விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே 5
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல 10
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.

எங்கள் நகரம் ஒரு அழகான நகரம்.

எங்கள் நகரத்தில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது ஆழமான பெரிய குளம். அந்தப் பெரிய குளத்தில் தண்ணீருக்கு மேல் தாமரை இலைகள் அழகாக மிதந்து கொண்டிருக்கிறது. இளம் பெண்கள் அந்தப் பெரிய குளத்தில் இறங்கிக் குடங்களில் தண்ணீர் மோந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வாளை மீன் அவர்களுக்குப் பக்கத்தில் வந்து தண்ணீருக்கு மேலே குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அழகான அந்த இளம் பெண்கள் பயந்து போய் சத்தம் போட்டுக்கொண்டு ஓடுகிறார்கள்.

அழகான எங்கள் பெரிய நகரத்தில் அழகான ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. ஒரு விறலி அந்தப் பெரிய மாளிகை முன் நின்று கொண்டிருக்கிறாள்.

அந்தப் பெரிய மாளிகையில் தலைவியும் தோழியும் இருக்கிறார்கள். விறலியிடம் தோழி சொல்கிறாள்…

எங்கள் தலைவனை எங்கள் தலைவியிடமிருந்து பிரித்து நீ எங்கள் தலைவனை வஞ்சகமாக அழைத்துக்கொண்டு போய்விட்டாய். நீ எங்கள் தலைவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு பரத்தைப் பெண்ணை நீ ஏற்பாடு செய்து கொடுக்கிறாய்.

நல்லா வாழ்கிற நல்ல குடும்பங்களைப் பிரித்து நல்லவர்களுக்குக் கேடு செய்கிற கேடுகெட்ட பெண் நீ.

ஈனத் தொழில் செய்து ஈனப்பிழைப்புப் புழைக்கிற ஈனப்பிறவி நீ…

விவரம் இல்லாத ஏழைத் தாய்மார்களிடம் நீ வஞ்சகமாகப் பேசி, நீ அந்த ஏழைத் தாய்மார்கள் செல்லமாக வளர்த்த அவர்கள் பெண்களை ஏமாற்றி, நீ அவர்களை அழைத்துக்கொண்டு போய் விடுகிறாய்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிற வசீகரமான உன் மாயப் பேச்சில் மயங்கி அழகான அந்த ஏழைப் பெண்கள் உன்னோடு வருகிறார்கள். அந்த ஏழைப் பெண்களை அவர்கள் மீளவே முடியாத படி அவர்களை நீ விபசாரத்தில் தள்ளி விடுகிறாய்.

விபச்சாரத் தொழில் செய்வதில் உனக்கு வெக்கமோ நாணமோ இல்லை.

நீ எங்கள் வீட்டுக்கே வந்து எங்களிடமே சமாதானம் பேச வந்திருக்கிறாய்…

நீ எங்களிடம் எதுவும் பேச வேண்டாம்.

கிளம்பு..

போ…

வாசல்படியில் இருந்து கீழே இறங்கு.

பரணர்
நற்றிணை 310