ஒரு பாலைவனம்,

அந்த பாலைவனத்தில் உயரமான ஒரு கள்ளிமரம் இருக்கு,

அந்தக் கள்ளிமரத்தில் இரண்டுபுறாக்கள் கூடுகெட்டிருக்கு,

அந்தக் ரெண்டு புறாக்களும் வெள்ளவெளர்ன்னு வெள்ளையாருக்கு,

அந்த ரெண்டு புறாக்களுக்கும் கால்கள் செக்கச்செவேர்ன்னு சிகப்பாருக்கு,

பெண்புறா குஞ்சு பொரிச்சிருக்கு.

பெண் புறா இரைதேடப் போகவில்லை,

ஆண்புறா இரை தேடப் போய்ருக்கு, அந்த ஆண்புறா அதன் மனைவிக்காகவும், குஞ்சுகளுக்குகாகவும் அந்தப் பெரிய பாலைவனத்தில் அலைந்து அலைந்து இரை தேடுகிறது, அந்த ஆண்புறாவுக்கு பெரிய பாலைவனத்தில் இரை கிடைக்கவே இல்லை,

அந்த ஆண்புறா இரைதேடிக்கொண்டு அந்தப் பாலைவனத்தைத் தாண்டிப் பறந்து அந்நிய தேசத்துக்குப் போய்விட்டது,

ஆண்புறா தரை இறங்கி இருக்கிற அந்த ஊரில் ஆள் நடமாட்டம் இல்லை.

வீடுகள் இடிந்து தரைமட்டமாக கெடக்கு,

இரண்டு அரசர்களுக்கிடையில் இந்தப் பகுதியில் போர் நடந்திருக்கிறது. பகை அரசர்களின் வீரர்கள் கிராமங்களைச் சூறையாடிவிட்டார்கள்.

பகைஅரசர்களின் வீரர்கள் இங்குள்ள கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்தி கிராமங்களை அழித்து விட்டார்கள்.

இங்குள்ள வயல்களில் நெல் தானாகவே முளைத்து தானாகவே விளைந்து நெல் உதிர்ந்து கெடக்கு,

அந்த ஆண்புறா அந்த நெல் மணிகளைப் பொறுக்கிகொண்டு கூட்டுக்குப் பறந்து வந்து கொண்டிருக்கிறது.

 

பாலைபாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை -384