குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் 5
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.

ஒரு சிறிய கிராமம்.

அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய வீடு.

அந்தச் சிறிய வீட்டின் கூரைமேல் ஒருசேவல் படுத்திருக்கிறது. அது ஒரு அழகான சேவல். அந்தச் சேவலின் கொண்டைமேல் அழகான ஒரு பூ இருக்கிறது. ஓலைப்பூ. அது செக்கச்செவேர் என்று அழகாகப் பூத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு விடியக்கால நேரம்.

இருட்டு இன்னும் விலகவில்லை.

பனி பெய்து கொண்டிருக்கிறது.

வாடைக்காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.

கூரை மேல் படுத்திருந்த அழகான அந்தச் சேவல் எழுந்து கூரைமேல் நின்று கொண்டிருக்கிறது. அழகான அந்தச் சேவல் தன் தொண்டையைச் சரி செய்கிறது. அந்தச் சேவல் அதன் அடித்தொண்டையில் இருந்து சத்தம் போட்டு அது அழகாகக் கூவுகிறது. அது கூவிக்கூவி எஜமானியை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

எஜமானியின் கணவன் கடந்த ஆண்டு இதுமாதிரி ஒரு வாடைக்காலத்தில் இவளைப் பிரிந்து வெளிநாட்டுக்குப் போயிருந்தான். அவன் பெரிய சம்பாத்தியத்தோடு இன்று இரவு வீட்டுக்கு வந்திருக்கிறான்.

எஜமானி அவள் கணவனோடு இரவெல்லாம் காம இன்பத்தை ஆண்டு அனுபவித்தாள். அவள், காமம் கலையாத மயக்கத்தோடு அவள் கணவனோடு படுத்து நல்ல மகிழ்ச்சியான உறக்கம் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சேவல் கூவிக்கூவி அவள் உறக்கத்தைக் கலைத்துவிட்டது.

கோவத்தோடு எழுந்து வந்த அவள் கூவிக் கொண்டிருக்கிற சேவலைப் பார்க்கிறாள்.

அந்தச் சேவலுக்கு அவள் சாபம் கொடுக்கிறாள்…

“யேய்.. சேவலே..”

“எப்போதும் பெட்டைக்கோழிகளின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு திரிகிற சேவலே..”

“ஒருநாள் ஒரு நடுச்சாமத்தில் இருட்டான ஒரு இருட்டில் ஒரு காட்டுப் பூனை வந்து உன்னைக் கடித்துத் தூக்கிக்கொண்டு போகும். அந்தக் காட்டுப் பூனையின் குட்டிகள் உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துக்கடித்து அவைகள் உன்னைச் சித்திரவதை செய்யும். அந்தக் காட்டுப்பூனைக் குட்டிகள் உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று உன்னை மிச்சம்வைத்து மிச்சம்வைத்து அவைகள் பல நாட்கள் உன்னை வைத்திருந்து தின்னும்.

-மதுரைக் கண்ணனார்
குறுந்தொகை 107