யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத்
திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் 5
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.

ஒரு பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு கள்ளிமரம் இருக்கிறது. அந்தக் கள்ளிமரத்தின் அடித்தூர் காய்ந்து அதன் பட்டைகள் வெடித்திருக்கின்றன. அந்தக் கள்ளிமரத்தின் காய்களும் வெடித்திருக்கிறது.

ஒரு புறா அந்தக் கள்ளிமரத்தில் உட்கார்ந்திருக்கிறது.

அது ஒரு பெண்புறா. அந்தப் பெண்புறாவுக்கு சின்னச் சின்னக் கால்கள். அந்தப் பெண்புறா அதன் குட்டக்குட்டக் கால்களால் அது குறுநடையாய் நடப்பது அழகாக இருக்கிறது. அந்தப் பெண் புறாவின் கழுத்து ரோமங்களில் அழகான சின்னச் சின்னப் புள்ளிகளாக இருக்கிறது. இந்தச் சிறிய பெண்புறாவுக்கு அழகான இந்த சின்னச் சின்னப் புள்ளிகள் பேரழகைத் தருகிறது.

ஒரு மதிய நேரம்.

சரியான வெயில்.

கானல் அலை அலையாக மிதந்து கொண்டிருக்கிறது.

இந்த மதிய வெயிலில் அந்தப் பெண்புறாவின் கணவன் இரை தேடப் போய் இருக்கிறது. அந்த ஆண் புறா மேலேமேலே பறந்து பறந்து அது வெகுதூரத்துக்குப் போய் இருக்கிறது.

அந்தப் பெண்புறா தனிமையில் துயரத்தோடு உட்கார்ந்திருக்கிறது. அந்தப் பெண்புறா தன் கணவனைக் கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது.

-மதுரைச் சீத்தலைச் சாத்தனார்
குறுந்தொகை 154