மரபான எழுத்து முறையிலிருந்து விலகி, ரொம்பவும் மெனக்கெடாமல், இயல்புவாதப் போக்குடன் எழுதுவோர், எம்மொழியிலுமே அதிகமானவராய் இருக்கவியலாது. அதிலும் நெருக்கடிக்குள்ளாகும் உள்மனத்தின் குரலாக ஒலிக்கும் கோபிகிருஷ்ணன் (1945-2003) போன்றோர், புனைவின் அதிகபட்ச சாத்தியங்களைக் கைக்கொள்ளாமலேயே, மிக எளிய விவரணை நடையின் மூலம், நபர்களையும் சம்பவங்களையும் எப்படியோ ஒன்றுகூட்டித் தத்துவத்தையும் உளவியலையும் தூண்டியெழுப்பிச் செயற்கையான கட்டுக்கோப்பை உதறிக் கண்முன் நிழலாடும் கலைக் கூர்மையைப் பச்சை மாமிசமாக மொழிப்படுத்தி விடுகிறார்கள். இது ஒரு கிராம வாழ்வில் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே பிடிப்பின்றித் திரிந்து அல்லற்படும் இருப்பின் ஆற்றாமையிலிருந்துதான், இத்தகைய கலை பிறக்கவியலும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கோபியின் கதைகளில் இடம்பெறும் எந்தப் பாத்திரத்தை விடவும் மிக வலுவானது, சுதந்திரமாக நடமாட முடியாத ஒவ்வாமையை அவற்றுக்குக் கையளிக்கும் பெருநகரமும், அதன் அமனித இசைவற்ற புழங்குவெளியின் தளக்குறுகலும்தான் என்று உறுதியாகக் கூறலாம்.
பெரிய வீடுகள் இல்லை; உற்சாகமளிக்கும் இயற்கைச் சூழல் இல்லை; வீதிகளில் சதா இலக்கற்ற அலைச்சல்; நிலைகொள்ள முடியாமை; சக மனிதர்களை அச்சுறுத்தலாக உணரவைக்கும் பதைபதைப்பு வாழ்க்கை; கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு பஸ்ஸிலும் ரயிலிலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டு ஆரோக்கியமான காற்றுக்கு ஏங்கும் அவலம்; அமைதிக்கும் நிறைவுக்கும் அன்றாடம் போராடும் முடியாத சமன்; பணம் புகழ் அதிகாரப் படிநிலைகளில் உருட்டப்படும் மனிதப் பகடைகளின் திண்டாட்டங்கள்; உள்ளேயும் இருக்கமுடியாது வெளியேயும் வரத்தெரியாது மூளை பிதுங்கும் நடைபிண மூச்சுத் திணறல்; உயிரோடு வைத்துச் சமாதி கட்டிவிடும் பண்பாட்டுப் பாவனைகள்; நிராயுதபாணிகளாய் மழைக்கும் வெயிலுக்கும் முகங்கொடுக்கும் பிக்கல் பிடுங்கல்கள்; கொஞ்சநஞ்ச மனிதப் பண்புகளையும் பிடுங்கிக்கொண்டுவிடும் அலுவலகங்கள்….. கோபி கதைகளின் நடுமையமான பெருநகரியப் பாடுகளை மேலும் விவரிக்கத் தேவையில்லை. நரகத்தின் கதையைச் சென்னையைக் களமாக்கி எழுதியவர் கோபி என்று துணிந்து சொல்வேன். அம்பத்தூர், போரூர், வடபழனி, அசோக் நகர், கே.கே.நகர், கிண்டி, தி.நகர், நுங்கம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், மவுண்ட் ரோடு, எக்மோர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி என்று கோபி எழுதாத சென்னைப் பகுதிகளே இல்லை. சென்னை முழுவதும் அவர் அலைந்து திரிந்திருக்க வேண்டும். இந்த மாநகரின் வெக்கை, கோபியின் ஒவ்வொரு கதையிலும், கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆவியாக உள்ளுறைந்திருப்பதைக் காணவும் கருதவும் முடிகிறது. கோபியின் சென்னை, நாம் வாழும் சென்னைதான் என்றாலும், அது நமக்கு நன்கு பழகியதுதான் என்றாலும், அது ஏதோ ஒருவிதத்தில் நாம் காணாததும் நமக்குப் பரிச்சயமாகாததுமான நுண்ணடுக்குகளுள்ள ஒரு மிகச் சிக்கலான பெருநகரமாக இக்கதைகளில் பதிவாகியுள்ளது. இவற்றில் வரும் ஆண்களும் பெண்களும் இந்த நகரத்தின் குழந்தைகள். வேறு நகரில் இவர்கள் இப்படி இருந்திருக்க மாட்டார்கள் அல்லது இவர்களுடைய முகங்கள் இந்நகருக்கென்றே பிரத்யேகமாகக் கோபியால் இப்படி வரையப்பட்டனவோ?
எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கித் தொண்ணூறுகளின் பிற்பகுதி வரையிலான, இருபதாண்டுக் காலச் சென்னையைக் குறித்தே கோபி பெரிதும் எழுதினார். வேலை கிடைப்பதில் அன்றைக்கிருந்த திண்டாட்டங்கள், காதலைச் சொல்வதில் அதை ஏற்பதில் மணப்பதில் விலகுவதில் விட்டு விடுதலையாவதிலுள்ள சிக்கல்களின் நுண்கோணங்கள், சக மனிதரைப் பின்தள்ளி முன்னகர்வதன் நிமித்தம் உருக்கொண்டுவிடும் அபத்தங்கள், மனம் பிளவுற்றுச் சிதையும் தருணங்கள், அந்நியத்தன்மையை எதிலும் கலந்து கரைக்க முடியாத தன்னிருப்பின் இறுக்கங்கள், இங்கும் அங்கும் எங்கும் எதிலும் முட்டி மோதும் குழப்பங்கள், தடுமாற்றங்கள், நம்மை நாமே பரிகசித்துக்கொள்ளும் குமைச்சல்கள்…. இவற்றையே கோபி வெளிப்படையாய் எழுதினார். நிம்மதியின்மையின் வழியே மானுட குலம் முழுவதற்குமான பரிவின் ஒளியையே அவர் தேடினார். சிறுகச் சிறுகச் சிதைவுறும் மனிதன், காலத்தின் முன் வெறும் கேலிப்பொருளாகும் மெய்ம்மையைச் சென்னையின் தெருக்கள்தோறும் கோபி காட்டினார். தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் சென்னையில் குடியேறிப் பிழைப்பின் நிமித்தம் வாழப் பழகிவிட்ட, பட்டக்கல்வி படித்த, மிகச்சுமாரான வேலைகளில் ஒட்டிக்கொண்டிருந்த, முப்பதுகளின் பிற்பகுதியில் பெண்துணை தேடிக் கொண்ட, உள்மனத்தின் நச்சரிப்புகளால் தொல்லைக்குள்ளான, பிறரைக் காயப்படுத்தக் கூடாதென்பதற்காகத் தம்மைக் காயப்படுத்திக்கொண்ட, குறைந்தபட்ச வசதிகளுமின்றிக் காயடிக்கப்பட்ட சென்னை மாநகர நடுத்தர வர்க்க நண்டுகள் பற்றிய மிகக்கூர்மையான அவதானிப்புகளே கோபியின் சிறுகதைகள் என்றாலும், இவற்றுக்குள் அவற்றின் இயல்பு காரணமாகத் தத்துவமும் ஆழ்மனமும் ஒன்றோடு ஒன்று மோதிச் சம்பிரதாயம் மீறிய பளீர் மின்னல்களாகக் கண்சிமிட்டுகின்றன.
உளவியலில் பட்டதாரியான கோபி, குற்றவியல் – தடயவியல் – சமூகவியல் துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இந்தத் துறைகளின் அறிவுச் சார்பைக் கோபியின் கதைகளில் காண முடிகிறது. விழிப்பு நிலைக்கும் பிறழ்வு நிலைக்குமான ஊடாட்டம் காரணமாகப் பிறக்கும் ஒரு சகஜமான பாவமும், அதீதமாகாத அந்தரங்க அதிர்வுகளும் கோபியின் எளிய மொழிக்குத் தக்க பிடிமானமளித்து வாசகப் புரிதலின் எல்லைகளை அகலப்படுத்துகின்றன. ஓரளவு தமிழறிந்தவரும் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய சிக்கலற்ற புழங்குமொழிதான் என்றாலும், சாதாரண மனிதர்களின் பேச்சிலிருந்து வெளிப்படும் அனுபவ ஞானப் பிழிவைக் கதை மொழியாக்குவதில் கோபி தனித்திறன் கொண்டிருந்தார். இவ்வகையில் வாசகரை வெருட்டாத எளிய மொழியைக் கவனமாக நகர்த்தி ஆழ்மனத் தூண்டல்களை வெளிச்சமிடுவதில் சில அரிய தடங்களைக் கோபி கண்டுகாட்டியுள்ளார். இது வட்டார வழக்கு என்பதாக இல்லாமல், பெருநகர ஏதிலிகளின் மனமொழி ஆகியுள்ளது. இந்த மொழி, கோபியின் சில கதைகள் தவிரப் பிற பலவற்றில் எளிய விவரணையாகவே உருக்கொண்டுள்ளது: உரையாடலை விடவும் விவரணைகள் மூலம் கதையை நகர்த்திச் செல்வதையே கோபியும் விரும்பியுள்ளதாகத் தோன்றுகிறது.
சென்னைத் தமிழ் என்று அறியப்பட்ட விளிம்பின் மொழியைச் சில கதைகளில் கோபி பயன்படுத்தியுள்ளபோதிலும், ஜெயகாந்தன் அல்லது ஜி. நாகராஜன்போலப் பிரத்தியேக நெளிவுசுளிவுகளுடன் கூடிய ஒரு பேச்சு மொழியை அவர் நம்பியதாகத் தெரியவில்லை. பெரிதும் கீழ்நடுத்தர வர்க்கம் சார்ந்த ஓரளவுக்குத் தரப்படுத்தப்பட்ட பொதுமொழியின் சாயல்களை விட்டுவிடாமலேயே கோபி எழுதினார். மனத்தின் அகமொழியே அவரிடம் பிரதானமாகச் செயல்படுவதால், பிற மனிதர்களுடனான உரையாடலைவிடத் தமக்குள் தாமே பேசிக்கொள்ளும் உணர்வுப் பதற்றமே மொழிவழிப் பதிவுகளாகக் கோபியிடம் உருத்திரள்கின்றன. இத்திரட்சியில், நிலம் சாதி மதம் சார்ந்த தனித்துவ அடையாளங்கள் பிரக்ஞையுடன் ஓரங்கட்டப்பட்டுப் பொதுச்சிக்கல்களின் அடிவண்டல்கள் மேலெழுந்து, மனிதப் பிராணிகளின் தீவிர உசாவல்களாகக் கதைகள் உக்கிரமடைகின்றன. எனவே, பெருநகரச் சிலுவைப்பாடுகளின் மனமொழிக் குரல்களையே தவிர்க்கவியலாமல் மீள மீளவும் கோபி எழுதிச் செல்கிறார் எனலாம்.
தம் சிறுகதைத் தலைப்புகளில் கோபியிடம் ஒரு தமிழ்த்தன்மையைக் காண்கிறோம். காணி நிலம் வேண்டும், உரிமை, ஒவ்வாத உணர்வுகள், அன்பே சிவம், அவலம், தூயோன், உடைமை, விழிப்புணர்வு, உயர்திணை – அஃறிணை = ஒரு சங்கமம், ஓட்டம், தொழுகை, குறுக்கீடு, கலக்க மறுத்த கண்கள் எனப் பல கதைத் தலைப்புகளிலும் ஒரு தமிழ் மனத்தின் மென்துடிப்பை அவதானிக்கிறோம். இதேபோல் குற்றமும் தண்டனையும், இனிமையான வக்கிரம், பூச்சிகள், மிகவும் பச்சையான வாழ்க்கை, வார்த்தை உறவு, எதிர் உளவியல், ஊனம், நிர்ணயங்கள், பரஸ்பரம், நம்பிக்கை போன்ற பல கதைகளில் ஓர் உளப்பகுப்பு ஆய்வாளரை எதிர்கொள்கிறோம். இழந்த யோகம், மகான்கள், ஆத்ம தரிசனம், தெய்வீக அர்ப்பணம், சடங்கு, ஆதி… அந்தம், அம்மன் விளையாட்டு, ஜீவ காருண்யம், ஆசான், தெய்வத்தின் குரல் போன்றவைவழி எவ்வளவு வலிமையான எதிர்மரபு இந்துத்துவராகக் கோபி செயல்பட விரும்பினார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இது ஒரு மொழிவழி உத்தியாகக் கோபியிடம் விளைவதையும் கவனிக்கவேண்டும். “எனக்குச் சூதாட்டத்திலும் தனிநபர் சொத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. சூதாட்டத்தில் வெற்றியடையப் போதிய திறமை என்னிடம் இல்லாத காரணத்தினாலும், பொருள் வசதி கொண்டவனாகவே இருப்பதினாலும், ஒருவேளை இவ்வாறு தத்துவம் பேசி என்னை நியாயப்படுத்திக் கொள்கிறேனோ என்னவோ” (காணி நிலம் வேண்டும்) எனத் தம் கதாபாத்திரம் ஒன்றைக் கோபி பேசவைக்கிறார். இதன் முதல் தொடர், ஒரு கொள்கைப் பிரகடனம். இரண்டாம் தொடர் ஓர் உளவியல் அலசல். இத்தகைய ஐயுறல் அம்சம், கோபியின் ஆளுமையில் கூடியிருந்த ஒரு தனிச்சிறப்பான பண்பாகும். அனைத்தையும் நம்பி ஏமாறும் இந்தப் புற உலகில், எந்த ஒன்றின் மீதும் ஐயுறும் மனப்போக்கை மிகவும் ஆரோக்கியமான ஒரு சிந்தனைச் சுதந்திரமாகக் கோபி பற்றிக்கொண்டிருந்தார். இதைப் பகடியாக்கித் தப்பித்துக் கொள்ளும் எழுத்துகளே தமிழில் அதிகம். ஆனால், ‘சுய நியாயப்படுத்தல்கள்’ பற்றிய ஒரு கூர்ப்பான விழிப்புணர்வு, கோபியிடம் மிகுந்திருந்தது.
இலட்சியங்களின் நிகழ்காலக் கபட வேடங்களைக் கோபி தோலுரித்தபோதிலும், உயரிய வாழ்வியலுக்கான முன்னெடுப்புகளைப் பழிப்புக்குள்ளாக்கித் தீர்க்கதரிசியின் அல்லது ஒரு பெருங்கலைஞனின் எல்லாமறிந்த பாவனையுடன் சிருஷ்டிக்கு முன்பாகக் கைகட்டி வாய்பொத்திச் செவிமூடிப் பேசாது அவர் சும்மா நின்றுகொண்டிருக்கவில்லை. தம்மால் முடிந்தளவிற்குச் சுயசுத்திகரிப்பு செய்துகொண்டு, மேன்மேலும் குடைந்து மனக் குகைகளைத் தகர்த்தெறியும் இடைவிடா முயற்சியிலேயே கோபி வினைப்பட்டிருந்தார். “‘யாரும் என்னுடன் ஒத்துழைப்பதில்லை. இந்த உலகத்தில் அனைவரும் அறிவிலிகள். எல்லோருமே படு அயோக்கியர்கள். நாடு கெட்டுக் கிடக்கிறது. வர வர இங்கு ஒன்றும் சரி இல்லை’ முதலிய வாக்கியங்களை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டும் ஆனாலும் பிரயோகிக்கலாம் என்றும், அவ்வாறு செய்யுங்கால், அவை மடத்தனமாகவே இருந்தபோதிலும், சரியாகவே இருக்கும்” என்றும் கோபி அறிவித்தார் (மக்கள் தினசரி – ஒரு தேசிய நாளேடு). இருப்பின் போலித்தனத்தைப் பதிவு செய்வது ஒன்று; பகடி செய்வது இன்னொன்று; பதிவுக்கும் பகடிக்குமப்பால் மாற்றத்திற்கான ஏக்கத்துடன் தொடர்ச்சியாக வினையாற்றுவது பிறிதொன்று; நகரிய நாகரீகத்தைக் கிழித்து நிர்வாணப்படுத்துவது மற்றொன்று; வெறும் வேடிக்கை காணல் என்பதன்றி முன்னகர யத்தனிப்பது முற்றிலும் வேறொன்று. இத்தனையையும் கோபி செய்து பார்த்தார் என்பதுதான், அவரது பன்முக விரிவாகும். இத்தனைக்கும் நிலப் பரப்பளித்த தருமமில்லாத சென்னையே, கோபியின் கதைகளில் சூத்திரதாரியாகச் சுழல்கிறது. “அக்டோபர் 1980. திருமணமாகித் தாராவுடன் மயிலையில் உள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில், ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுகப் புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து சென்றால் குழந்தைகளின் நரகல். இரவில் மாதத்தில் 20 நாட்கள் எரியாத தெரு விளக்குகள். வீடு என்பது ஒரே ஒரு அறை. ஜன்னல் என்பது வெளிச்சம் வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு திறப்பு. அதற்குக் கதவு இல்லை. வெளிச்சம் சிறிதளவு எப்படியோ உள்ளே வரும். காற்று என்பது விந்தை. மழை பெய்தால் திறப்பின் வழியே தாராளமாக உள்ளே தண்ணீர் வரும்.மழை நீர் சுத்தமானது” (காணி நிலம் வேண்டும்) எனத் தத்ரூபமாக விவரிக்கிறார்.
இதுதான் கோபியின் சென்னை. இதை நீங்களும் நானும்கூட அன்றாடம் பார்க்கத்தான் செய்கிறோம்.ஆனால், இதை உள்ளது உள்ளபடியே எழுதிவிட, இன்றும் நமக்கு ஏதோ ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அப்படியே நாம் எழுத முனைந்தாலும், பகட்டாகவோ திருகிவிட்டோ, நம் சாமர்த்தியத்தைக் காட்டி விடுகிறோம். இதோ பாரடா, இதுதான் நான், இப்படிப்பட்ட சிதிலங்களோடேயே நான் இருக்கிறேன் எனப் பச்சையாய் வெளிப்படக் கோபிக்குத்தான் முடிகிறது. நமக்குத்தான் பச்சையோ சிவப்போ நீலமோ பிடிக்காதே! வெள்ளையும் கறுப்பும் காவியுமாக இருக்கத்தானே நமக்குப் பிடிக்கிறது? “நம் சடங்குசார் புனிதப் பெண்கள் மகோன்னத மகிமை வாய்ந்தவர்களே. இந்த அந்நியோன்னிய லட்சியத் தம்பதிகள் இல்லாமல்தான் நம் கலாச்சாரத் தர்மங்கள் எப்படிச் செழித்தோங்க முடியும்? புரியாத சுப மந்திரங்கள், ஏதோ ஒரு விளங்காத புனிதச் சூழலை உண்டு பண்ண, முன்பின் தெரியாத எவனோ ஒருவன் தன் கழுத்தில் கட்டும் பவித்திரத் தாலி சில பல வேளைகளில் சுருக்குக் கயிறாக மாறும்போது ஏற்படும் வேதனையின் இன்பத்தை நன்றாகச் சுவைத்தே அனுபவித்துக் கொண்டிருக்கும் பொறுமையின் சிகரம் ஒரு வக்கிரம் பிடித்த masochist. காந்தி நம் சம்பிரதாய மகளிர்களில் இன்னும் உயிரோடு நிலவி வருகிறார். சடங்குகளால் பிணைக்கப்பட்ட உறவு இறுதிச் சடங்குவரை நிலைத்திருப்பது நம் கலாச்சாரத்தின் பிரத்தியேகச் சிறப்பம்சம். கலாச்சாரம் ஏனோ அதி முக்கியமாகத்தான் கருதப்பட்டு வருகிறது”(குற்றமும் தண்டனையும்) என்கிறார் கோபி.இத்தகைய கலாச்சார இறுக்கத்தை உடைத்து நொறுக்கிவிட்டுச் சற்றும் முன்னகர முடியாமையே நம் சகல தாழ்வுகளுக்கும் காரணம் என்கிறார். கவிஞர் யூமா வாசுகிக்கு அளித்த நேர்முகத்தில், இது தொடர்பாகச் சில மேலதிக விளக்கங்களைக் கோபி கூறியுள்ளார். இந்தியத் தமிழ்க் கலாச்சாரம் மீதான ஒவ்வாமையைத் தெளிவாகக் காட்டும் வாசகங்கள் அவை. “சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானம் என்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதைத் திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக் கொள்ளத் தீர்மானித்தால் சமூகப் பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. பாதுகாப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும்வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயது வரை வாழ்கிறான் என்றால், நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு. இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்று சொல்கிறேன். கற்பை எப்படிப் புரிந்துகொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தேவையற்றது. திருமணத்தை மீறிய உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன?” என்கிறார். கோபியின் இக்கூற்றை அவரது வாழ்க்கைப் பார்வையாகக் கொள்ளலாம்.
இத்தகைய ஒரு சுதந்திரக் கலாச்சாரம், இப்படிப் பேசுவதற்கு மட்டுமே எளிதானது. கட்டுப்பெட்டித்தனம் அதீதமாகக் கோலோச்சும் தமிழ்ச் சமூகத்தில் இதைப் பரிசோதிக்கும் விபரீத விளையாட்டில் இறங்கித்தான் கோபி பலியானார். இதன் மொழி ஆவணங்களாக, அவரின் கதைகள் வெளிப்பட்டன. ‘ஆத்ம தரிசனம்’ கதையின் பின்வரும் உரையாடலைக் கோபியின் பச்சை மொழிக்குச் சான்றாக எடுத்துக்காட்டலாம். “‘உங்களுக்குக் கோபம் வருவதுண்டோ?’, ‘உண்டு’, ‘எரிச்சல்?’, ‘உண்டு’, ‘பரிவு ஏற்படுவதுண்டோ?’, ‘உண்டு’, ‘பாசம்?’, ‘உண்டு’, ‘பாலுணர்வு?’, ‘இது ரொம்பவும் அந்தரங்கமான கேள்வி. எனக்குச் சகல இழவுகளும் வருவதுண்டு. நானும் மனுஷன்தானே’, ‘….இந்த எல்லா உணர்வுகளும் யார்?’, ‘நான்தான்’, ‘ஆக, எல்லாமே நீங்கள்தான்’, ‘ஆமாம். ஆமாம். எல்லாமே நான்தான்’, ‘உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் என் ஆத்மா பெருமிதம் கொள்கிறது’, ‘இவ்வளவு வெறுப்பேற்றிவிட்டு, இப்போது என்ன அத்தனை சந்தோஷம்?’ ‘எந்த ஒரு மனுஷனுக்கும் கிடைக்காத பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், பிறகு எப்படி இருக்கும்?’, ‘என்னைச் சந்தித்தது எப்படிப் பேறு ஆகும்?’, ‘சற்றுமுன் நீங்கள் சொன்னீர்கள்,எல்லாமே நீங்கள் என்று. அப்படியானால், நீங்கள் ஒரு கடவுள். பரம்பொருள் மட்டும்தான் எல்லாமாக இருக்கமுடியும்’, ‘ஒரே ஒரு நிமிஷம். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்துவிடுங்கள். நீங்கள் சிறிது காலம் உள்ளே இருந்தீர்களோ?’” (ஆத்ம தரிசனம்). இதுவே கோபியின் கூர்மொழி. சிறிய சொற்களில் பெரிய அனுபவங்களைக் கொண்டுவரக் கோபி பாடுபடுகிறார். பரம்பொருளாக இருப்பதன்று; மனிதனாக இருப்பதே கோபிக்குப் பெரும் பிரச்சனை.மீளவும் மிருகமாகிட முடியாது; பரம்பொருளாகிடப் பார்ப்பதும் தேவையற்றது; மனிதனாக முனைவதே செய்யவேண்டியது என்கிறார். ஆனால், அது என்ன அவ்வளவு சுலபமா என்றும் அவரே கேட்டுக் கொள்கிறார். மனிதன் ஏன் இத்தனை சிறுமையுடன் இருக்கிறான் என்ற வியப்பே அவரிடம் பகடியாக மொழி ரூபம் கொள்கிறது. “சென்னை. 4-4-85. கொசப்பேட்டை மொட்டைக் குழுவினருக்கும் குயப்பேட்டை மாயாண்டிக் குழுவினருக்கும் முனியம்மாள் விவகாரத்தின் காரணமாக, மாலை 5.30 மணி அளவில் சலசலப்புத் தொடங்கவிருக்கிறது”(மக்கள் தினசரி–ஒரு தேசிய நாளேடு) என்றெழுதுகிறார்.
இப்பகடியில் கொசப்பேட்டை, குயப்பேட்டை, மொட்டை, மாயாண்டி, முனியம்மாள் என்பனவற்றைச் சென்னைத் தமிழாக மட்டுமே புரிந்துகொள்ளக்கூடாது. பாண்டவருக்கும் கௌரவருக்கும் கூந்தல் முடியாத பாஞ்சாலி தொடர்பாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தின் பரிணாமத் தொடர்ச்சியே இதுவும் என்றறிந்துகொள்ள முற்பட்டால்தான், கோபி நமக்குப் புரிவார். அல்லது வேதவல்லி தொடர்பாக யக்ஞருத்ரனுக்கும் பார்த்தசாரதிக்குமிடையே மூண்ட மோதல் என்றும் நாம் இதைப் புரிந்துகொள்ளலாம். சாதியும் வர்க்கமும் தாண்டி மனிதன் ஐந்தாயிரம் வருடங்களாக இன்னும் இயல்புந்தல்களால் இயக்கப்படும் வெறும் ஒரு ஜந்துதான் என்பதைக் கோபி மிக ஆழமாகப் புரிந்திருந்தார். அவருக்குப் போலியான மன மயக்கங்கள் ஏதுமில்லை; மொழியின் ஆகப்பெரிய சாத்தியங்கள் பற்றிய புனைவுக் கற்பிதங்களைக் கோபி எள்ளி நகையாடினார்; மெளனத்தின் வலிமையையே நம்பினார். “வாழ்க்கையை ஒரு சில வாக்கியங்களில் அடக்கிவிடலாம். இவ்வளவு பேச்சு அவசியம் தானா என்று தெரியவில்லை. மிகவும் ஆழமான உறவுகள் அநேகமாக அமைதியாகவே இருக்கும். நேசத்தையும் மென்மையுணர்வுகளையும் தோழமையையும் வெளிப்படுத்த இனிய முக பாவம் மட்டும் போதுமானதே. வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளாமலேயே ஒருவருடைய எண்ணங்கள் மற்றவரைச் சேர்ந்தடையும். வாழ்க்கை மிகவும் நிசப்தமாக இருப்பதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனாலும், இரைச்சல் ஏனோ எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது” (ஒவ்வாத உணர்வுகள்) என்றார். இந்த இரைச்சல்கள் கோபி கதைகளில் இல்லை; ஆழ்ந்த நிசப்தம்தான் அவற்றின் அடிச்சரடாகும். ஒருவேளை இதனாலோ என்னவோ, உரையாடலிலும் விவரணைகளே அவரெழுத்தில் அதிகமுள்ளன போலும்! சொல்ல வருவதைச் சொல்லுவதற்கே மொழி வேண்டும்; சொல்ல வருவதை ஒளித்து வைப்பதற்கில்லை எனக் கோபி கருதியிருக்கக் கூடும். மொழிவழிச் சொல்ல முடியாதவற்றைக்கூட, எப்படியேனும் சொல்லி விடுவதற்கே எப்போதும் முயன்றார் கோபி என்பதும் முக்கியமானதாகும்.
ஆசாரங்களையும் அனுஷ்டானங்களையும் குத்திக்கிழிக்கக் கோபி தயங்குவதில்லை என்பதற்குப் பின்வரும் சான்றைக் காட்டலாம். “தொண்டுக் கிழம் ஈரச் சேலையுடன் நின்றிருந்தது. அந்தணர் ஒருவர் அம்மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருத்தி, ‘அவுக பொடவெ கட்டிண்டிருக்காங்கல்லே. அந்தாலே போங்க. அப்புறமா பேசுவியலாம்’ என்று அந்தணரிடம் தான் நெறிமுறை என்று கருதிய ஒன்றைப் போதித்துக்கொண்டிருந்தாள். ஈரச்சேலை மூதாட்டி முகத்தில் லேசான நாணத்தின் சாயல் படர்ந்தது!”(சகல சம்பத்துகளும்) என்கிறார்.இவ்விதப் பூசிமெழுகலைக் கடிந்தொதுக்குபவர் மட்டுமல்லர்; நிரீஸ்வரவாதியுமாவார் கோபி. அவரின் கதைகளில் சடங்கு, சம்பிரதாயம், சகுனம், சாஸ்திரம், கடவுள், பண்பாட்டுப் பாவனைகளின் மீதான தீவிரமான எதிர்ப்புணர்வுகள் நிரம்பி வழிகின்றன. இதற்குச் சென்னையின் சாலைகளும் ஒருவகையில் நேரடியான சாட்சியங்களாகின்றன. “காசா மேஜர் சாலை போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போனது.நான் சாதாரணமாகக் கவனத்துடன்தான் வண்டி ஓட்டுவேன். என் ஜாக்கிரதையையும் மீறி என்னை முந்திக்கொண்டு போன ஒரு சைக்கிள்காரர், மோபெட்டின் வேக ஊக்கியை இடித்துக்கொண்டு முன்சென்றதில், நான் நிலைதடுமாறி வண்டியைவிட்டுக் கீழே விழுந்துவிட்டேன். வண்டியின் ஒரு பகுதி எனது இடது கால் மேலிருந்தது. வண்டியை ஓரம் கட்டினார்கள் பாதசாரிகள். என்னை யாரோ தூக்கி விட்டார்கள். ஒரு சிறு கூட்டம். நல்ல வேளை, எதிரில் லாரி கீரி எதுவும் வரவில்லை. தெய்வாதீனமாக உயிர் பிழைத்தீர்கள் என்றார் ஒருவர், ஈஸ்வர விசுவாசத்துடன். விழுந்து வைத்தது ‘யார் தீனமாக’ என்று கேட்டிருக்கலாம்தான்” (அழைப்பிதழ்) எனக் கேலி செய்கிறார் கோபி. இந்தக் கதையில் மட்டுமில்லை; அவரது அனைத்துக் கதைகளிலும் பகுத்தறிவின் இத்தர்க்க ஒழுங்கைக் கண்டு ரசிக்கலாம். எதிர்க்கருத்தே தெரிவிக்காமல் மௌனம் காக்கும் சௌகரியமான ஒரு பிழைப்பு உத்தியைக் கடவுள் விஷயத்தில் கோபி கைக்கொள்ளவில்லை. சாதி, மத, கடவுள் மறுப்பையே கோபி கதைகளில் காண்கிறோம்.
ஒருவகையில், கோபியின் கதைகளில் அவரே அல்லது ஒருவரே திரும்பத் திரும்பப் பாத்திரமாகிறார். தம்மைச் சூழ்ந்து இயங்கிய நடப்புலகத்தைக் கூர்மையாகக் கோபி அவதானித்தார். சென்னையில் வாழ்பவர்கள் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளும் சில கொடிய அனுபவங்களில் முதன்மையானது, குண்டும் குழியுமான மாநகரச் சாலைகளில் பாதுகாப்பின்றிப் பயணிப்பதாகும். தரமற்ற சாலைகளில் வாகன நெரிசலில் பயணிப்பதை விடப் பெரிய கொடுமை வேறு இல்லை. இது பற்றிய அனுபவங்களைச் சிறப்பாகக் கோபி எழுதியிருக்கிறார். “எங்கள் அலுவலகம் அடையாறில் இருந்தது. மோபெட்டில் முக்கால் மணி நேரப் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு மணி நேரம். நெரிசலின் கனத்தைப் பொறுத்து ஒன்றரை மணி நேரம்” (ஒரு ரூபாய்க்கு ஒரு கதை) எனக் கோபி எழுதுகிறார். இதில் கோபியின் பார்வை தனித்துவமானது. இந்த நெரிசலுக்குப் பலரும் ஆட்டோக்காரர்களைக் குறை கூறுவதே வழக்கமாகும். இப்போக்கைக் கோபியிடம் காண முடியாது என்பது மட்டுமன்று; இதற்கு எதிரான ஒரு மனவளச் செழிப்பும் அவரிடமுண்டு. ’உழைப்பாளிகள்’ என்ற கதையில், கீழ்ப்பாக்கம் கார்டனில், மோட்டார் சைக்கிள் ஒன்று, ஒரு நடுவயதுப் பெண் மீது மோதிவிடுகிறது. சாலையை அவள் கடக்கும்போது வாகனம் வருகிறதா என்பதைச் சரியாகக் கவனிக்காமல் கடந்ததால் ஏற்பட்ட விபத்து அது. அதற்கு அந்தப் பெண்ணே முழுப்பொறுப்பு. அருகில் ஓர் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது. நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் ஓடிவருகிறார்கள். மோட்டார் சைக்கிள்காரரை அவர்கள் உதைத்துக் கொண்டிருக்கவில்லை. அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஓர் ஆட்டோக்காரர், மோட்டார் சைக்கிளை நிமிர்த்திக் கொடுத்துவிட்டு, ‘வண்டிக்கு ஏதாச்சும் ஆச்சா, பாருங்க’ என்கிறார். பின் வண்டி பழுதில்லை என்பதைக் கண்டுகொண்டு, ‘நீங்க போங்க சார்’ என வழியனுப்பி வைப்பதாக எழுதுகிறார். ‘ஆட்டோக்காரர்கள்தாம் எவ்வளவு நல்லவர்கள்!’ என்றும் கோபி வியக்கிறார்.
நற்பார்வை, கோபியின் சமூகப் பொறுப்பைக் காட்டுவதாகும். இதே சிறுகதையின் இன்னொரு பகுதியை, விரிவாக மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “1994 வாக்கில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் அப்பொழுது சேவை மையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அலுவலகக் காரியமாக லண்டன்காரர் ஒருவரை வியாசர்பாடிக்கு நான் அழைத்துச் செல்ல நேர்ந்தது. ஆட்டோ ஒன்றில் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தோம். ஏகப்பட்ட நெரிசலில் வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோ போய்க் கொண்டிருந்தது. என்ன தோன்றியது என்று தெரியவில்லை, லண்டன்காரர் கேட்டார். உங்களுக்கு அற்புதம் என்ற வார்த்தையின் பொருள் தெரியுமா மிஸ்டர் கோபி என்று. அந்த வார்த்தை இயேசுநாதருடன் மறைந்து விட்டது. இப்பொழுது அந்த வார்த்தை புழக்கத்தில் இல்லை என்றேன் திடமாக. நீங்கள் தவறு செய்கிறீர்கள். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது அற்புதம் தவிர வேறு என்ன? என்றார் அவர். நான் மௌனமாக இருக்க, அவரே விளக்கம் அளித்தார். போக்குவரத்துச் சமிக்ஞைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், கிடைக்கும் சந்து பொந்துகளிலெல்லாம் இந்த நெரிசலில் இவ்வளவு வேகமாக ஆட்டோ ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று விபத்துகளிலிருந்து ஆட்டோ தப்பியிருக்கிறது.நீங்கள் கவனிக்கவில்லையா? இது அற்புதம் தவிர வேறென்ன? என்றார் அவர். ஆட்டோ ஓட்டுநர்கள் துணிச்சல்காரர்கள், மாவீரர்கள் என்றேன் பெருமிதத்துடன்” (உழைப்பாளிகள்) என்றெழுதுகிறார். இது ஏதோ எதையுமே வேறுபட்டுக் காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுதப்பட்டதன்று; இது விளிம்புநிலை மக்கள் மீது கோபி கொண்டிருந்த உணர்வுபூர்வமான அக்கறையைப் புலப்படுத்துவதாகும். சென்னையின் பூர்ஷ்வா வர்க்கத்தையே பெரிதும் கோபி எழுதினார் என்றாலும், அவர்களை எழுதும்போதே, அவர்களுக்காக அன்றாடம் உழைக்கும் விளிம்பு நிலையினர் பற்றிய காத்திரமான பதிவுகளையும் செய்தார். ஒன்பதே ரூபாய்ச் செலவில் கணவன், மனைவி, மகள் எனச் சேர்ந்து சினிமா பார்த்த அனுபவத்தைத் தம் கதை ஒன்றில் காட்டுகிறார்.“டிக்கெட்டில் இருக்கை எண் இல்லை.மாநகர் பிரதான சாலைகளுள் ஒன்றில் மூன்று கலைக்கூடங்களை ஒரே கட்டடத்தில் அடக்கிவைத்துக் குளுமை வசதியில் மகிழ்ந்துகொண்டிருக்கும் ஓர்அரங்கத்தில், மூன்று ரூபாய் இருக்கைகளுக்கு இலக்கங்கள் குறிக்கப்படாதிருந்தது ஒரு பேரிடி. இருந்தாலும் மாநகர்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். எல்லாவற்றிற்கும் காரணம் தயாராக இருக்கும். காரணத்திற்கும் சப்பைக்கட்டுக்கும் துல்லியமான வேறுபாடுகள் கண்டுபிடித்து ஆய்வில் அகமகிழ்வது நேரம் கையில் கனப்பவர்களின் ஆடம்பரப் பொழுது போக்கு” (உயர்திணை – அஃறிணை = ஒரு சங்கமம்) என்கிறார் கோபி.
இது 1990களின் நிலைமையாகும். சத்தியம் காம்ப்ளக்ஸ், சங்கம் காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் என்றெல்லாம் தியேட்டர்களில் பெருங்கூட்டம் அலைமோதிய காலம் அது. இப்போதைய மல்டி பிளக்ஸ் மற்றும் மால் கலாச்சாரத்தில், கோபியின் கருத்து மேலும் துலங்கக்கூடும். இது ஒரு காட்சி. கோபி காட்டும் இன்னொரு காட்சியையும் பாருங்கள். “சீமை எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருந்தார். அவரது மனைவி அருகில் குந்தியிருந்தாள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். குசேலன் ஒரு ரிக்ஷா ஓட்டி. சமீபக் காலத்தில் அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டிருந்தது. ரிக்ஷா ஓட்டினால் வலது கால் முழுக்கத் தடித்து வீங்கிவிடும். அவருக்கு ஆரோக்கியப் பிரக்ஞை தோன்றும்போது மட்டும் பொது மருத்துவமனைக்குப் போய் வருவார். துரித நிவாரணம் ஒன்றும் கிட்டவில்லை. ஒருவேளை சொஸ்தப்படுத்திக் கொள்வதில் போதிய நாட்டம் அவருக்கு இல்லாமலிருக்கலாம். இது எனக்குச் சரிவரத் தெரியாத ஒன்று. அவருக்கு வேறு எந்தத் தொழிலிலும் பரிச்சயமில்லை. பிழைப்புக்கு என்ன செய்வது என்ற யோசனையிலேயே எந்தத் தொழிலை நாடுவது என்று புரிபடாத குழப்ப நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தார். மனைவி வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். நான்கு வீடுகளில் பத்துத் தேய்த்துக் கிடைக்கும் உணவை எடுத்து வந்து குசேலனுக்கு முதலில் கொடுத்துவிடுவாள்” ((உயர்திணை – அஃறிணை = ஒரு சங்கமம்) என்பதுதான் அக்காட்சி. இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதும்போது, கோபியிடம் ஒரு பெரும் பரிவுணர்வு சுரப்பதைக் காண்கிறோம். இந்த மன ஈரமே, ஒரு சமூகப் பணியாளராகவும் கோபியை உயர்த்துகிறது. ‘எதிர் உளவியல்’ கதையில், தன்னிடம் சிகிச்சை பெற வரும் ஒருவரிடம், பின்வருமாறு ஆலோசகர் கூறுவதாகக் கோபி எழுதுகிறார். “உங்களுக்கு நோயாளி என்ற பட்டத்தை வழங்கும் அராஜகத்தை, நான் நிச்சயம் செய்ய விரும்பவில்லை. மேலும், நீங்கள் சக மனிதன் என்ற அடிப்படையில், எனக்கு அப்படிப்பட்ட உரிமையும் கிடையாது” (எதிர் உளவியல்) என்கிறார். இதுதான் கோபி செயல்படும் மானுடத் தளம். ஓர் உச்சமான மானுடவாதி அவர். சக மனிதர்களை மனிதர்களாகவே கண்டவர்; மிருகங்களாகவோ தெய்வங்களாகவோ காணாதவர்.
சாதி வெறியும் மதப் பேயும் கோலோச்சும் நம் சூழலில், மனிதநேயம் என்பதேகூட ஒரு செலக்டிவ் குயுக்திதான். இதனால்தான் அப்பட்டமாகக் கழிவிரக்க நிலையில் நின்றே, ஆனால் அதனையும் மீறிக் கோபி மனம் கசிகிறார். “பெரிய பாறாங்கல் ஒன்றைச் சிரமம் பாராமல் தூக்கி ஒட்டுமொத்தமாக ஜனங்கள் மீது போட்டு ஒழித்துவிட்டால், விபூதியும் நாமமும் முப்புரி நூலும் சிலுவையும் சந்திரப் பிறையும் நசிந்து போய், மீண்டும் அமீபாவில் இருந்து உயிரினங்கள் தோன்றி மனித குலம் என்ற பரிணாமக் கண்றாவி தோன்றாமல் சிந்தனை, கற்பனை முதலிய சங்கடமான சமாச்சாரங்கள் இல்லாத ஒரு உயரிய குலம் தோன்றினால்தான் ஏதோ காரியங்கள் உருப்படியாக நடக்கச் சாத்தியம் உண்டு” (ஆயிரம் உண்டு) என்று கோபி நம்பினார். இந்தச் சமூகம்தான் மனநோயாளிகளை உருவாக்குகிறது என்பது, அவரது ஆழ்ந்த நம்பிக்கையின் அடித்தளமாகும். மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவில் சந்தேகமும் பொறாமையும் காழ்ப்புணர்வும் மிகும்போது ஒருவருக்கொருவர் இணக்கமற்று வாழ நேர்கிறது. பாலுணர்வும் உறவும் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுத் திரைமறைவில் ஒழுக்கமீறல்கள் வழக்கமாகும் சமூகத்தில், தனி மனிதர்களுக்கான சுதந்திரவெளி குறுக்கப்படுகிறது. இது இயல்புவாழ்வைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பையே கோபி எழுதினார். இதை அவர் எழுதும்போது, எவ்வளவு சாதாரணமான ஒரு மொழியில் பேச முடியுமோ, அவ்வளவு சகஜமாகப் பேச முயன்றார். இதனாலேயே மொழி ஜோடனைகள் அவரிடமில்லை. கூரிய சொற்களில் உறுதியான கருத்துகளைக் கோபி வெளியிட்டார். “எந்தலையிலெ மூளெயே இல்லெ. நரம்புங்க எல்லாம் அறுந்திருச்சி. குடல் போட்ற சத்தம் காது வரெக்கும் கேக்குது. சிறுநீரக நரம்புங்க, முதுகு நரம்புங்க அறுந்திருச்சி.கைநரம்புங்களும் அறுந்திருச்சி.நரம்புங்கள்லாம் இழுத்துக் கிட்டிருக்கு. கண்ணுலேயிருந்தும் காதுலேயிருந்தும் மூக்குலேயிருந்தும் உண்ணிப் பூச்சிங்க விழுந்துக்கிட்டேயிருக்கு. தலையிலேயிருந்து பேன்பேனா விழுந்துக்கிட்டே இருக்கு. தலைமுடியெல்லாம் நெட்டுக்குத்தலா நிக்குது. எப்பவும் தாகமாயிருக்கு. பல் எல்லாம் ஒண்னு ஒண்ணாக் கீழே விழுந்துக்கிட்டே இருக்கு. ஒடம்பு பூரா வலிக்குது. ஒடம்புல ரத்தமே சுண்டிப்போச்சு. ரத்தம் சுண்டுற வாசனை எனக்கு நல்லாவே தெரியுது. எங்கிட்டெ வராதீங்க. என் ஒடம்பு உங்க ஒடம்புல இருக்குற ரத்தத்தெ உறிஞ்சிடும். எல்லாமே என் ஊர் ஜனங்க எம் மேலெ ஏவி விட்டிருக்கிற சாத்தானோட வேலெ!” (உள்ளேயிருந்து சில குரல்கள்) எனக் கொரோனாவிற்கு வெகு காலம் முன்பே, கோபி ‘எங்கிட்டெ வராதீங்க’ என்று அலறுகிறாரே!
சென்னை என்ற மாநகரச் சாத்தான், கோபி போன்ற எளியோர் மீது ஏவியுள்ள கொடூர, மனச்சீர்மையைக் கெடுத்தழிக்கும் அவ்வன்முறையை எதிர்கொள்வதாகவே கோபியின் கதைகளுள்ளன. உடலுழைப்பை மதித்தல், மென்மையான சுபாவம், அன்பிற்கான ஏக்கம், பாலுறவு மீது நாட்டம், அதிகார எதிர்ப்பு, சூழலின் இறுக்கத்தை மொழிவழித் தகர்த்தல், உளச்சிக்கல்கள், உறவுச் சிடுக்குகள், அபத்த தரிசனம், நோய்க்கூறு மனங்களின் வேர் தேடல், இயல்புணர்வுத் தேட்டங்களைக் கரவின்றிப் பகிர யத்தனித்தல் எனச் சிலவாகிய கருக்களையே கோபி தொடர்ந்து தம் சிறுகதைகளில் கையாண்டார். தம்மைப் பலவாகப் பகுத்துத் தம்மைத் தாமாகவும் மற்றமையாகவும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தார். இந்த வேடிக்கை வினையாடல், காத்திரமான இலக்கியப் பதிவாயிற்று என்பதுதான் கோபியின் மொழிக் கொடையாகும். ‘மொழி அதிர்ச்சி’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். ‘மொழிப் பரிசோதனை’ என்ற பாவனையில் நிகழும் அறிவதிகாரப் போக்கைக் கடுமையாகக் கோபி மறுத்தார்.
எளிய சொற்கள் மூலமே ஆழ்ந்த அனுபவங்களைப் பொதுவாசகரிடம் கடத்திவிடலாம் என்பதுதான் இறுதிவரை கோபியின் புரிதலாயிருந்தது. “பெறகென்னங்க. இங்கிலீஷ்ல தஸ்ஸூ புஸ்ஸூன்னு நாலு வார்த்தை விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத் தானுங்களே. ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித் தானுங்க. சும்மா ஸ்டைலுக்கு நடு நடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க. இதுக்கெல்லாம் போயி, நீங்க அர்த்தம் கேட்டுக்கிட்டிருக்கீங்க!” (மொழி அதிர்ச்சி) எனக் கோபி நக்கலடிக்கிறார்.இதைப் போலவே, தமிழிலும் அர்த்தமற்ற பல சொற்பிரயோகங்கள், புனைவுகளை வழிமறித்துக் கொண்டு நிற்கின்றன. இந்த விதமான ஜால வித்தைகளைக் கோபி நம்பியவரில்லை. ஒரு முந்நூறு நானூறு சொற்களுக்குள் கோபியின் மொழிக் கிடங்கை வரையறுத்துவிடலாம். ஆனால், வெகு ஜனம் புழங்கும் அந்த எளிய சொற்களை வைத்துக்கொண்டே, சென்னையின் நிலக் காட்சிகளையும் அதற்கு முகங்கொடுக்கும் மனிதர்களையும் அவர் வரைந்து காட்டிவிடும் திறம் கலையமைதி கூடியதாகும். சுய எள்ளல், அவரிடம் ஆற்றலுடன் புழங்குவதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “அந்தக் காலத்தில் தேவர்கள் சோம பானம் அருந்தினார்கள். இப்பொழுதுள்ள நரர்கள் ரம் குடிக்கிறார்கள். நீங்கள் கதை எழுதுகிறீர்கள். எல்லாம் போதைதான். ரம் சாப்பிடுவது, சாமி கும்பிட்டுவிட்டுப் பக்திப் பரவசத்தில் மூழ்குவது எல்லாம் போதைதான் என்றார். மனிதர்கள் தப்பித்தல்வாதிகள் என்று ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார். யாராலும் தன்னைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. நான் ரம் சாப்பிட்டு என்னிலிருந்து தப்பிக்கிறேன். என் மனைவி சாமி கும்பிட்டு அவளிலிருந்து தப்பிக்கிறாள். நீங்கள் கதை எழுதி உங்களிலிருந்து தப்பிக்கிறீர்கள். எல்லாமே தப்பித்தல்கள்தான். விதங்கள்தான் வெவ்வேறு என்றார். கேட்டால், கதை எழுதுவது உணர்வுகளின் வடிகால் என்று நாசூக்காக என்னிடமே கதை விடுகிறீர்கள் என்றார் குறும்புடன். அவரைப் பேச விடுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லாமலிருந்தது” (கதையின் கதை) என்ற ஒரு புரிதலைத் தம் தரிசனமாகக் கோபி முன்வைத்தார். உணர்வுகளின் வெறும் வடிகாலா கோபியின் சிறுகதைகள்? வெறும் தப்பித்தல்களா அவை? இல்லை, எழுதும் நேரத்துப் பரவசங்கள் எனக் குறுக்கிவிடலாமா? அவருக்கு அவை எவ்வாறிருந்தன என்பது இன்று நமக்கு முக்கியமில்லை. வாசகன்தான் அர்த்தத்தைப் பிரதிக்குத் தருகிறான் என்ற பின்- நவீன வாதத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டால்கூடக் கோபியின் கதைகளுக்குப் போதை மயக்கம் தாண்டியும் பயன்கள் பல உண்டென்பதைத் தயக்கமின்றி தெளிந்துகொள்ளலாம். முதலாம் பயன்: நெடுங்கால உள அடைப்புகளைத் தூர்வாரிக் கனிவு பாய்ச்சும் கதைகள் இவை என்ற வாசிப்புப் பேரனுபவமாகும். ஓர் உளவியல் நிபுணரிடம் போய் நம் மனதைத் திறந்து வைத்தால் பெறும் பலன்களை இந்தக் கதைகள் வழியேயும் பெறலாம் என்பது இரண்டாவதாகும். மானுட வாழ்வு தரும் சுக துக்க வதைகளை அறிவது மூன்றாவதாகும். நினைவுவழிக் கடந்துவிட்ட பழங்காலத்தை மீண்டும் அசைபோட்டுக்கொண்டு அங்கே சற்று உலாவித் திரும்புதல் என்பது நான்காவதாகும். வாழ்வியல் கலையைக் கற்றறிதல் ஐந்தாவதாகும். இப்படி எத்தனையோ சொல்லலாம். சுருங்கக்கூறின், இவற்றை வாசிப்பது நம்முடனேயே நாம் பேசிக்கொள்வது போன்றதாகும்.
ஒரு பேருந்தில் நடக்கும் ஒரு சாதாரணமான (!) மீறல் காட்சியைக் கோபி எழுதும் முறையைக் கவனியுங்கள். “கொஞ்சம் போலப் படாமெ நின்னுக்கங்களேன் என்றாள் அவள். ஆமா, பஸ்ஸூலெ நீங்க சகல சௌபாக்கியங்களெயும் எதிர்பார்த்தா நடக்குங்களா என்றான் அவன். சகல சௌபாக்கியங்களெயும் செஞ்சித் தர்றதுக்கு நீங்க என்ன எம் புருஷனா என்று கேட்டாள் அவள் துடுக்குடன். அவன் பேசவில்லை. அவள் தன் மனைவியாக வாய்த்தால் எப்படியிருக்கும் என்று அசைபோட ஆரம்பித்தான்” (ஈடன் தோட்டம் தொட்டு இறையுணர்வுக் கூட்டம் ஊடாக ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை) என்று கோபி எழுதுகிறார். இதுதான் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பதாகும். இந்த ஆண் – பெண் சீண்டல் என்பது, பெரும்பாலான கோபியின் கதைகளில் இருக்கிறது. இதில் பொதுவாகப் பெண் பக்கமே நிற்கக் கோபி முயன்றுள்ளார். ஆனால், கோபியின் உலகம், முற்றிலும் ஓர் ஆணின் உலகேயன்றிப் பெண்ணின் உலகன்று என்பதும் உள்வாங்கப்படவேண்டியதாகும். பாலுணர்ச்சியின் கொச்சையான, பொது இடம் என்ற சங்கோஜமுமற்ற வெளிப்பாட்டால் கோபியின் மனம் துணுக்குறுவதையும் அவர் கதைகள்வழி அறிகிறோம். சுதந்திரம் வேறு, ஆபாசம் வேறு என்ற பிரக்ஞை இன்றைய பொது வெளியில் அதன் முழுப் பொருளில் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால், இந்த வேறுபாட்டின் நுண்மையைக் கோபியின் எழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டிவிடுகின்றன. “நண்பர் சம்பத் இடைவெளியின் முழு விவரணைகளையும் எல்லீஸ் ரோடு ஓரத்தில் நின்று என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். தூரத்தில் ஒரு இளம் ஜோடி. வடக்கத்தி. பையன் தன் வலது கையை அவளது இடுப்பில் ஆழமாகப் பதித்திருந்தான். நடுநடுவில் கையை எடுத்து அவளது பிருஷ்ட பாகத்திலும் இடுப்பின் மேல் பகுதியிலும் விரவ விட்டுக் கொண்டிருந்தான். எங்களைக் கடந்து சென்றபோதும் இதே கதைதான்” (ஈடன் தோட்டம் தொட்டு இறையுணர்வுக்கூட்டம் ஊடாக ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை) எனக் கோபி அப்படியே எழுதிக் காட்டுகிறார்.
இங்குக் கோபி இளம் ஜோடியைக் குற்றப்படுத்தக் கருதியே இப்படி எழுதியிருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டுவிடக்கூடாது.இதை இன்னொருவகையிலும் நாம் நோக்கலாம். இயல்புணர்வுகள், வீட்டுச் சூழலிலும் கல்விச் சூழலிலும் அலுவலகச் சூழலிலும் உறவுக் கூடுகைகளிலும் ஒடுக்கப்பட்டுள்ள ஒரு கலாச்சாரத்தில், இவ்விதமான தொடுநிகழ்வுகள் அரங்கேறாமல் எவ்வாறு இருக்கவியலும் என்ற நடத்தைக் கட்டுடைப்பின் பதிவாகவே இதை விளங்கிக்கொள்ளவேண்டும்.மேலும், கற்புப்புனிதம் பற்றிய பண்பாட்டுப்புனைவின் அபத்தத்தைக் கேள்விக்குட்படுத்தும் சித்திரிப்பாகவும் பார்க்கலாம். ஒட்டுமொத்தமாகக் கோபியின் கதைகளில் ‘கலாச்சாரக் கட்டுடைப்பு’ என்ற அம்சம் பிரதானமாகச் செயல் படுவதைக் காணவேண்டும். இதைப் பிரக்ஞையுடன் கோபி செய்வதும் கருதத்தக்கதாகும். இதன் இன்னொரு கோணத்தைப் பின்வரும் பத்தி வழியே அறியலாம். “என்ன தோணுது இப்போ மனசிலே?ன்னு கேட்டா. உங்களோட படுத்தா தேவலாம் போல இருக்குன்னேன். பார்க்கறதுக்கு நன்னா இருந்தா. நான் தோணினதெச் சொன்னேன். உள்ளெ போறதுக்கு முன்னாலெ அம்மா சொன்னா. டாக்டர்கிட்டெ எதெயும் மறைக்கப்படாதுன்னு. நானும் உண்மையா மனசிலெ தோணினதெச் சொன்னேன். நான் டாக்டர். நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னுட்டா. நான் உங்களெ மனசார விரும்பறேன்னு சொன்னேன். எப்படிப் பாத்த மாத்திரத்திலெயே இப்படி முடியறது?ன்னு கேட்டா. என்னாலெ முடியறதுன்னேன். நீங்க உண்மையெ மதிக்க மாட்டேளா?ன்னு கேட்டேன். சரி, சரி. இப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னுட்டா. ஒரு ஃபைல்லெ என்னமோ எழுதிண்டா. கொஞ்சம் வெளியே இருங்க. அம்மாவெ உள்ளெ அனுப்புங்கன்னா. அம்மா உள்ளெ போயி செத்த நாழி கழிச்சு வெளியெ வந்தா.கையிலெ ஒரு துண்டுக் காயிதம்.அம்மாவுக்குக் கண்ணெல்லாம் கலங்கியிருந்தது” (முடியாத சமன்) எனக் கதையைத் தொடங்குகிறார் கோபி. தம்மால் முடிந்தவரையில் பச்சையாகக் கோபி எழுதினார். பச்சை என்பதைச் சரீர இச்சைகளை எழுதினார் என்பதாக அல்லாமல், உண்மையின் உணர்வுத் தெறிப்பை எழுதினார் என்றும் நாம் வாசிக்கலாம்.
உடலுக்கும் மனத்துக்குமான இரட்டை நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார் கோபி. எவ்வளவு சுதந்திரத்துடன் தனிமனிதர்கள் வாழவியலும் என்ற கருத்தியலைத் தம் கதைகள்வழிப் பரிசோதிக்கக் கோபி விழைந்தார். ஆனால், அவரது சுதந்திரத்தின் எல்லை, அவரது நடுத்தட்டு நாகரீக வேலிகள் அனுமதித்த அளவுக்கே கோபியின் எழுத்தில் வந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.கீழே இடம்பெறும் பத்தியைப் படித்துப் பாருங்கள். “அன்னைக்கு ராத்திரி ஒருசொப்பனம் வந்தது.ஈஸ்வரி என்னோட படுத்திருந்தா.காலைல லுங்கி ஈரமாயிருந்துது. அடுத்த தரம் விமலா வந்தப்போ, அவ கிட்ட சொன்னேன். ‘சிவ சிவ’ன்னு காதெப் பொத்திண்டா. ‘மகமாயி மகமாயி’ன்னு கன்னத்துலெ போட்டுண்டா. நாளைக்குக் காலைலெ எந்திரிச்சதும் கோயிலுக்குப் போயிட்டு வான்னு சொன்னா. விமலா கிட்டெ கேட்டேன். நீதான் எம் மேல பிரியமா இருக்கியே, என்னைக் கல்யாணம் பண்ணிக்கோயேன்னு. நீ நல்லா ஆயிட்டா நிச்சயம் கட்டிக்கறேன்னா. நல்லா ஆறதுன்னு அம்மாவும் சொல்றா. விமலாவும் சொல்றா. டாக்டரம்மாவும் சொல்றா. அப்படீன்னா என்னன்னுதான் தெரியல” (முடியாத சமன்) என்கிறார். கோவிலையும் ஈஸ்வரியையும் வேண்டுமானால் இங்குக் கோபி அசைத்து ஆட்டம் காட்டியிருக்கலாம். ஆனால் அம்மா, டாக்டர், மற்றும் விமலாவின் மனோபாவங்களில் அவரால் ஒரு சிறு உடைவைக்கூடச் செய்துவிட முடியவில்லை என்பதே யதார்த்தமாகும். இதைத்தான் நடுத்தட்டு வேலிக்குள் நின்றபடியே, அதற்கு வெளியே குதிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து, கடைசி வரையில் அது வராது போய்ச் சாவது எனப் புரிந்துகொள்கிறோம். அடிக்கட்டுமானத்தை அசைப்பதற்கு ஒரு சமூக மாற்றம் தேவைப்படும் நிலையில், தனிமனிதக் கலைஞர்கள், கலாச்சார அதிர்ச்சிகளைப் பதிவு செய்வதன்றிப் பாவம் வேறு என்னதான் செய்ய முடியும்? “சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” (மகான்கள்) என்கிறார் கோபி. பரிசுத்தத்தைத் தவிர வேறு எதையும் கருதிப் பாராத இந்திய மண்ணில் காலூன்றி நின்று, இப்படிப் பேசுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்!
கலகமே கோபியின் புனைவு எழுத்துகளுக்குக் கனம் சேர்க்கிறது. எப்படியோ எல்லாம் மர்மமாக இருந்தால் சரி என்ற ஒரு சுரண்டல் மனநிலைக்கு முற்றெதிர் நிலைப்பாடு இது; மனச் சீர்மைக்கும் பிறழ்வுக்குமான மென்கோட்டைத் தகர்க்க யத்தனிக்கும் எழுத்து இது. “திருவான்மியூர் போவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன். வலது பக்கம் திரும்பிப் பேருந்து வருகிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன். குடிசை மாற்று வாரியக் கட்டடங்களுக்கு இடையில் மாலைச் சூரியன். அற்புதமான ஆரஞ்சு வட்டம். சற்றைக்கெல்லாம் மொத்தம் மூன்று சூரியன்கள் தென்படலாயின. மூக்குக் கண்ணாடியைக் கழற்றிப் பார்த்தேன். ஒரு சூரியன்தான் தென்பட்டது. கண்ணாடியை அணிந்து கொண்டேன். இப்பொழுது மறுபடியும் மூன்று சூரியன்களைப் பார்க்க முடிந்தது. கண்ணாடியைக் கழற்றாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு பேருந்து வந்து நின்றது. ஒரு பேருந்துதான். மூன்றல்ல. ஒரு பெண் நடந்துபோய்க் கொண்டிருந்தாள். மூன்று பெண்களல்ல” (எப்படியோ எல்லாம் மர்மமாக இருந்தால் சரி) என்கிறார். இங்கு மூக்குக் கண்ணாடி, எதனின் குறியீடு? பார்வைத் தெளிவா, பார்வைக் குறைவா? மாலைச் சூரியன் மட்டும் மூன்றாய்த் தெரியும்போது, நிற்கும் பேருந்தும் நடக்கும் பெண்ணும் மட்டும் ஏன் மூன்றாகத் தெரிவதில்லை? நம் தெளிவையும் பிறழ்வையும் கோபி பகடி செய்கிறாரோ? இயற்கைக்கு முன்னே மனிதர் ஒன்றுமில்லை எனக் குறிப்புணர்த்துகிறாரோ? இத்தகைய உளத்திறப்புகள் கோபியின் கதைகளெங்கும் மொட்டவிழ்கின்றன.
வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுகளிலேயே வாழ நேர்ந்தவர்களின் வாழ்க்கைப் பாடுகளைப் படம்பிடிப்பதில் கோபி கைதேர்ந்தவராவார். “ஜட்டியோ ப்ராவோ காணாமல் போனால் பக்கத்துப் போர்ஷன்காரர்களிடம் கேட்பது மிகவும் சிரமமான விஷயம்” என, ‘மிகவும் பச்சையான வாழ்க்கை’ சிறுகதையில் எழுதுகிறார். “முரளி ஜட்டி ஒங்கதுல கலந்திருக்கான்னு பாரேன்” என்கிறாள் வீட்டுக்காரம்மாள். இதற்குக் குடித்தனக்காரி என்ன பதில் சொல்கிறாள்? “கடைசியாக என் மனைவி அடித்துச் சொல்லிவிட்டாள். நான் பிறர் ஜட்டியை அணிவதில்லை என்றும், நான் நானுண்டு என் ஜட்டி உண்டு என்று என் பாட்டுக்குக் கிடப்பவன் என்றும், யார் ஜட்டிக்கும் ஆசைப்படாதவன் என்றும், பிறர் ஜட்டி விஷயத்தில் தலையிடாதவன்” என்றும் பதிலுரைக்கிறாள். இதைக் கேட்டுக்கொண்டு, வீட்டுக்காரியா சும்மாயிருப்பாள்? “புதுக்கருக்கு அழியாத புத்தம் புது ஜட்டி. பச்சைப் பசேல் என்று நிறம். ஒரே முறைதான் முரளி அணிந்திருந்தான். அதற்குள் யார் கண்பட்டதோ இப்படி ஆகிவிட்டது…. குடித்தனக்காரர்கள் அல்பங்கள், திருட்டுப் புத்தி உடையவர்கள், ஜட்டி திருடின கை அழுகும். இப்படி வாய்க்கு வந்தபடி ஏதேதோ வசவு மீண்டும். கடைசியாக ஒரு போடு, ‘இருக்கற ஆம்பளைங்க லுங்கியத் தூக்கியா பார்க்க முடியும்?” (ஜட்டி) என்கிறாள் வீட்டுக்காரி. ‘இவ்வளவு பச்சையான ஒரு வாழ்க்கையா இது?’ எனக் கதைசொல்லி அதிர்ச்சியடைகிறார். “ஒருவேளை அந்த மாதிரி நடவடிக்கை ஏதாவது மேற்கொள்ளப்பட்டுவிடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது. ஒருவிதக் கலவரத்துடன் தான் வீட்டில் இருக்க வேண்டி வருகிறது. மிகவும் பாதுகாப்பாகப் பச்சை நிற ஜட்டிகளை வாங்குவதில்லை” என்கிறார். இங்கு ஜட்டி என்பது, ஒருவகையில் குறியீடே. ஜட்டிபோல் எத்தனையோ அந்தரங்கங்களுக்குத் துளி மதிப்புமற்ற மிகவும் பச்சையான ஒரு வாழ்வே, அனைவருக்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது என்கிறார். மிகவும் முக்கியமான ஒரு குரல் மட்டுமில்லை இது; மிகவும் நேர்மையான ஒரு குரலுமாகும். மனிதர்களைத் திருத்துவது என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர் கோபி. “ஒருநபரை அப்படியே மன அளவில் ஏற்றுக் கொள்வதுதான் என் பழக்கம்…. ஒரு ஹோட்டலில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறோம். இளம்பெண் ஒருத்தி எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் முகம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. ஆனால், அந்த மூக்கு மட்டும் நன்றாக அமையவில்லை. அதை நாம் என்ன செய்ய முடியும்?” (இனிமையான வக்கிரம்) எனக் கோபி கேட்பதால், இயற்கையை ஏற்றுக்கொள்வது என்ற ஒரு தத்துவ நிலைப்பாட்டிற்குள் நின்று அவர் இயங்குவதைப் புரிந்துகொள்கிறோம். மூக்கை ஆப்பரேஷன் செய்து மாற்றியமைத்துக் கொள்ளும் பிரபல நடிகைகள் நிறைந்த இன்றைய உலகில், செயற்கையை மறுத்துச் சாதாரணத்துவத்தைக் கோபி வலியுறுத்துகிறார். இதன் நீட்சியாகவே, “பிறருக்குச் செய்யும் நல்ல காரியங்கள், உபகாரங்கள் முதலியன மனிதநேயத்தின் வெளிப்பாடுகளாகத் தோன்றினாலும் அவை அடிப்படையில் ஒருவிதப் பயங்கர சுயநலம். நம் மனதைச் சாந்தமாக வைத்துக்கொள்ள நாம் செய்துகொள்ளும் சுய சேவைகள்” (ஒவ்வாத உணர்வுகள்) என்றும் விமர்சிக்கிறார்.
இவ்வாறு மனத்தைச் சாந்தப்படுத்திக் கொள்வதற்காக மனிதன் தரும் விலை அதிகம் என்பதும் கோபியின் நிலைப்பாடாகும். “சுதந்திரத் தொடர்புபடுத்தல் உத்தி. சிக்மண்ட் ஃப்ராய்ட். தூண்டுதல் வார்த்தை, கத்தி. பதில் வார்த்தை, கொலை. ஏன் காய்கறி என்ற வார்த்தை வரவில்லை? அகிம்சை ஓர் உண்மையின்மை. வன்முறை இயல்பான ஒரு மனிதத்தன்மை. பண்பாடு வன்முறையை அமுக்கி விடுகிறது” (பீடி) என்கிறார் கோபி. அப்படியெனில், மனித வன்முறையை ஆதரிக்கிறாரா கோபி? இல்லை. “நான் ஒங்களெ அறெஞ்சா எனக்கு வலிக்காது. ஒங்களுக்குத்தான் வலிக்கும்”; “அங்கெதான் நீங்க தப்புப் பண்றீங்க. என்னெ அறெஞ்சதெ நெனைச்சி ஒங்க மனசுல ஒரு வலி ஏற்படும். அப்பக்கூட வலி ஒங்களோடதுதான்” (அபத்த இலக்கியம் என்ற வகைமையில் இரண்டு சிறுகதைகள்) என்ற தெளிவோடுதான் கோபி செயல்பட்டார். பண்பாடு என்ற பெயரின் கீழ் அமுக்கப்படும் உணர்வுகளுக்கான சுதந்திரவெளியைக் கோபி கோரினார். போலிப் பாவனைகளையும், ஜோடனை உணர்ச்சிகளையும், வெற்றலங்காரச் சொற்களையும் மேற்போர்வையான அகிம்சையையும் நிராகரித்தார். கொடிய ஒட்டுண்ணிகளாகத் தொழிற்படும் மனிதர்களின் நடுவில், “என்ன பயம்? நான் ஒம்மேலெ எந்த ஒரு விசேஷ சுதந்திரத்தையும் எடுத்துக்க மாட்டேன். இன்னும் பச்சையாச் சொல்லப் போனா நா ஒன்னெ நிச்சயமாக் காதலிக்க மாட்டேன். வாழ்க்கையில எனக்கு ஏற்பட்டிருக்கிற விரக்தியெப் போக்கிக்கிறதுக்கு ஒன்னெ வடிகாலாப் பயன்படுத்திக்க மாட்டேன்….. நீ என் கிட்டெ ரொம்பவும் பாதுகாப்பா ஃபீல் பண்ணலாம்” என்ற பரிவான ஒரு குரலையே பதிவுசெய்தார் (அவலம்). எனினும், மனிதர்களின் முகத்திரைகளைக் கிழித்து உண்மையைக் காட்டுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். “ஊரிலிருந்த ஒரு பெரிய பெருமாள் கோயில் தர்மகர்த்தாக் குழுவில் பாட்டி ஆயுள் அங்கத்தினள். சுளையாய்ப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இந்தப் புனிதப் பதவியைப் பெற்றிருந்தாள்” (தெய்வீக அர்ப்பணம்) எனப் பக்திக்குப் பின்னிருக்கும் பெரிய ஊழலைப் பகிரங்கப்படுத்தினார். சரி. கோபியின் அடிப்படையான கருத்தியல்தான் யாது? “யதார்த்தத்தை உண்மையிலேயே யாரும் கண்டதில்லை. தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர்” என்கிறார். உதவி செய்கிறவர்களின் உளவியல் பற்றியும் கோபி நன்கறிந்திருந்தார். “சயானி தியேட்டருக்கு எந்தப்பேருந்து போகும் என்று கேட்டால், தட எண்ணைத் தெரிவித்துவிட்டு வழிகாட்டுதல் தொகையாக ஐம்பது ரூபாய் கேட்டால் எப்படியிருக்கும்?” (வயிறு) என்னும் வெளிப்படைக் கூர்மையே கோபி. “நேர்மை எனக்குப் பிடிக்கும். அது நற்பண்பு என்பதால் அல்ல. மன உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்பதால்தான்” (எண்கள் – எண்ணங்கள்) என்கிறார் கோபி.
கோபிக்குப் பாவ – புண்ணிய நம்பிக்கைகள் கிடையாது. ஆனால், மன உறுத்தலின்றி நிம்மதியாக வாழ்வதற்கு அவர் பிரயத்தனப்பட்டார். “ஏக்நாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும் அசிங்கமாகவோ அநாகரீகமாகமோ கொச்சையாகவோ பச்சையாகவோ விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை” (புயல்) என்றெழுதுகிறார். இங்கு அசிங்கம், அநாகரீகம், கொச்சை, பச்சை, விரசம்…. இல்லாத ஒரு வாழ்வையே வாழத் தகுதியுள்ள வாழ்வாகக் கோபி மதிப்பிடுகிறார். ஆனால், இந்திய யதார்த்தம் எவ்வாறுள்ளது? “பிரச்சனைகள்போல் எல்லாம் வாழ்க்கையில் பழகிப்போய் விடுகிறது. மனிதன் எந்தச்சூழலுக்கும் பழக்கப்பட்டுப் போய்விடுகிறான்” (இரு உலகங்கள்) என்கிறார் கோபி. இதற்கெதிரான ஒரு விழிப்புணர்வுதான் என்ன? “உன்னதத்துக்குக் காசு கொடுப்பதன் மூலம் அதை நான் கொச்சைப்படுத்திப் பழையபடிக்கு அயோக்கியப் பீடத்திலேயே அமர்ந்துவிடுவேன். ஒருமுறை ஓர் எதிர்மறை நிலையிலிருந்து பிறழ்ந்த பிறகு, திரும்பவும் அங்கே உலாவுவது என்பது பழைய அழுக்கை மீண்டும் உடம்பில் பூசிக் கொள்வதாகும்”(விழிப்புணர்வு) என்கிறார்.‘வாழ்விலிருக்கும் நிறைய வாஸ்தவங்களை’க் கண்டு மிரளாது, அவற்றைத் தெளிந்துகொள்ளும் ஆவலே அவரிடமிருந்தது. மனத்தில் விகல்பம் தோன்றும்போதும், வியாகூலங்கள் நிரம்பும்போதும், சஞ்சலங்கள் சஞ்சரிக்கும் போதும், அடிப்படையான சமாச்சாரங்களிலேயே நாம் கிடந்துழலும்போதும், நம் மனது குறுகுறுக்கும்போதும், தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டுச் சலிக்கும்போதும் சுய இரக்கம் கொள்வதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டவர் கோபி. ஏனெனில், “சுய இரக்கம், மனித முன்னேற்றத்தின் முதல் விரோதி” என்ற ஞானம் அவரிடம் வேரோடியிருந்தது (போதை). மனித உறவுகளைப் பெரிதாகக் கருதிக் கோபி போற்றினார்; தோழமையைப் பவித்திரமாக உணர்ந்து வணங்கினார். “நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே” (இதுவும் சாத்தியம்தான்) என்றும், “வாழ்க்கை என்பது தொடர்ச்சியான சாதுரியமான சமரசங்கள். இந்தச் சமரசங்களுடன் உங்கள் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதுதான் விவேகமானது” (உயிர்ப்பு – நாட்குறிப்புப் பதிவுகள்) என்றும் கோபி எழுதி வைத்தாலும், நிர்ப்பந்திக்கப்பட்ட உறவுகளுடன் ஓர் அவிவேகியாகவே அவர் வாழ்நாள் முழுதும் போராடி மடிந்தார்.
மாநிலக் கல்லூரியில் உளவியல் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்ற கோபி, உள ஆலோசனைத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். தி.நகரில், நண்பர்களுடன் சேர்ந்து உள ஆலோசனை மையமும் நடத்தியிருக்கிறார். புரசைவாக்கத்தில், புகழ்பெற்ற மனநல மருத்துவரான சாரதா மேனனிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். அங்குக் கவிஞர் ஆத்மாநாம் சிகிச்சை பெற்றபோதும் கோபி பணிசெய்திருக்கிறார். பல சமூகப் பணித் திட்டங்களில் திறம்பட உழைத்திருக்கிறார். முப்பதாண்டுக்கும் மேலான இவ்வித நேரடி அனுபவங்கள், மனிதர்களைப் பற்றிய அவரது பார்வையில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளன. ஒழுங்கு, பிறழ்வு, சீர்மை, சிதைவு, இயல்பு, மீறல் போன்ற சொற்களின் மரபுவழிப் பொருளைத் திருகிப் பல கதைகளைக் கோபி எழுதியிருக்கிறார். சென்னையின் மையப் பகுதி, புறநகர்ப் பகுதி என இரண்டிலுமே உழன்றிருக்கிறார். குடும்ப அமைதியில் அவ்வப்போது குறுக்கிடும் பதற்றங்களையும் உளைச்சல்களையும் பெரிதும் முயன்று கடந்திருக்கிறார். இவ்வாறு கடப்பதற்குச் சென்னை வீதிகளில் இழுபட்ட அலைச்சலும் அவருக்குப் பயன்பட்டிருக்கிறது.
உப்புக்கும் புளிக்கும் கோபி போராடியபோதிலும், ஓரிடத்தில் அமர்ந்து நிறைவாகவும் பொறுமையாகவும் அவரால் எழுதவே முடியாதபோதிலும், மானுட மனம் தொடர்பான கோபியின் இடையறாத தேடல்கள், அவரது கதைகளில் ஒரு சுயமான கண்டடைதலைத் துலங்கவைத்துள்ளன. கோபியின் கதாமாந்தர்கள், புறத்தோற்றத்தில் பெருநகர ஜீவிகளே ஆனாலும், தம்முள்ளாழத்தில் கட்டுப்பாட்டுக்கு முற்றெதிரான கற்காலக் குடிகளேயாவர். ஈர்ப்பும் மீறலும் வலியும் கசப்பும் அவர்களைப் பின்தொடர்கின்றன. இவற்றை எவ்வளவு தூரம் மானுடர் அமுக்கிக்கொள்கிறார்கள் என்பதையும், இவை பீறிடும்போது எத்தனை தூரம் இசைகேடாக இவை குரூரப்படுகின்றன என்பதையும், சென்னைப் பின்னணியில், எதிர்மரபான ஒரு மொழியில் கோபி கதைக்கிறார். இத்தகைய கதையாடலில், ஒன்றின் நிரப்பியாகப் பிறிதொன்று மாறும் அபத்தத்தைத் திணையும் உணர்வுமாக எதிர்கொண்டு, காலத்தையும் வெளியையும் கணப்போதில் கடந்துவிட முனையும் கோபிகிருஷ்ணனின் எழுத்துக்குச் சென்னையும் தமிழும் தீபம் பிடிக்கின்றன. (கோபிகிருஷ்ணன் படைப்புகள் (முழுத்தொகுப்பு), முதல் பதிப்பு : 2012, நற்றிணை பதிப்பகம், சென்னை).
Sirisharam08@gmail.com