ஒரு பொருள் கவிதைகள் -3

 

“கவிதை எப்போதும் நிகழ்காலத்தின் பொருள். நிரந்தரமான நிகழ்காலத்தின் பொருள். அதற்குள் நேற்றின் நிழலும் நாளையின் சாயலும் இருந்தாலும் அது இன்றின் ஒளி.”

# சுகுமாரன் 

 

0

 

குழந்தைக் கோபம்
# நறுமுகை தேவி 

தன்னைக் கோவித்துக் கொண்ட
அன்னையைப்
பழிவாங்கப் போவதாகச் சொல்லி
ஒளிந்து கொள்கிறது
குழந்தை
அன்னையின் முந்தானைக்குள்ளே.

o

சிக்னல்
# ஷான் 

டோரா பொம்மை
வாங்கச் சொல்லி அழுகிறது குழந்தை…
காருக்கு உள்ளேயும் வெளியேயும்.

O

என் குழந்தை சொன்ன
பேய்க் கதையில்
எல்லாப் பேய்களும் அழகு.

# டி. எஸ். ராபர்ட்ஸ்

O

மின்னலின் தீண்டல்
# கரிகாலன் 

கருணையைக் கொண்டுவருகிறீர்கள்
சொர்க்கத்தின் சாவியை…
எடுத்து வருகிறீர்கள்
ஒரு மலரைத் தாங்கி வருகிறீர்கள்
கேள்வியின் வெளிச்சத்தால்
உங்கள் இருளை அழிக்கும்
ஜோதியை ஏந்தி வருகிறீர்கள்
அலுப்பெனும் தீராநோயின்
மருந்துடன் வருகிறீர்கள்
அருவியின் குளிர்ச்சியை
நதியின் மலர்ச்சியை
நிலவின் ஒளியை
நட்சத்திரங்களின் அழைப்பை
மின்னலின் தீண்டலை
உன்னதத்தின் முழுமையை
அள்ளியெடுத்து அரவணைத்து வருகிறீர்கள்
ஒரு குழந்தையை ஏந்திவரும் நீங்கள்.

o

குழந்தையின் உள்ளங்கையில்
பம்பரம் சுழலும்போது
சூரியன் இன்னும்
வேகமாய்ச் சுழல்கிறது.

# தேவதேவன்

O

குழந்தைக் கேள்விகள் 

# செல்வராஜ் ஜெகதீசன்

ஏன்
வீடு திரும்ப வேண்டும்?

ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன?

ஏன்
அம்மா வேலைக்கு போவதில்லை?

எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் இத்தனை வாகனங்களில்?

வளர்ந்த பின் தான்
வேலைக்கு போகணுமா?

சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?

குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள்.

 

O

பள்ளி

# ஸ்ரீநேசன்

தன் மனைவியின் கருவறையிலிருந்து குழந்தை

வெளிவர மறுக்கிறதாம்.

வீட்டுப் பெரியவர்கள் கெஞ்சியும்

மருத்துவர்கள் மிரட்டியும் கூட 

அதன் பிடிவாதம் சற்றும் குறையவில்லையாம். 

அவன் மிகவும் திகிலடைந்திருக்கிறான்

இன்னும் மூன்று ஆண்டுகளில் கருவறையின் உள்ளேயே 

ஒரு பள்ளியை எப்படிக் கட்டி முடிப்பதென்று. 

O

குழந்தைகளின் ஜன்னல்கள்

# முகுந்த் நாகராஜன்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.

வீடு இங்கேதான் இருக்கிறதாம்.

இதெல்லாம் ஒரு காரணமா?

O

குழந்தைகள் உலகத்தில்

நுழைந்துகொள்வது

வேறெதைக் காட்டிலும்

அற்புதமானதாக இருக்கிறது.

வணக்கங்களோ

பாவனைகளோ பவ்யங்களோ

வேண்டியிராத

அவர்களுடனான சந்திப்புகள்

ஒரே அசௌகர்யம்

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்

அவர்கள் வெளியேற்றி

விடுகிறார்கள் என்னை

என் அனுமதியில்லாமலேயே.

# சல்மா

O

திறங்கெட்டு

# கலாப்ரியா

கொலு வைக்கும்

வீடுகளில்

ஒருகுத்து சுண்டல்

அதிகம் கிடைக்குமென்று

தங்கையைத்

தூக்க முடியாமல்

தூக்கி வரும்

அக்காக் குழந்தைகள்.

O

குழந்தைக்கு

நிலா காட்டும்

சாக்கில் நாமும்

வானம் பார்க்கலாம்

கைகளில்

குழந்தையிருக்க

வானம் யார் பார்ப்பார்?

# பூமா ஈஸ்வரமூர்த்தி

O

இறுக்கம்
# கல்யாணராமன் 

நான்
கவிதை எழுதிய தாளின்மேல் …
குழந்தை சில சமயங்களில்
சிறுநீர் கழித்து விடுகிறாள்.
முறைக்கும் என்னைப் பார்த்து
கைகொட்டிச் சிரிக்கிறாள்.
விழிகளை உருட்டி மிரட்டினால்
இன்னும் பெரிதாய்ச் சிரிக்கிறாள்.
அந்தச் சிரிப்பில்
சர்வ நிச்சயமாய்த் தூய்மையிருக்கிறது.

O

முந்தைய தொடர்கள்:

2.“வீடு” – கவிதைகள் – https://bit.ly/2Uxkumf
1.“பறவை” – கவிதைகள் – https://bit.ly/33tptIo

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வாசிப்பின் மீதான கவிதைகள்
  2. பூனை கவிதைகள்
  3. 'குருவி' - கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  4. ‘வீடு’ - கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்
  5. ‘பறவை’ கவிதைகள்- செல்வராஜ் ஜெகதீசன்