தொடர் கதை: கந்தல் ராணி 2- பாஸ்கர் சக்தி

மூன்றாந்தலில் டாக்டர் மாயக் கிருஷ்ணன்  தன் டிஸ்பென்சரியை வைத்திருந்தார். வராண்டாவும், திண்ணையும் வைத்த காரைக் கட்டிடம்…மாயக்கிருஷ்ணனின் அப்பா  அந்த வட்டாரத்தில் பெரிய சம்சாரி.  மகனை எப்படியாச்சும் இங்க்லீஸ் வைத்தியம் தெரிஞ்ச டாக்டரா ஆக்கிரணும் என்று பிடிவாதமாக இருந்து படிக்க வைத்தார். எட்டாம் வகுப்பிலேயே மதுரை செயின்ட் மேரீஸ்ஸில் சேர்த்து விட்டார். அதன் பின்னர் சென்னை ஸ்டான்லியில்.  படித்து முடித்து விட்டு மதுரைக்கு ரயிலில் வந்த மகனை வரவேற்க புத்தம் புதுசாக ஒரு அம்பாசடர் காரை வாங்கி  அதை எடுத்துக் கொண்டு மதுரை போய்க் கூட்டி வந்தார். மூன்றாந்தலில் இருந்த கடைக்காரர்களுக்கெல்லாம் ஒரே வியப்பு. நம்ம ஊர்லயும்  இங்க்லிஸ் வைத்தியம் தெரிஞ்ச ஒரு டாக்டரு வந்துட்டாரே என்று மகிழ்ந்தார்கள்.

மாயக்கிருஷ்ணன் எம் பி பி எஸ் மட்டும் படிக்கவில்லை. பலதும் படித்தார், ராமாயணம் , மகாபாரதம் என்று துவங்கி நிறைய உள்ளூர் வெளியூர் இலக்கியம் என்று எது கிடைத்தாலும் வாசித்தார். ஷேக்ஸ்பியரும், இவான் துர்கெனேவும் அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள். வாசிப்பு தவிர  மேடைப் பேச்சிலும் வெளுத்து வாங்கினார். எனவே தவிர்க்கவே இயலாமல் மெடிக்கல் காலேஜின் ஹீரோவாக இருந்தார். நிறைய பெண்கள் அவர் மேல் மையல் கொண்டிருந்தார்கள்.

அதில் சுலோச்சனா எனும் பெண் தைரியமாக ஒரு நாள் அவரை தனியே பார்க்கையில் “ மாயக்கிருஷ்ணா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஷெல் வீ மேரி?” என்று நேரடியாகக் கேட்டாள். இவருக்கு கை  கால் உதறலெடுத்து , படித்த காதல் காவியங்கள், வெண்ணிற இரவுகள்,பகல்கள் எல்லாம் மறந்து போய் விட்டது.

அவளுக்கு பதிலே சொல்லாமல் சுற்றிலும் இருக்கும் மரம் , சைக்கிள்,  பூச்செடி , அதன் மேல் தலையாட்டிக் கொண்டிருந்த ஓணான் ஆகியவற்றை கவனமாகப்  பார்த்தார். சுலோச்சனாவின் தைரியத்தில் கால்வாசி கூட அவருக்கு இல்லையென்று சுலோச்சனாவுக்கே தெரியுமளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்தன்.

“மேடையில அவ்வளவு நல்லாப் பேசறீங்க? லிட்டரேச்சர் ல இருந்து உதாரணம் எல்லாம் காட்டி காதலைப் பத்தி பொயட்ரி எல்லாம் சொல்றீங்க? உங்க கிட்ட வந்து இப்படிக் கேட்டா…? என்னைப் பாக்காம எது எதையோ பாக்கறீங்க?”

“அது …அது … ஐ அம் ஷாக்டு சுலோச்சனா…அதான்…”

“வாட்ஸ்  இன் திஸ் டு பீ ஷாக்டு….வீ ஆர் டாக்டர்ஸ் கிருஷ்ணன்”

“ எஸ்,,,டாக்டர்ஸ் !!!….பட் திஸ் இஸ் டிஃபரண்ட்”

“ என்ன டிஃபரன்ஸ்? கம் ஆன்… வாங்க  உக்காந்து பேசலாம்.”

இருவரும் சென்று ஒரு   வேப்பமரத்தடியில் அமர்ந்தார்கள்.

“சொல்லுங்க. கிருஷ்ணா, நான் இப்படி கேட்டது உங்களுக்குப் பிடிக்கலையா?’

மாயக்கிருஷ்ணன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பிறகு “பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? சந்தோஷமால்ல இருக்கு?”

சுலோச்சனா முகத்தில் புன்னகை தோன்றியது.” அடேயப்பா…அப்புறம் என்ன?”

மாயக்கிருஷ்ணன் அவளது முகத்தைப் பார்த்தார். ஏற்கனவே அழகும் கம்பீரமும் பொருந்திய சுலோச்சனாவின் முகம் புன்னகையால் மேலும் பொலிவு பெற்றுத் துலங்கியது. அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் . பெற்ற செல்வம், கற்ற  கல்வி, உற்ற சொந்தம் எல்லாவற்றையும் அவள் காலடியில் சமர்ப்பித்து சரணாகதி அடைய வேண்டியதுதான். அப்படியான ஒரு மாயத்தை அவளது வயதும் , அழகும் நிகழ்த்தி இருந்தன.

“என்ன கிருஷ்ணா பாத்துக்கிட்டே இருக்கீங்க?”

மாயக் கிருஷ்ணன் உள்ளுக்குள் சிதறி இருந்த தன்னை ஒன்று சேர்த்துக் கொண்டு பேசினார்.

“ சுலோச்சனா  உங்கப்பா யாரு?”

“ எங்கப்பா வைத்தியநாதன் . ஆடிட்டர்..:

“  உங்க தாத்தா?”

“ எங்க தாத்தா ஜட்ஜா இருந்து ரிடையர் ஆனவரு.. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?”

“ தெரியும். ஆனா எங்கப்பா யாருன்னு உங்களுக்குத் தெரியாதில்லை? “

“ தெரியுமே. நிலக்கிழார்…உங்க  வட்டாரத்தில ரொம்ப வசதியானவரு. “

“ ஆமா…. ஆனா அவரு பள்ளிக்கூடமே போனது கிடையாது. …எங்க வம்சத்தில முதல் முதல்ல காலேஜுக்கு வந்தவன் நாந்தான்……எங்க வட்டாரத்திலேயே முதல் எம் பி பி  எஸ் நாந்தான்.”

“ சரி. அதுக்கென்ன?”

“ என் பின்னணி வேற , உங்க பின்னணி வேற. பல தலைமுறையா படிக்கிற வசதி உங்களுக்கு இருக்கு. ஆனா  இப்பதான்  படிப்புங்கிற ஒரு   லக்ஸரியை நான் தொட்டுப் பாக்கிறேன். “

“ என்னது.? படிப்பு லக்ஸரியா? அது பேஸிக்கான விஷயம் கிருஷ்ணன்”

“ஆமா….உங்களுக்கு அது தன்னால கிடைக்கிற வாய்ப்பு. ஆனா என்னை மாதிரி ஆளுகளுக்கு அது லக்ஸரிதான்… நான் படிக்கணுங்கிறதுக்காக என் அப்பா  எவ்வளவு மெனக்கெட வேண்டி இருந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க படிப்புல  முன்னேறி வளர்ந்து நிக்கிற கம்யூனிட்டி..  அதிலும் நீங்க சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவங்க. கிராமம்னா உங்களுக்கு என்னன்னு தெரியாது.எங்க வாழ்க்கை முறை புரியாது”

சுலோச்சனா முகத்தில் ஒரு சிறிய குழப்பம் தோன்றியது ,” கிருஷ்ணா….நான் உங்க கிட்ட என்ன கேட்டேன் ? உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு.  என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன். பட் நீங்க வேற எது எதையோ   சொல்லிட்டு இருக்கீங்க?”

“ இல்லை நான் சொல்ல வர்றது அதைத்தான். ஒரு பொண்ணா இருந்தும் என்கிட்ட இதை தயக்கமில்லாம கேக்கற நம்பிக்கையை உங்களோட பிறப்பும், படிப்பும் கொடுத்திருக்கு. ஆனா படிச்சிருந்தாலும் , தகுதி இருந்தாலும் நீங்க கேட்டவுடனே எனக்கு ஒரு தயக்கமும், கூச்சமும் வருது பார்த்தீங்களா? அதுக்குக் காரணம் என்னோட பிறப்பும், பின்னணியும்…”

“கடவுளே, என்ன கிருஷ்ணா நீங்க? ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்க? காதலுக்கு சாதி மதமெல்லாம் கிடையாதுன்னு மேடையில அடிச்சு விட்டீங்களே?”

“ ஆமா, உண்மைதான். இப்பவும் அதை நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அதே மாதிரி உங்களைப் பிடிக்கலைன்னும் சொல்ல மாட்டேன். இந்தக் காலேஜ்ல நிறைய பசங்க உங்க மேல க்ரேஸா இருக்காங்க…நீங்க வந்து என் கிட்ட இப்படி சொன்னது எனக்கு லைஃப் டைம் சந்தோஷம்… பெரிய கவுரவம்”

சுலோச்சனாவின் கண்களில் கர்வமும் மகிழ்ச்சியும் பெருகி வழிந்தது.

“ஆனா…” கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார் “ உங்க லவ் எனக்கு பொக்கிஷம்..ஆனா அதை நான் மனசுக்குள்ள பூட்டி வைக்கத்தான் முடியும். ஏத்துக்க முடியாது”

சுலோச்சனாவின் முகத்தில் பெரும் ஏமாற்றம் கவிந்தது….” ஏன் கிருஷ்ணன்? உங்கப்பா ஒத்துக்க மாட்டாரா?”

“ அவரு என்ன சொல்வாருன்னு தெரியலை. ஆனா நானே இது வேணாம்னு நினைக்கிறேன்”

“ கிருஷ்ணா….என்னை ரொம்ப சங்கடப் படுத்தறீங்க”

“ ரொம்ப ஸாரி …. ரொம்ப ஸாரி….இப்பவும் சொல்றேன். உங்களை கட்டிக்கிட்டா அது எனக்கு சந்தோஷமா இருக்கும். பெருமையா இருக்கும். ஆனா…என் வாழ்க்கை மாறிப் போயிரும்…நான் உங்க வாழ்க்கைக்குள்ள வந்திருவேன்.”

சுலோச்சனா வியப்புடன் பார்த்தாள்.

“ எங்கப்பா என்னைப் படிக்க வைச்சது சாதாரண விஷயம் இல்லை. எங்க ஜில்லாவிலேயே ஒரு நல்ல டாக்டர் இல்லை. ஜனங்க ஏதோ அவங்களுக்குத் தெரிஞ்ச வைத்தியத்தை பண்ணிக்கிட்டு இருக்காங்க…அவங்களுக்கு நல்ல வைத்தியத்தை குடுக்கணும்ங்கிறதுதான் அவரோட ஒரே எண்ணம்”

சுலோச்சனா அமைதியாக அவன் பேசுவதையே கவனித்தபடி இருந்தாள்.

“எங்க குடும்பம் ரொம்ப பெரிசு.  என் தாத்தாவுக்கு ஏழு பசங்க , ரெண்டு பொண்ணுக   எல்லாருக்கும் மூத்தவங்க என் பெரிய ச்ச்அத்தை. பதினைஞ்சு வயசுல கல்யாணம். கல்யாணம் முடிஞ்சு மூணாவது மாசம், எங்க மாவட்டம் முழுக்க காலரா பரவி இருக்கு. என்ன வியாதின்னு புரியாம, எது மருந்து, என்ன வைத்தியம், நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரிஞ்சுக்க முடியாம ஜனங்க கொத்து கொத்தா செத்திருக்காங்க… அதில என் அப்பாவோட அண்ணன் மாரு நாலு பேரு செத்துப் போயிட்டாங்க. மாமாவும் செத்துப் போய் பெரிய அத்தை மூணே மாசத்துல விதவையாகி வீட்டுக்கு வந்துட்டாங்களாம். மாயக் கிருஷ்ணன்னு என்னோட பேரு  இருக்கே. இது ஆக்சுவலா என் மாமாவோட பேரு. அத்தை  புருஷனை இழந்து எங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் கழிச்சு நான் பொறந்திருக்கேன். அதனால அத்தை தன் புருசன் பேரையே எனக்கு வைச்சுட்டாங்க.  கடைசி வரைக்கும் வீட்டோடயே இருந்து தம்பி குடும்பத்தைப் பாத்திட்டு இருந்தாங்க….அப்புறம்  டி.பி. வந்து அவங்களும் போய்ட்டாங்க.”

மாயக்கிருஷ்ணனின் கண்கள் கலங்கின.

“ இருபது வயசுப் பையனான எங்கப்பா  கண் முன்னால இத்தனை சாவு. அப்பா மனசு ரொம்ப உடைஞ்சு  போச்சு. அப்ப நினைச்சிருக்காரு. தனக்கு புள்ளை பொறந்தா அவனை எப்படியாவது படிக்க வைச்சு டாக்டரா ஆக்கணும். எல்லாரும் சாகறவங்கதான். ஆனா என்ன வியாதின்னு தெரியாம, வைத்தியம் இல்லாம சாகறது கொடுமை. அது என் காலத்துக்குப் பிறகு நடக்கக் கூடாதுடா மகனேன்னு  சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஒரே ஒரு தரம் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தாரு. மெட்றாஸ் எப்படி இருக்குனு அவருக்கு சுத்திக் காமிச்சேன். எல்லாத்தையும் பாத்துட்டு ரயில் ஏறும் போது சொன்னாரு.” மகனே,, ரொம்ப நம்பிக்கையா உன்னையப் படிக்க வைச்சிருக்கேன். இந்த ஊரு ரொம்ப பகட்டா இருக்கு….எனக்கு பயமா இருக்கு… நீ என் மகனா வந்து சேரணும்யா …அப்படின்னு சொல்லி அழுதுட்டாரு. நான் கலங்கிப் போயிட்டேன் சுலோச்சனா . உங்க நம்பிக்கையை நான் கெடுக்க மாட்டேன் அய்யா அப்படின்னு அவரு கிட்ட சொன்னேன்….

நீங்களே சொல்லுங்க. நான் உங்களை கல்யாணம் பண்ணா நீங்க அந்த சின்ன ஊருல வந்து என் கூட இருப்பீங்களா? வசதியான மெட்றாஸ் வாழ்க்கைக்கு பழகின உங்களால அது  முடியுமா?”

சுலோச்சனா அமைதியாக இருந்தாள்.

“ அமைதியா ஆயிட்டீங்க?’

“ நீங்க சொல்றது சரிதான் மாயக்கிருஷ்ணன்..சவாலா இருக்கப் போற உங்க ஊரு வாழ்க்கையையே உங்களால விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்றீங்க…அப்படி இருக்கும் போது என்னோட சொகுசான லைஃபை விட்டுட்டு நான் எப்படி வர முடியும். என் அப்பா என்னை வெளிநாட்டுக்கு மேலே படிக்க அனுப்பலாம்னு இருக்காரு. உங்களுக்கு ஓகேன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சேர்ந்தே வெளிநாடு போய் படிக்கலாம்…அந்த ஐடியாவோடதான் நான் உங்க கிட்ட கேட்டேன்”

“ ரொம்ப தேங்க்ஸ் சுலோச்சனா. நீங்க சொல்ற எல்லாமே பெரிய வாய்ப்பு. அதிர்ஷ்டம். ஆனா என் மனசுல நான் எடுத்து வைச்சிருக்க முடிவுகள் வேற… அது படி பார்த்தா என்னோட இடம் மூன்றாந்தல். அங்க நான் வைக்கப் போற க்ளினிக். அங்க நான் ட்ரீட் பண்ணப் போற ஜனங்க . இதுதான் என்னோட லைஃப் , கேரியர் எல்லாமே.”

“ கல்யாணம்?”

“ அது கண்டிப்பா பண்ணிக்கிருவேன். டாக்டர் மாப்பிள்ளைக்கு எங்க ஏரியா நிலக்கிழார் எல்லாம் பெரிய பெரிய சங்கிலி, வாட்ச், மோதிரம் எல்லாம் போட்டு பொண்ணு கொடுப்பாங்க…”

சொல்லி விட்டு கண்கள் லேசாக கலங்க சுலோச்சனாவைப் பார்த்தார்.

“ஆனா இந்த சாயங்காலத்தை என்னால மறக்கவே முடியாது. காலம் பூரா நீங்க என் கிட்ட கேட்டதை நினைச்சு நான் சந்தோஷப் படப் போறேன். துக்கப்படவும் போறேன். அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது. ஒரு பொண்ணு வந்து வலிய ஒரு ஆண் கிட்ட தன் காதலை சொல்றான்னா , அதை விடப் பெரிய சந்தோஷம் எந்த ஆம்பளைக்கும் இருக்காது… அதை ஏத்துக்கத் தயங்கற மனுஷன் ஒரு அடி முட்டாள். நான் தெரிஞ்சே அந்த முட்டாள் தனத்தை செய்யறேன்”

பேசப் பேச மாயக்கிருஷ்ணனின் உணர்ச்சிகள் பொங்கிக் கொண்டே இருக்க அவளது கரத்தை மென்மையாகப் பற்றினார். சுலோச்சனா அதை எதிர்பார்க்கவில்லை. அவள் அவரை  கனிவோடு பார்த்தபடி இருக்க அந்தக் கரங்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டார். அவர்  உடல் குலுங்குவதையும், தன் கைகளில் அவரது சூடான கண்ணீரையும் அவள் உணர்ந்தாள். என்ன செய்வது என்றே தெரியாத தர்மசங்கடத்துடன் தன் கைகளை அவள் விடுவிக்க முயன்றாள். அவளது ஒரு கரத்தை மட்டுமே அவளால் விடுவிக்க முடிந்தது. இன்னொரு கரம் மாயகிருஷ்ணின் முகத்தை உள்ளங்கையால் தாங்கி இருக்க, விடுபட்ட கரத்தால் மாயகிருஷ்ணனிம் தலையை மென்மையாகக் கோதினாள்.

அவரது அழுகை மெல்லக் குறைந்தபோது சொன்னாள்.

“ ரொம்ப சந்தோஷத்தோடயும், எதிர்பார்ப்போடயும் உங்க கிட்ட இந்தப் பேச்சை ஆரம்பிச்சேன். ஆனா அதை தர்மசங்கடமா, ரொம்ப எம்பரேஸிங்கா நீங்க மாத்திட்டீங்க”

“ ஐ அம் ஸாரி சுலோச்சனா. “

“நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் ஏத்துக்கறேன் மாயக்கிருஷ்ணன். இத்தனை பேர் படிக்கிற இந்தக் காலேஜ்ல, அழகான, பணக்காரப் பசங்க பல பேர் இருக்கற இடத்தில நான் ஏன் உங்களைத் தேடி வந்து கேட்டேன் தெரியுமா?  உங்க கிட்ட எப்பவுமே ஒரு சிரிப்பு இருக்கும். கனிவு இருக்கும். அக்கறையாப் பேசுவீங்க. அதனாலதான்   உங்களை எனக்குப் பிடிச்சது. என்னை கல்யாணம் பண்ணிகிட்டா என்னவெல்லாம் கிடைக்கும்னு தெரிஞ்சும் , சுயநலமே இல்லாம வேற ஒரு லட்சியத்துக்காக என்னை வேணாம்னு சொல்றீங்க பாருங்க… ரியலி உங்களை விட ஒரு நல்ல ஆளை நான் காதலிச்சிருக்கவே முடியாது.”

முகமெல்லாம் சிவக்க காதலுடன் ஒரு வித ஆற்றாமையுடன் சுலோச்சனா பேசுவதை உணர்ச்சிப் பிழம்பாக மாயக்கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தார்.

” எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..உங்களுக்கும் கல்யாணம் ஆயிரும். நானும் எனக்கு ஒத்து வர்ற இன்னொரு ஆளை கட்டிக்குவேன். பட் இந்த லவ் இருக்கே. இது எனக்கு குடுக்கற இந்த உணர்வை வேற யாராலயும் எனக்கு குடுக்க முடியாதுன்னு தோணுது….”

அவள் தன் இரண்டு கைகளையும் விடுவித்துக் கொண்டாள்.

“இதுக்கு மேலயும் பேசிக்கிட்டு இருந்தா அது நம்மளை இன்னும் வேதனைப் படுத்தும். நான் கிளம்பறேன் மாயக்கிருஷ்ணன். நாளைக்குப் பாக்கலாம். பை”

சொல்லி விட்டு விடு விடு என்று கிளம்பிப் போய் விட்டாள்.

 

ச் கச் கச் என்று ஒரு பல்லி கத்த டாக்டர் மாயக்கிருஷ்ணன் சுய நினைவுக்கு வந்தார். ஆயிரக்கணக்கான தடவைகள் அவர் சுலோச்சனாவுடனான அந்தக் காதலை, அந்த மாலை நேரத்தை   நினைத்து நினைத்துப் பார்த்தபடியேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்ன ஒரு அழகி, என்ன ஒரு அறிவு, கம்பீரம்.. லவ் யூ சுலோச்சனா. என் மனதில் இன்றும் வாழும் காதல் அரசி நீதான்….லவ் யூ..

அருகே இருக்கும் குட்டி பீரோவின் மீது ஃபேர்வெல் போது எடுத்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தார். அதில் பெண்கள் அமர்ந்திருக்க ஆண்கள் நின்றிருக்கும் ஃபோட்டோவில் இருக்கும் சுலோச்சனாவைப் பார்த்தார்.

“எங்கே இருக்கிறாய் சுலோச்சனா?”

 வாசலில் ஏதோ சத்தம் கேட்டது… கம்பவுண்டர் கோவிந்தன்  அய்யா அய்யா என்று அழைக்க வெளியே வந்தார்.

டிஸ்பென்ஸரியின் முன் பகுதியில் வரிசையாக கம்பி போட்டு வராண்டா மாதிரி இருந்தது. அதில்  அந்தப் பெண்ணைக் கிடத்தி இருந்தார்கள்.

“டாக்டரையா “

“ என்ன ராமலிங்கம்? யாரு இது?”

“ தெரியலைங்க, கம்மாயில குதிச்சிருச்சு.  உடனே குதிச்சு தூக்கிட்டேன். ஆனா தண்ணியைக் குடிச்சிருச்சு போல”

“ எவ்வளவு நேரமாச்சு?”

“ அது சரியா எப்படிங்க சொல்றது. குதிச்சுச்சு. தூக்கி கரையில போட்டு வயித்தை அமுக்கி கொஞ்சம் தண்ணி வெளியில வந்துச்சு,இருமுச்சு. அப்பறம் மயங்கிருச்சு. சைக்கிள்ல வச்சு நேரா இங்க கொண்டுக்கு வாரோம்.”

“ தூக்கி பெஞ்சில வைங்க”

வராண்டாவில் இருந்த பெஞ்சில் அவளைப் படுக்க வைத்தார்கள். காலையிலிருந்து டாக்டருக்கு ஒரு கேஸும் இல்லை. சுலோச்சனா ஞாபகமாகவே சும்மா உட்கார்ந்திருந்த மனுசனை லேசான பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து இதயத் துடிப்பை பார்த்தார். கொஞ்சம் குறைவாக இருந்தது. பி பியும் குறைவாக இருந்தது. நுரையீரலில் நீர் இருப்பது போல் தோன்றவில்லை. சுவாசம் இடைஞ்சலின்றி சீராக இருந்தது.

கையை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். விரலிடுக்கில் வெள்ளையாக, முகத்தில் கண்களைச் சுற்றி வெள்ளையாக லுகோடர்மா பரவலின் துவக்கத்தில் இருக்கிறது.

“ நாங்களும் பாத்தோம் யா…வெண் குஷ்டம் தான இது? ஒட்டுவாரொட்டிங்களா? எங்களுக்கும் வந்துருமா?’

டாக்டர் முனியாண்டியைப் பார்த்தார். “ உன் பேரு முனியாண்டிதானே?:”

“ ஆமாங்கய்யா. உங்க தோட்டம் பாக்கற சடையன் மகன்”

“ ம். இதுக்குப் பேரு லுகோடர்மா. ஒரு விதமான தோல் வியாதி, ஒட்டுவாரொட்டியெல்லாம் கிடையாது. உனக்கு ஒண்ணும் வராது..”

“சரிங்கையா”

“ அப்புறம் இதை குஷ்டம்னு சொல்லாதே. அது வேற வியாதி..”

“சரிங்க அய்யா”

“ கோவிந்தா, இந்தப் பொண்னுக்கு காத்து வேணும். உள்ள இருக்க ஃபேனை எடுத்து வந்து இங்க வைச்சிட்டு, பழக்கடையில போய் நான் கேட்டேன்னு சொல்லி  ஆரஞ்சுப் பழத்தை ஜூஸ் போட்டு வாங்கிட்டு வா…”

சரிங்க சார் என்று கோவிந்தன் கிளம்பிச் செல்ல டாக்டர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். ராமலிங்கத்தைப் பார்த்தார்.

“ அப்புறம் ராமலிங்கம்.. சொந்தமா பருத்தி ஏவாரம் பண்ண வேண்டியதுதானே? எதுக்கு ஒருத்தர் கிட்ட சம்பள ஆளாவே இருக்க?”

“செய்யணும்யா… அதுக்க்கு நம்ம கையிலயும் ஒரு முதல் வேணுமில்லை?”

“ நாலு வருசமா கமிசன் கடையில இருக்க, இன்னுமா காசு சேக்கலை”

“எங்கய்யா காசு சேருது ?. ஓட்டைக் கையி,. நாலு தம்பிடி சேர்ந்ததுமே இடுக்கு வழியா ஒழுகிருது”

டாக்டர் சிரித்தார். “ அது சரி ,  இது வயசுப் பொண்ணா இருக்கு. நீ பாட்டுக்கு தூக்கிட்டு வந்து இங்க போட்டுட்ட. …அப்பனாத்தா தேடி வந்து கேட்டா என்ன சொல்றது?’

“ உசுரைக் காப்பாத்தணும்னு தூக்கியாந்தோம் . உங்ககிட்ட கொண்டாந்தாச்சு. எங்க டாக்டர் கிட்ட வநது எவனாச்சும் விரல் நீட்டி ஒரு சொல்லு சொல்லிர முடியுமா?”

டாக்டர் புகையை ஆழமாக இழுத்து விட்டார்.அதனை ராமலிங்கம் கண் கொட்டாது பார்த்தான். “சிவாசிக்  கனேய்சன் மாதிரில்ல சீரட் குடிக்கிறாரு டாக்டரு?” என்று நினைத்துக் கொண்டான்.

“ அய்யா இந்தப் புள்ளை பொழைச்சிக்கிரும் இல்ல?”

டாக்டர் சிரித்தார்,” அதுக்கு ஒண்ணும் இல்லை. கோயிந்தன் ஜூஸ் வாங்கிட்டு வந்ததும் வாயில ஊத்தி விட்டுட்டு  ஒரு ஊசியைப் போட்டு விட்டுர்ரேன். கொஞ்ச நேரத்துல சரி ஆயிரும்.”

“மயங்கிக் கெடக்கு?”

“ வயித்துல ஒண்னுமில்லை…. அதோட தண்ணியில முங்கிருச்சில்ல? அந்தக் கெறக்கம். எந்திருச்சிருவா ராணி”

ராமலிங்கம் வியப்புடன் பார்க்க டாக்டர் சிரித்தார். “ அதான் பேரை கையில பச்சை குத்தி இருக்காளே, ராணின்னு… யாரு மக ? நம்ம ஊரு இல்லையா இவ?

“ தெரியலைங்க அய்யா. இந்தப் புள்ளையை நான் நம்ம மூன்றாந்தல் பக்கம் பாத்ததே இல்லை”

கோயிந்தன் ஆரஞ்சுச் சாறுடன் வந்தான். அதில் குளுக்கோஸை கலந்து டாக்டர் தர அவள் வாயில் கோயிந்தனும் முனியாண்டியும் ஊற்றினார்கள்.

டாக்டர் அதன் பின் ஒரு ஊசியைப் போட்டு விட்டு வராண்டாவிலிருந்து திண்ணையைத் தாண்டி வெளியே நிற்கும் வேப்ப மரத்தடியில் வந்து நின்றார்… மறுபடி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி  ராமலிங்கத்திடம் பருத்தி வியாபாரம் பற்றிய பஜார் நிலவரத்தைக் கேட்கத் துவங்கினார்.

உள்ளே ராணி லேசாகக் கண் விழித்தாள். அவள் உடைகள் இன்னும் ஈரமாக இருந்தன.

எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் மெதுவாக வெளியே வந்தாள். வெளியே டாக்டர் சிகரெட் பிடித்தபடி அருகிலிருந்த வேப்பமரத்தின் மீது சாய்ந்திருக்க மற்ற மூவரும் அவர் முன்னால் மரியாதையுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

ராணி வேகமாக வராண்டாவை விட்டு கீழிறங்கி விடு விடு என்று நடக்கத் துவங்க.

டாக்டர்தான் கவனித்தார்

“ ஏய் நில்லு….எங்க போறே?”

அவள் லேசான பயத்துடன் ஓடத் துவங்கினாள்.

  ( தொடரும்)

ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கந்தல் ராணி 4 -பாஸ்கர்சக்தி
  2. கந்தல் ராணி 3 : பாஸ்கர்சக்தி
  3. தொடர்கதை: கந்தல் ராணி 1- பாஸ்கர்சக்தி