நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல- தோழி!- கடுவன், 5
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் 10
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

ஒரு மலை.

அந்த மலையில் ஒரு சுனை இருக்கு. ஆழமான பெரிய சுனை.

அந்தச் சுனைக்குப் பக்கத்தில் ஒரு வேங்கை மரம் இருக்கு. அந்த வேங்கை மரத்தில் பூக்கள் மஞ்சள் மஞ்சேர்னு கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அழகான அந்த வேங்கை மரத்தில் ஏராளமாக குரங்குகள் உக்காந்துக்கிட்டுருக்கு.

அந்தப் பெரிய வேங்கை மரத்தில் தாழ்ந்த ஒரு கிளை. தாழ்ந்த அந்தக் கிளை அந்தச் சுனை நேருக்கு நீண்டு வளர்ந்திருக்கிறது.

அழகான ஒரு இளம் பெண் குரங்கு தாழ்ந்த அந்தக் கிளையில் இப்போதுதான் வந்து உக்காந்துக்கிட்டுருக்கு.

அந்த வேங்கை மரத்தில் உக்காந்திருக்கிற குரங்கின், அழகான அந்த இளம் பெண் குரங்குச் சொந்தக்காரர்கள்.

அழகான அந்த இளம் பெண் குரங்கு தலையைக் குனிஞ்சிஞ்கிட்டு உக்காந்துக்கிட்டுருக்கு. சுனை நீரில் தெரிகிற அதன் நிழல் உருவத்தையே அது பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் நிழல் உருவத்தைப் பார்த்து பார்த்து கலைந்திருக்கிற அதன் தலைமுடியை அது சரிசெய்து கொண்டிருக்கிறது.

அந்த மலையில் ஒதுக்குப்புறமான ஒரு இடம். மிளகுக் கொடிகள் அங்கே பச்சப்பசேர்ன்னு படர்ந்து கெடக்கு. மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கிற ஒதுக்குப்புறமான அந்த மலங்காட்டில் அழகான இந்த இளம் பெண் குரங்கு அதன் ஆண் நண்பனோடு சந்தோசமாக இருந்தது.

இந்தக் குட்டு சொந்தக்காரர்களுக்குத் தெரிஞ்சிரக்கூடாது என்று பயந்துக்கிட்டு அழகான அந்த இளம் பெண் குரங்கு அதன் சொந்தக்காரர்களிடம் இருந்து விலகி ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

இளநாகனார்
நற்றிணை 151