ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் 5
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

ஒரு வேப்பமரம் ஊருக்கு மத்தியில் இருக்கிறது.

அது பெரிய வேப்பமரம்.

அந்த பெரிய வேப்பமரம் இலைகளையெல்லாம் உதிர்த்தி விட்டு மொட்டையாக நின்று கொண்டிருக்கிறது.

அந்த பெரிய வேப்பமரத்தில் பட்டைகள் எல்லாம் காய்ந்து சில்லுச் சில்லாக வெடித்திருக்கிறது.

அந்தப் பெரிய வேப்பமரத்தின் நிழலில், வெயிலும் நிழலும் கலந்து கெடக்கு.

எங்கள் ஊர்ப் படிக்காத பையன்கள் அந்த நிழலில் தெள்ளு விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சத்தம் போட்டுப் பேசிக் கொண்டும் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெரிய வேப்பமரத்தின் உச்சாணியில் ஒரு பருந்து உக்காந்திருக்கிறது.

அது கூடு கெட்டியிருக்கு. அது குஞ்சும் பொரிச்சிருக்கு.

குஞ்சுகளுக்கு இரை இல்லை.

அந்தப் பருந்து குஞ்சுகளுக்கு இரை கிடைக்காத வருத்தத்தில் கவலையோடு உக்காந்திருக்கிறது.

இளங்கீரனார்
நற்றிணை 3