தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் 5
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! 10

ஒரு காடு.

அந்தக் காட்டில் ஒரு பெரிய வேங்கைமரம் இருக்கிறது.

அந்த வேங்கை மரத்தின் நிழலில் ஒரு காட்டுப் பசு படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறது. அந்தக் காட்டுப் பசுவுக்குப் பக்கத்தில் அந்தக் காட்டுப் பசுவின் கன்றுக்குட்டியும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய வேங்கை மரத்தில் குரங்குகள் கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் குரங்குகள் காட்டுச் சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருக்கின்றன.

ஒரு தாய்க் குரங்கு சைகை செய்து தன் கூட்டத்தாரிடம் ‘கூச்சல் போடாதீங்க’ என்று கேட்டுக் கொள்கிறது.

கூச்சல் போடுவதை அந்தக் குரங்குக் கூட்டம் நிறுத்திக் கொண்டன.

அந்த தாய்க்குரங்கு அந்த பெரிய வேங்கை மரத்திலிருந்து இறங்கிக் கீழே வருகிறது. அது பையாப்பையா பம்மிப் பம்மி நடந்து உறங்கிக் கொண்டிருக்கிற அந்தக் காட்டுப் பசுவுக்குப் பக்கத்தில் வந்து உக்காந்திருக்கிறது. அதன் குட்டியும் அதன் கூடவே வந்து தாய்க்குப் பக்கத்தில் உக்காந்திருக்கிறது.

காட்டுப் பசுவின் மடியில் பால் சுரந்து பால் மடி கனத்திருக்கிறது.

தாய்க்குரங்கு காட்டுப் பசுவின் மடியில் இருந்து மெல்லமாய் ஒரு பால் காம்பை மட்டும் எடுக்கிறது. அது பால் கறக்கிறது.

குட்டிக்குரங்கு தாயிடமிருந்து பாலை வாங்கி வாங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறது.

பொதும்பில் கிழார்
நற்றிணை 57