மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! 5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப,
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!

ஒரு சிறிய கிராமம்.

அது ஒரு மலைக் கிராமம்.

அந்த மலைக் கிராமம் முழுக்க முழுக்க ஒரு விவசாயக் கிராமம்.

அந்த விவசாய மக்கள் காடுகளில் தினை விதைத்திருக்கிறார்கள்.

அந்த யானை அந்தத் தினைக்காட்டில் நுழைந்திருக்கிறது.

அந்த ஆண் யானை தினைப்பயிர்களைச் சகட்டுமேனிக்கு – வளைத்துப் பிடித்துத் தின்கிறது. அந்த ஆண் யானை அந்தத் தினைப் பயிர்களை சகட்டு மேனிக்கு மிதித்து நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஆண் யானை தங்கள் தினைக்காட்டில் நுழைந்திருக்கிறது என்கிற செய்தி அந்தச் சிறிய விவசாயக் கிராமத்தில் வேகமாகப் பரவுகிறது.

அந்தக் கிராம மக்கள் ஆண்களும் பெண்களும் வேகமாக ஓடி ஓடி வந்த ஊர் மந்தையில் கூறுகிறார்கள். அந்த மலைக்கிராம மக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.

வில்லாளிகள்…

கவண் எறிகிறவர்கள்…

கல் எறிகிறவர்கள்..

அடித் தொண்டையில் இருந்து குரல் கொடுப்பவர்கள்…

பெலசாலிகள் தலைமை தாங்குகிறார்கள்.

தலைவர்களைப் பின்தொடர்ந்து போகிறார்கள் அந்த விவசாய மக்கள்.

அந்த விவசாய மக்கள் அந்த ஆண் யானையை விரட்டிக்கொண்டு முன்னே முன்னே போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த ஆண் யானையைத் துரத்திக்கொண்டு மேலும் மேலும் முன்னேறுகிறார்கள்.

தன்னைத் துரத்திக்கொண்டு வருகிற அம்புகளுக்கும், கற்களுக்கும், விவசாய மக்களின் பயங்கரமான முழக்கத்துக்கும், பயந்து கொண்டு அந்த ஆண் யானை அந்தத் தினைக்காட்டில் இருந்து தலை தெறிக்க ஓடுகிறது.

இள வேட்டனார்
நற்றிணை 108