

எலியாகவா

எதிரியாகவா

 

 

 

o

 

சாத்திய ஜன்னல்கள் நடுவில்

கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது

சோறு உனக்குப் பிடிப்பதில்லை

கறி நான் சமைப்பதில்லை

குழந்தையிருக்கும் வீடு

பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை

நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்

எச்சரிக்கையானது வீடு

இன்றுமுதல்

இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ

 

o

எச்சில் மீன் தலையைத் துப்ப

என் வாசலா கிடைத்தது

அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது

உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்

பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்

என்ன புரிந்து எகிறினாய்

உன் மீன் எனக்கு இரையாகுமா

என் வாசல் தூய்மை தவறாகுமா

 

O

 

பூனைப் பெருமாட்டி

குவளைக்கண்ணன்

 

சிறுவயது முதலே

அவற்றுடன் விளையாட்டுத் தோழமை கொண்டிருந்தாலும்

இளமையின் இறுதியில்

மனச் சோர்வினால் ஏற்படுத்திக்கொண்ட

தனி ஒதுக்கத்தின்போது

அவரது வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தவை

துரத்தத் துரத்த மடியில் ஏறி அமரும்

அவரைக் கடக்கும் போதெல்லாம்

மென்மயிர் போர்த்திய உடலால் உரசிச் செல்லும்

உணவுண்ணும்போது அருகில் அமர்ந்திருக்கும்

துயர் மிகுந்து அழும்போது

முத்தமிட வருவதுபோலக் கிட்டே வரும்

காலையில் விழிக்கும்போது

கால்களின்மேல் மெத்தெனப் படுத்திருக்கும்

இவ்வாறெல்லாம் ஆரம்பித்தது

பூனைகளுடனான நெருக்கம்

அவற்றைக் கூர்ந்து கவனித்தவர்

தனி ஒதுக்கத்திலிருந்து மீண்டு

பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார்

ஆக உயரங்களுக்குச் சென்றார்

அவரது திட்டமிடல் காத்திருப்பு பதுங்கல்

பாய்ச்சல் வேட்டை அலட்சியம்

இவை கண்ட மக்கள்

ஆயிரம் ஆண்களை அழித்து ஆண்டவன்

அவரைப் படைத்திருக்க வேண்டுமென்று பிரமித்தனர்

அடுத்து என்ன எனப் பயந்தனர் எதிரிகள்

அறிஞர்களுக்குப் புதிராக இருக்கும்

அவரது வெற்றியின் ரகசியம்

என்னவெனில்

 

o

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வாசிப்பின் மீதான கவிதைகள்
  2. 'குருவி' - கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  3. 'குழந்தை' கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  4. ‘வீடு’ - கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்
  5. ‘பறவை’ கவிதைகள்- செல்வராஜ் ஜெகதீசன்