கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எனக்குப் பிடித்த மூன்று எழுத்தாளர்கள் அண்மையில் தவறிவிட்டனர்.

இதுவரை இறந்த எழுத்தாளர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது?

சிலர் கதறி அழுதனர். சிலர் வசைபாடினர். சிலர் அஞ்சலி செலுத்தினர்.

ந முத்துசாமி.

நான் மாணவனாகத் தட்டுத்தடுமாறி தமிழ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தீபத்தில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அவரது கதைகளின் கட்டுமானத்தை நான் தேடிச் சென்றேன்.

அதில் எங்கோ நான் தொலைந்து போனேன்.

பிறகு 1989ல் என்று நினைக்கிறேன். அவரை முதல் முறை சந்தித்தேன். அவரைப் பற்றி, அவரது நாடகம் பற்றி நான் சிறுகட்டுரை எழுதியிருந்தேன். உங்கள் எழுத்தில் ஒரு வேகம் இருக்கிறது என்றார். அதை அவர் சொன்ன விதமும் சொன்ன வேகமும் அன்று உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

அந்த மீசையும், அந்தச் சிரிப்பும், எந்த விவாதத்திலும் அவர் எடுக்கக் கூடிய வலுவான தரப்பும் அன்று மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

இப்போது இதோடு இதை நிறுத்துவதா அல்லது ந முத்துசாமி குறித்த என்னுடைய கருத்துகளை அடுக்குவதா?

நான் இதை எழுதும்போது ந முத்துசாமியோடு பேசிக்கொண்டிருப்பது போன்ற மனநிலைக்குப் போகிறேன். அதில் நிறைய மெளனம் இருக்கிறது. இந்த ஒரு வரியில் ந முத்துசாமி என்னைப் பார்க்கிறார்.

அதன் பிறகு சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

அதை நான் யாரிடம் சொல்வது?

னக்கு இன்னொரு முக்கியமான எழுத்தாளர் பிரபஞ்சன்.

1998ல் போப்பு எனக்குப் பிரபஞ்சனை அறிமுகம் செய்கிறார். ஆனால் நான் பிரபஞ்சனோடு அறிமுகமாகவில்லை.

நான் பத்திரிகை நடாத்தில் கொண்டிருந்தேன். நடப்பது ஒகே. நடாப்பது எப்படி இருக்கும்? 1998ல் ஒரு நிதி வீழ்ச்சி நேரத்தில் தன்னந்தனியாக பத்திரிகை நடாத்திப் பார்த்தால்தான் புரியும்.

போப்புவுடன் நடாந்து போனதும் பிரபஞ்சன் என்று ஒருவர் அமர்ந்து பேசுவது தெரிகிறது. ஆனால் அங்கு நான் இல்லை.

இலக்கியச் சிந்தனையில் தேர்வான பிரும்மம் சிறுகதைதான் பிரபஞ்சனை எனக்கும் அறிமுகப்படுத்தியது.

பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன் மூவரையும் 1982ல் ஒரே நேரத்தில் படித்தேன். பிறகு அவர்களை மறந்துவிட்டேன்.

1998லும் அதற்கு முன்பும் இப்போதும் எழுத்தாளர்களைப் படிப்பதில் உள்ள ஆர்வம் அவர்களைப் பார்ப்பதில் இல்லை.

அவர் என்ன சொல்லப் போகிறார்? எனக்குப் போதுமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் நல்ல நண்பனாக இருப்பதே பெரும்பாடு. இதில் புதிதாக எழுத்தாளர் என்று ஒரு நண்பர் தேவைதானா? பிறகு அவருடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதை இலக்கியம் என்ற பெயரில் வெளியில் சொல்வது.

அதில் எனக்கு அறவே ஆர்வம் இருந்ததில்லை. தெரிந்து கொள்வதில்கூட.

எனவே பிறகு ஒருமுறை நானும் பாலபாஸ்கரனும் சிட்டி ஹால் எம் ஆர் டியில் பிரபஞ்சனைப் பார்த்தோம். அங்கே பிறிதொரு எழுத்தாளர்கள் நின்று

கொண்டிருந்தனர். பாலபாஸ்கரனிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தேன். பிறிதொரு எழுத்தாளர்கள், பிரபஞ்சன் யாரையும் பார்க்கக் கூட இல்லை.

பிரபஞ்சனுக்கும் எனக்குமான நெருக்கம் என்பது ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்தான்.

அவர் அவருடைய கதைகளை எப்படி எல்லாம் எழுதியிருக்கிறார். எப்படி எல்லாம் எழுதியிருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு விவரம் போதாது.
அப்படிச் சொல்வது போன்ற ஒரு முட்டாள்தனம் இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை என்பது புரியும் அளவுக்கு விவரம் உண்டு.

பிரபஞ்சன் உண்மையாக இருக்கும் இடங்களைப் பார்த்திருக்கிறேன். அநேகமான முதுகெலும்புகள் வளையும் தருணங்களில் அவர் அலட்சியமாக சாதாரணமாக நின்றுவிடுவார். அவரிடம் அது என்னை வெகுவாக ஈர்த்தது.

இன்னொன்று மனம் தொடர்பான எழுத்து.

தமிழ்மனம் திறக்கப்படத்தக்கது.

அந்த எழுத்து என்னை வசப்படுத்தியது.

லேசியாவின் ஒரே எழுத்தாளர் இராஜகுமாரன் இறந்துவிட்டார்.

நான் இளம் வயதில் தீவிரமாகப் புத்தகங்களைத் தேடிப் படித்துக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களையும் இராஜகுமாரனையும் படித்தேன்.

ராத்திரிப் பூ குறுநாவல், முகவரி தேடும் மலர்கள் சிறுகதைத் தொகுப்பு இவற்றைத் தவிர இராஜகுமாரன் பெயரில் எதுவும் இல்லை.

அவருடைய சாசனம், பத்திரிகைகளில் அவர் வகித்த பொறுப்பு ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர் வரிசையை உருவாக்க உதவியது.
இல்லாவிட்டால் சிங்கப்பூர் மாதிரி மலேசியாவும் அன்று எழுத்தாளர்களே இல்லாத சமூகமாக இருந்திருக்கலாம்.

இராஜகுமாரனின் மறைவு ஒரு தன்னந்தனி தீவை கடல் விழுங்கிவிட்டது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது.

தமிழ் நாடு என்றால் அவரைப் புரிந்துகொள்ள ஆள் இருந்திருக்கும்.

அனாதையாகப் போய்விட்டார் இராஜகுமாரன்.

எழுத்தாளர்களின் மறைவு சோர்வை ஏற்படுத்துகிறது.

என்ன செய்யலாம்?

கொஞ்ச காலம் தயங்கி நிற்கலாம்.

பிறகு இப்படி ஏதாவது எழுதிப் பார்க்கலாம்.

அறிஞர் சுப நாராயணன் (என்று ஒருவர் இருந்தார்) சொன்னதில் எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதுதான்.

`சொல்லுங்க சார் என்று சொன்னபோது எப்படிச் சொல்றது சார்?’ என்றாராம்.

சொல்லத் தெரியாதவன் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லத் தெரிந்தவன் எப்படிச் சொல்வது?