‘விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?’ என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், 5
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. 10

எங்கள் ஊரில் எங்கள் தெரு ஒரு பணக்காரத் தெரு.

எங்கள் பணக்காரத் தெருவில் ஒரு இளம் பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறாள்.

அந்த இளம் பெண் பேரழகியாக இருக்காள். அந்தப் பேரழகி ரொம்ப அழகா அவளை அலங்காரம் பண்ணிருக்காள். பச்சை இலைகளில் தைத்த இலைப் பாவாடையை அவள் உடுத்தியிருக்கிறாள். அது ஒரு குட்டப் பாவாடை. அந்தப் பேரழகி அவள் இடுப்பை நளினமாக அசைத்து ஒயிலாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்.

அந்த இளம் பெண் ஒரு பரத்தை.

எங்கள் தெருவில் ஒரு பரத்தைப் பெண் நடந்து வருவதைப் பார்த்த எங்கள் தெரு மக்கள் கூச்சல் போடுகிறார்கள்.

“பரத்தை வாராள்”

“பரத்தை வாராள்”

“பெண்களே”

“உங்கள் கணவன்மாரை ஒளித்து வைத்துக்கொள்ளுங்கள்.”

எங்கள் பணக்காரத் தெர்வில் இருந்து ஒரு பணக்கார எளவட்டத்தைத் தன் மாய அழகால் மயக்கி கடத்திக்கொண்டு போக வந்திருக்கிறாள் அழகான அந்த இளம் பரத்தை பெண்.

எங்கள் சேரி பரத்தை பெண்கள் காலம் காலமாக இப்படி ஒரு வைப்பாளனை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கமானதுதான்.

அசைந்து அசைந்து வருகிற இந்த இளம் பரத்தைப் பெண்ணின் பேரழகில் சொக்கி மயங்காமல் எந்த ஆம்பளையாலும் இருக்க முடியாது.

அழகான இந்தப் பரத்தைப் பெண்ணின் குட்டப் பாவாடையைப் பிடித்துக்கொண்டு தன் கணவன் இந்தப் பரத்தையின் பின்னாலேயே போறதுக்கு எந்தப் பெண் சம்மதிப்பாள்?

எங்கள் பணக்காரத் தெருப் பெண்கள் அவர்கள் கணவன்மாரை வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் கணவன்மாரைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

கபிலர்
நற்றிணை 320