”ஒன்னுக்குப் போற எடத்துல தேள் கடிச்சிருச்சாம். புள்ள பொழைக்குமா பொழைக்காதானு தெரியலையே…”  முணுமுணுத்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்தார்கள் அங்கு வந்தவர்கள் பலர்.

மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் வாசலில் நின்றுகொண்டு மாரிலும் வாயிலும் அடித்துக்கொண்டு கதறிக்கதறி அழுது கொண்டிருந்தார்கள் மாமியாரும் மருமகளும்.

பிறப்புறுப்பில் தேள் கடித்த வரலாறு அந்த மருத்துவமனைக்கே புதிதுதான்.

அறையின் படுக்கையில் கிடக்கிறாள் அன்புக்கொடி. விஷமுறிவுக்காக அவளுக்கு ஊசி போட்டிருக்கிறார்கள். அரைமயக்கத்தில் ஏதேதோ உளறுகிறாள். நினைவுகள் அவளை அலை அலையாய்க் கூச்சலிட்டுக் கொல்கின்றன.

அமைதி. அமைதி. அமைதி.

அறையின் நிசப்தத்தில் இப்போது அவள் அவளிடமே பேசிக் கொண்டிருக்கிறாள்.

“ம்ம்மா…. வயசுக்கு வர்ரத எப்டிமா கண்டுபிடிக்கிறது?’’

அடிக்கடி யோசித்துக் கொண்டிருக்கும் கேள்வி என்றாலும் திடீரென கேட்டுவிட்டாள் அன்புக்கொடி.

“அதெல்லாம் வர்ரப்போ நீயே தெரிஞ்சுக்குவே… என்ன இப்ப அவசரமாம்?’’

பின் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு  ஈர்கோலியால் இரண்டு இழு இழுத்துக்கொண்டே பதில் சொல்கிறாள்  அன்புக்கொடியின் அம்மா.

“ம்மா… சொல்லுமா…. பவானி மட்டும் வயசுக்கு வந்துட்டான்னு சடை பின்னி போட்டோ புடிச்சிருக்காங்க…எனக்கு?’’

கையில் இருந்த ஈர்கோலியை கீழே வைத்துவிட்டு தன் நான்கு விரல்களால் அன்புக்கொடியின் தலையை ஒரு தட்டு தட்டினாள் அவள் அம்மா.

“இப்ப அது ஒண்ணுதான் உனக்கு அவசரமாடி. வயசுக்கு வந்த பொண்ணை வீட்ல வச்சிருக்குறதும்,ஒரு படி நெருப்பை அள்ளி மடியில கட்டிட்டு அழறதும் ஒண்ணுதான்’’ வந்த கோபத்துக்கு ஈர்கோலியை இறுக்கி அழுத்த பட பட வென  சப்தம் ஒலித்தது. ஈர்கோலியில் ஈரும் பேனும் நசுங்கும் சப்தம் பேன்கடி நமிச்சலிலும் சுகமாயிருக்கும்.

“ஊருபட்ட பேனும் ஈரும் இருந்தா பாக்குறவங்க என்ன சொல்வாங்க? நான்தான் உன்ன தண்ணி தெளிச்சு விட்டேன்னு தானே சொல்வாங்க. அதுவும் கெழவி மட்டும் இப்டி பேனும் ஈருமா  பாத்துச்சு… என் தலைய திருகி ஒலையில போட்டுரும்’’

அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டைகள் இரண்டை வெளியில் இழுத்துப் போட்டவள் கட்டையில் திகுதிகுவென கணன்றுக் கொண்டிருந்த நெருப்பைத் தட்டி இரும்புத் தாலாவில் போட்டுக் கொண்டாள். தாலாவுக்கு மேல் இரும்பு சல்லடையைக் கவிழ்க்கவும் நெருப்பின் சூடு சல்லடைக்கும் பரவியது. ஈரையும் பேனையும் தலையிலிருந்து வாரிக்கொண்டே இருந்தால் அவை தரையில் விழுந்து நாலாப்புறமும் பரவிப் போகும். ஏதோ பத்து பதினைந்து பேன் தான் என்றால் கட்டைவிரல் நகக்கண்ணாலேயே கூட குத்தித் தீர்த்துவிடலாம். இது நூறு இருநூறைத் தாண்டும் போல. அவ்வளவையும் குத்தித் தீர்க்க முடியாதென்பதால்தான் இந்த நெருப்பு சல்லடை யுக்தி.

அன்புக்கொடியின் பின் பக்கமாக அவள் தலைமுடி விழும் இடத்திற்கு நேராக இந்த நெருப்பு சல்லடையை வைத்துவிட்டால் வாரியெடுக்கும்போது  தலை முடியில் இருந்து கொட்டும் பேன்கள் சலசலவென சல்லடையின் மீது விழுந்து சூடு தாங்காமல் செத்துப் போய்விடும். தெருத்திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் கிழவி எழுந்து வருவதற்குள் பேனையெல்லாம் வாரித்தள்ளிவிட திட்டம் போட்டாள் அம்மா. செக்காடிய தேங்காய் எண்ணெயுடன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து இறுக்கப் பின்னல் போட்டு ரிப்பன் வைத்து மடித்துக் கட்டினாள். கீழே சிதறிக் கிடக்கும் முடிகளைச் சேகரித்து ஓட்டுச் சந்தில் செருகினாள். இன்னும் கொஞ்சம் சேர்ந்தால் சிக்குமுடிகாரன் வந்தால் அவனிடம் பொந்தாகக் கொடுத்துவிட்டு சவ்வுமிட்டாய் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் தன் பங்குக்கு அங்குமிங்கும் பரவிக்கிடந்த முடிகளை சேகரிக்கத் தொடங்கினாள் அன்புக்கொடி.

“அய்யே பேன்காரி …பேன்காரி… ‘’ என கத்திக் கொண்டே பின்பக்கமாய் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத் தள்ளப் போனான் அன்புகொடியின் அண்ணன் பைரவன்.

“அடச்ச்சீ போடா’’ “ம்ம்மா… பாரும்மா இவன… இவன் தலையில மட்டும் பேனே இல்ல… நானும் அவனை மாதிரி குட்டியா முடி வெட்டிக்கப் போறேன். எங்க கிளாஸ்ல கூட ஒரு பொண்ணு பாஃப் கட்டிங் வெச்சிருக்கா…பேன் வாரி பேன் வாரி தலையெல்லாம் எரியுது.’’

“அடி செருப்பால… பொட்டப் பொண்ணு மாதிரி இருடி. உன் வயசுல எல்லாம் எனக்கு சூத்தாமட்டைக்குக் கீழ வரைக்கும் முடி இருந்துச்சு’’ சொல்லிக் கொண்டே  துணி மூட்டையை எடுத்துக் கொண்டு கொல்லைப்பக்கமாகப் போனாள் அன்புக்கொடியின் அம்மா.

ஐந்து வருடங்களுக்கு முன்பு  கொல்லையில் நட்டு வைத்த தென்னை மரம் பாலைவிட்டிருந்தது. தென்னம்பாலையைப் பார்த்ததும் துணிமூட்டையைக் கீழே போட்டுவிட்டு ஓடிப்போய் கற்பூரம் எடுத்துக் கொண்டு வந்தாள் அம்மா. மரத்தடியில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்திவிட்டு மரத்தை அன்னார்ந்துப் பார்த்தாள்.

“கெங்கம்மா தாயே முளைவிட்ட பிள்ள நல்லா காய்க்கணும். ஆரு கண்ணும் படாம பாத்துக்க தாயீ’’ கன்னத்தில் இரண்டு முறை போட்டுக்கொண்டு மரத்தடியில் விழுந்து கும்பிட்டு எழுந்தாள். அம்மா எதற்காக விநோதமாய் தென்னைமரத்தைக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள் என வியப்பாய் இருந்தது அன்புவுக்கு.

தூக்கத்திலிருந்து எழுந்துவந்த கிழவி வாய் கொப்பளிக்க நடுவாசலுக்கு வந்து நின்றாள்.

“கெழவி… கெழவி… அம்மாவ பாரேன் தென்னமரத்துக்குப் போய் கற்பூரம் ஏத்தி கும்டுட்டு இருக்கா.’’ ஓடிவந்து சொன்னாள் அன்புக்கொடி.

“தொடப்பக்கட்ட… எத்தினிவாட்டிக்குச் சொல்றது? கெழவியாம் கெழவி…. உன் ஆத்தாள பெத்த கெழவி மட்டும் அம்மாச்சி. நான் உனுக்கு கெழவியா?’’ கதையை எங்கெங்கோ இழுத்துக் கொண்டுபோனாள் கிழவி.

“சரி  அப்பாச்சி. அம்மாவ வந்து பாரேன் ‘’ என்று கிழவியை இழுத்துக்கொண்டு போய் மரத்தடியில் நின்றாள். அழகாக குருத்துவிட்ட பாலையைக் காட்டி `மரம் வயிசுக்கு வந்துருச்சு’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனாள் அம்மா.

தன் ஒரு கையை கண்ணுக்குக் கூரையைப் போல் வைத்து மரத்தை அன்னார்ந்துப் பார்த்துவிட்டு கிழவியும் உள்ளே வந்தாள். ஏழு நாள் கழிச்சி மரத்துக்கு மஞ்சப் பூசி தண்ணி ஊத்தி புட்டு சுத்தணும். ரேஷன் கடைல குடுத்த பொடவ இருக்குல்ல… அத  எடுத்து மரத்துக்குக் கட்டு வுடு’’ என்று மருமகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ச்சே ..இந்த மரம் கூட வயசுக்கு வந்துருச்சு. நான் எப்ப வர்ரது. எனக்கு எப்ப சடை பின்னி போட்டோ புடிக்கிறது?’’ குழம்பிக் கொண்டே நடந்தாள் அன்புக்கொடி. “ ஒருவேள மரத்துல பாலை விட்ட மாதிரி நமக்கும் தலையில கொம்பு முளைக்குமா? எதை வச்சு கண்டுபிடிக்கிறாங்க? ’’ பேசாம பவானியிடமே கேட்டுவிடலாம் என முடிவெடுத்தாள்.

பேச்சுப்போட்டியில் பெயர் கொடுத்திருப்பது சட்டென நினைவுக்கு வரவும்  எழுதி வைத்தப் பேப்பரை எடுத்துக்கொண்டு தெருத்திண்ணைப் பக்கம் ஓடினாள்.

“ஆன்றோரே சான்றோரே… என் போன்றோரே!

அனைவருக்கும் அன்பு வணக்கம்!

அன்னைத்தமிழை வணங்கி 

உங்கள்முன் தொடங்குறேன் என் கன்னிப் பேச்சை!

பெண்விடுதலையே மண்விடுதலை. பெண்களின் கைகளை விலங்குகளால் பூட்டி வைப்போரும் மனிதர்கள் அல்லர். விலங்குகளே! `மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்றான் பாரதி. ஆனால் இன்றோ மாதரையே கொளுத்தும் இழிவல்லவா நடந்துகொண்டிருக்கிறது?’’

திண்ணையின் முழுநீளம் வரைக்கும் நடந்து நடந்து மனப்பாடம் செய்துகொண்டிருந்தாள் அன்புக்கொடி. சுத்துப்பட்டு வீடுகளில் அன்புகொடியின் வீடு மட்டும் கொஞ்சம் விசாலமாக இருக்கும். காற்றோட்டமான தாழ்வாரம். நீளமான பெரிய திண்ணைகள். நன்கும் வேய்ந்த நாட்டு ஓட்டுக் கூரை. பின்பக்கம் ஒரு சிறிய கிணறும் கொல்லையுமாக பெரிய வீட்டுக்கான அழகுடன் தனித்திருந்தது. வீட்டில் ஏதாவது விஷேசம் வைத்தால் மொத்தமாக 300 பேர் வரைக்கும் கூட உட்கார்ந்து பார்க்கலாம். பந்தி வைக்கலாம். அன்புக்கொடியின் அப்பா அம்மாவுக்குக் கூட அந்த வீட்டில் தான் கல்யாணம் நடந்திருக்கிறது. பிறகு அவளுடைய தாத்தா இறந்தது போக, அந்த வீட்டில் நல்லது கெட்டது எதுவும் அடிக்கடியும் நிகழ்ந்துவிடவில்லை. அடுத்த விஷேசம் என்றால் அது அன்புக்கொடி வயசுக்கு வந்தால் செய்யப்போகும் மஞ்சள் நீராட்டு விழா தான்.

பவானிக்கு மஞ்சள் நீராட்டுவிழா செய்த போது அவள் கன்னம் இரண்டிலும் சந்தனம் பூசி இருந்தார்கள். தனக்கும் அவ்வாறு பூசினால் எப்படி இருக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாமல் பூசிப்பார்த்து ரசித்துக் கொள்வாள். பவானி ஏன் வயசுக்கு வந்தபிறகு தாவணி போட்டுக்கொண்டாள் என்று பலமுறை யோசித்துப் பார்த்தாள். வயசுக்கு வந்தவுடனே டிரெஸ்ஸு கூட மாறிடுமோ… அப்படி என்னதான் இருக்கு இந்த வயசுக்கு வர்ரதுல்ல. மண்டையைப் பிராண்டிக் கொண்டாள். அந்த நேரமாக

“சார் போஸ்ட்’’ என்று ஒரு தபாலை வீசிவிட்டுப் போனார் தபால்காரர். அந்த போஸ்ட் கார்டின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி இருந்தது.

`அன்புள்ள அம்மா, அண்ணன் அண்ணிக்கு…

இங்கு யாவரும் நலம். உங்கள் அனைவரின் நலமறிய ஆவல். 

நல்ல செய்தி நடந்திருக்கிறது. இளவெயினி பெரிய பெண் ஆகிவிட்டாள். இங்கு மாமாவுக்கு உடம்பு முடியாமல் இருப்பதால் நேரில் வந்து அழைக்கமுடியவில்லை. இதையே நேரில் வந்து அழைத்ததாக பாவித்துக் கொள்ளவும்.உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு ,

தங்கை பூங்காவனம்.

கடிதத்தை அன்புக்கொடி சத்தம் போட்டுப் படிக்கவும் கிழவியும் அவள் அம்மாவும் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டார்கள். “ உம்மவள விட சின்னவ அவ…மடமடன்னு வந்துட்டா போல. உம் பொண்ணுகூட  மாரும்கீருமா வந்துட்டு இருக்கா… இப்பவோ அப்பவோனு வந்துடுவா பாரு’’ என்று  சொல்லிக்கொண்டே கிழவி, கட்டி வெல்லத்தை எடுக்கப் போனாள். குழவிக்கல்லால் ஒருபோடு போட்டு சில்லுகளாக்கி மருமகளுக்கும் பேத்திக்கும் கொடுத்துவிட்டு தானும் கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டாள்.

“ஓ அப்ப மாரு பெருசானா தான் வயசுக்கு வருவாங்களா… அது இன்னும் எவ்ளோ பெருசான பிறகு கண்டுபிடிப்பாங்களோ தெரியல.’’ சில கேள்விகளுக்கு எப்போதும் விடை கிடைக்காது என்பதுபோல் கீழ் உதட்டை மட்டும் நெக்கித்தள்ளிக்கொண்டு புதிர் புரியாமல் பாவமாய் நகர்ந்துபோனாள்.

கிழவி கொடுத்த வெல்லம் ஏதோ செய்திருக்க வேண்டும் போல. அடிவயிறு உப்பிக் கொண்டு இருப்பது போல் தெரிந்தது. ரோஸ் கலரில் பாலிஸ்டர் பாவாடையும் அதில் இருந்த நீல நிற பூவுக்கு மேட்சிங்காக முழுக்கைச் சட்டையும் போட்டிருந்தாள் அப்போது. தொட்டியில் தண்ணீர் நிரப்பச் சொல்லி கிழவி கத்திக் கொண்டே இருந்தாள். சைக்கிளை எடுத்துக்கொண்டு போன பைரவனும் அவன் அப்பாவும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள். அப்பா துண்டையும் பக்கெட்டையும் எடுத்துக் கொண்டு கொல்லைபுறம் போனார். பைரவன் தான் கீழே விட்ட பம்பரத்தை எப்படி கையில் ஏற்றி வைத்து விளையாட்டு காட்டலாமென பல முறை முயற்சி செய்து பார்க்கிறான்.

கிழவி மறுபடியும் கத்துகிறாள். “யாராவது தண்ணி பிடிச்சி தொட்டியில ஊத்தக் கூடாதா..என் சாவு எடுக்குறதுக்குனே இந்த வூட்ல இருக்குங்க”

” எதுக்கு இப்ப கத்துறது? மாவு ஆட்டிட்டு வரன்னு தான சொன்னன்”

“ஏய் அன்பு … கூட மாட வந்தா என்ன? வயசு பொண்ணு நாலு வேலை தெரிஞ்சிக்க வேணாம்” கிழவி தன் மீது காட்டிய கோபத்தை எல்லாம் மகளின் மீது காட்டினாள் அன்பின் அம்மா.

அவள் கத்தியக் கத்தில் தொட்டியை மெதுவாக நிரப்பிவிட்டு தாழ்வாரத்தை நோக்கி ஓடினாள் அன்பு. ரோஸ் கலர் பாவாடையில் சிவப்பாக ஏதோ தெரிந்தது.

” ஏ நில்லு இங்க வா பாப்போம்”

அம்மா அழைக்கவும் திரும்பவும் வந்தாள் அன்பு. நினைத்த மாதிரியே அது நடந்துவிட்டது.

“அப்டி இங்கயே ஒரு ஓரமா நில்லு. எங்கியும் போகாதே”

அம்மா கிழவியிடம் போய் நின்றாள்.”அன்பு பெரிய மனுஷி ஆகிட்டா”  என்றாள். அதுக்குள்ள இவளும்  வெல்லக்கட்டி கேக்கிறாளா? என்று சொல்லிக்கொண்டே மஞ்சள் நீராட்ட ஏற்பாடுகள் செய்ய எத்தனித்தாள்.

 

“தாய்மாமனுக்கு சேதி சொல்லி அனுப்புங்க. தென்னை ஓலையில குடிசை கட்டணும். 15 நாள் ஆகுற வரைக்கும் குடிசையை விட்டு வெளிய வரக் கூடாது. துணி மணி சோப்பு சீப்பு எல்லாம் தனிதான். யாரும் தொடக்கூடாது. தட்டுல சோறு போட்டு தூரமா வச்சிரணும். மஞ்சத் தண்ணி ஊத்துறதுக்கு கட்டுக்கழுத்திங்க 11 பேரை கூட்டியாந்து இப்ப தண்ணிய ஊத்தி குடிசையில விடுவோம்.பெறவு சொந்தபந்தம்லாம் சேர்ந்து ஆளுக்கொரு நாளுக்கு ஆக்கிப் போடட்டும். பாஞ்சாம் நாளு ஊரு புட்டு சுத்தி வூட்டுக்கு கூட்டிப்போம்.”  கிழவி மூச்சுவிடாமல் சாங்கிய சம்பிரதாயங்களை அடுக்கினாள்.

அன்புவுக்கு இப்போதுதான் வயதுக்கு வந்தது பற்றி புரிந்துவிடுகிறது.

“பாவாடை நனைஞ்சா தான் வயசுக்கு வருவாங்கன்னு யாருமே சொல்லலயே… ப்ளேடுல கை அறுத்துக்குனா கொஞ்சூண்டு ரத்தம் வருமே … அதப்பாத்தாவே பயமா இருக்கும். இதெல்லாம் பாக்கவே பயமா இருக்கே” மழையில் நனைந்த கோழிக் குஞ்சைப் போல ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள் அன்பு.

கிழவி சொன்ன சாங்கிய சம்பிரதாயங்கள் வரிசையாக நடந்து கொண்டிருந்தது. அன்புக்கொடிக்கு பட்டுப்பாவாடை தாவணியும் தலையில் வைத்துக் கொள்ள தாழம்பூவூம் கனகாம்பரமும் கொடுத்திருந்தார்கள். தினம் ஒரு விருந்து என்றாலும் யாருமே அவளைத் தொடவில்லை. ‘கன்னித்தீட்டு கண்டதும் பண்ணும்’ என்று ஆளாளுக்கு அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அம்மா கிழித்துக் கொடுத்த பாவாடை துண்டுகள் அரக்குவது போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தீட்டுத்துணியை மாற்றிவிட்டு , பழையதைத் துவைத்து கருடன் பார்வைக்குப் படாமல் நிழலில் உலர்த்த வேண்டும். தீட்டுக்கறை அவ்வளவு சீக்கிரம் விட்டுப் போகுமா என்ன? கல்லில் அரக்கித் துவைக்க துவைக்க உடைத்த முட்டையின் கவிச்சி வாடை வேறு குப்பென்று மூக்கில் ஏறும்.

திடீரென ஏதோ தண்டனை குற்றவாளியானது போல் இதையெல்லாம கிழவி சொன்ன மாதிரி செய்துவிட்டுப் பின்

ஓலைக்குடிசைக்குள் உட்கார்ந்து கொள்கிறாள். குடிசையின் பச்சைத் தென்னை ஓலையைப் பார்க்கிறாள். இந்த மரம் கூட இப்பதான் வயசுக்கு வந்துச்சு எல்லாரும் அதை தொட்டுத்தொட்டுப் பாக்குறாங்க. ஆனா என்னை மட்டும் யாருமே தொட மாட்டேங்குறாங்க. யோசித்து யோசித்துத் தூங்கிப் போனாள்.

பதினைந்தாம் நாள் ஊர்கூடி புட்டு சுத்தி முடிக்க ஏற்பாடானது. அவளுக்கும் சடை பின்னி போட்டோ பிடித்தார்கள். இத்தோடு தீட்டுக் கழிந்ததாகச் சொல்லி அன்புக்கொடியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டார்கள். கன்னித்தீட்டு சும்மா ஒன்றுமில்லை என்பதாக உடம்பின் சிவப்பெல்லாம் பதினைந்து நாள்களாக துளித்துளியாய் வடிந்து நின்றிருந்தது.

“இனிமே துணி வச்சுக்காத” போதும் என்றாள் அம்மா.

“இந்நேரம் ஸ்கூலுக்குப் போயிருந்தா பேச்சுப் போட்டியில ஜெயிச்சிருக்கலாம்ல” கண்கள் அகல சிறகு விரிய புத்தகப் பை எடுக்க ஓடுகிறாள் அன்பு.

” மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

கைகளை ஆட்டி ஆட்டி தெருத்திண்ணையில் நடந்துகொண்டே தனக்காக ஒருமுறை பேச்சுப் போட்டி நடப்பதுபோல் பேசிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மஞ்சள் நிறப் பாவாடையில் புதிதாக குலைவிட்டுப் பழுத்த வாழைத்தார் போல மிடுக்காக இருந்தாள். அன்புக்கொடியின் பெருஞ்சப்தம் தெருவில் கேட்பதுபோல் இருக்க வெளியே வந்து பார்க்கிறாள் கிழவி. அவளுக்குப் பின்னாலேயே வந்து நின்றாள் அம்மா. அப்போது மஞ்சள் மீது குங்குமம் அப்பியது போல் இருந்தது அன்புக் கொடியின் பாவாடை. அது பார்பதற்கு மஞ்சள் வானில் மறையும் சிவப்புச் சூரியன் போலவும் தெரிந்தது.

” அறிவுகெட்டவளே…தீட்டு இன்னும் நிக்கலனு கூடவா தெரியல? உள்ள போடி ” என விரட்டுகிறாள் அம்மா.

“ஏம்மா… ஒன்னுக்கு ரெண்டுக்கு வந்தா தான் சொல்லிட்டு வரும். இதென்ன சொல்லிட்டா வருது…என்னை ஏன் திட்டுறே?” என்றாள் பதிலுக்கு.

” இதுக்குதான் பொட்டப் புள்ளய அடிச்சி வளக்கணும். முருங்க மரத்த ஒடிச்சி வளக்கணும் ” கிழவி தலையில் அடித்துக் கொண்டாள்.

“மறுபடியும் தண்ணிய மொண்டாந்து திண்ணைய கழுவணும்” அலுத்துக்கொண்டே உள்ளே போனாள் அம்மா.

“சாதிகள் இல்லையடி பாப்பா” ன்னு பாரதி சொல்லியிருக்கார் தெரியுமா?  நீங்க எல்லாரும் சொந்த வீட்லயே என்னை இத தொடாத, அத தொடாதேனு சொல்லி தூர ஒதுக்குறீங்க.” பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்த தொனியில் அம்மாவிடமும் கிழவியிடமும் கோபத்தைக் கொப்பளித்தாள் அன்பு.

“சாதியும் இதுவும் ஒன்னாடி?” அம்மா கேட்டாள்.

“அதெல்லாம் தெரியாது. உலகத்துல மொத்தம் எத்தனை ஜாதி இருக்குதோ அதுல ஒரு பாவப்பட்ட ஜாதியா பொண்ணையும் சேக்கணும்” வீராவேசமாகப் பேசிவிட்டு உள்ளே வந்தாள்.

நடுவீட்டில் டிவி பெட்டியில் விளம்பரம் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதில் நாப்கினில் ப்ளூ இன்க்கை பரவலாக ஊற்றிக் காட்டினார்கள். இதுவரைக்கும் புரியாமல் இருந்த அந்த விளம்பரத்துக்கு இப்போதுதான் புதிர் கிடைத்ததுபோல் தனக்குத்தானே தலையை மெதுவாக ஆட்டிக்கொண்டாள். ஊரெல்லாம் பேச்சுப்போட்டியில் பேசும் பெண்ணியத்துக்கும் வீட்டுப் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது அவளுக்கு.

“நல்ல நாள் அதுவுமா இப்படி தீட்டு பண்ணி வச்சிட்டாளே’’ கிழவி கத்திக்கொண்டே இருந்தாள். 12.02.1992 – கிருத்திகை என்று காலண்டரில் நட்சத்திரம் பொரித்த தாளொன்று காற்றில் அசைந்துகொண்டிருந்தது. “சீக்கிரமே காசு சேர்த்து அந்த பஞ்சு நாப்கின் வாங்கணும்’’ என நினைத்துக் கொண்டே தீட்டுத் துணியெடுக்கப் போனாள்.

கொல்லையில்  ஒரு ஓரமாக வெயில்படாமல் காயப்போடிருந்த தீட்டு துணியின் மீது கருந்தேள் ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது.