வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை 5
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.

 

“இரவு வேண்டாம்”

“அன்புள்ள என் தோழியே..”

“நீ என் காதலனிடம் சொல்..”

“அவன் என்னைச் சந்திப்பதற்கு இனி இரவில் வரவேண்டாம் என்று அவனிடம் சொல்.”

“அவன் என்னை நடுச்சாமத்தில் வந்து சந்திக்கிறான். அந்த நடுச் சாமத்தில் பயங்கரமான கொடிய மிருகங்கள் வாழ்கிற அந்தக் காட்டுப் பாதையில் அவன் நடந்து வருகிறான். அவன் நடந்து வருகிற அந்த நடுச் சாமத்தில்தான் அந்தக் காட்டில் வாழும் புலிகளும் யானைகளும் பசியோடு இரைதேடி அலைந்துகொண்டிருக்கும்.”

“ஆண் புலியும் ஆண் யானையும் இயல்பாகவே பகைமிருகங்கள். அந்தக் கொடிய மிருகங்கள் ஒன்றை ஒன்று கொல்வதற்காக அந்த நடுச்சாமத்தில்தான் அவைகள் கொலைவெறியோடு அந்தக் காட்டில் அலைந்து கொண்டிருக்கு. அந்த நடுச்சாமத்தில் அந்தக் காட்டுப் பாதையில் அவன் நடந்து வருவது அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் பயப்படுவதாக அவனிடம் சொல்.”

“நான் நாளை தினைக்காட்டுக்குக் காவலுக்குப் போகிறேன். அவனை அங்கே வரச் சொல்.”

“என் காதலனை என்னிடம் பகலில் வரச்சொல்.”

-மதுரைப் பெருங்கொல்லனார்
குறுந்தொகை 141