இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: 5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே; 10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

தோழி வீட்டுக்கு வந்திருக்கிறான் தலைவன்.

தோழி தலைவனிடம் பேசுகிறாள்.

“நீ பட்டணத்தில் பிறந்தவன். உன் குடும்பம் கொடி கெட்டி வாழ்ந்து கொண்டிருக்கிற குடும்பம். நீ இரண்டு குதிரைகள் பூட்டிய தேரில் பிரயாணம் செய்கிறவன்.”

“இவள் எங்கள் பரதவப் பெண். இவள் பிறந்த வீடு ஒரு சிறிய வீடு. இவள் பிறந்திருக்கிறது இந்தச் சிறிய கடலோரக் கிராமத்தில்.”

“இந்த வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிற இந்த மீன் துண்டுகள் ஒரு கொழுத்த சுறா மீன் துண்டுகள். எங்கள் பரதவ இளைஞர்கள் இந்தக் கொழுத்த சுறாவை பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். நெய் வடிந்து கொண்டிருக்கிற இந்தக் கருவாட்டைக் கொத்திக்கொண்டு போவதற்கு அங்கங்கே மரங்களில் காகங்கள் உக்காந்திருக்கின்றன. காகங்களைத் துரத்துவதற்கே எனக்கு வேலை சரியாக இருக்கிறது.”

“எங்கள் வயல், எங்கள் கடல்தான்.”

“எங்கள் கடல் எங்களுக்குக் கொடுக்கிற மீன் எங்கள் வாழ்க்கைக்குப் போதும்.”

“எங்கள் கடல் எங்கள் பரதவர்களுக்கு எப்போதும் மீன் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.”

“எங்கள் பரதவர்களிலும் பணக்காரர்கள் இருக்கிறார்கள்.”

“எங்கள் பரதவர்களிலும் ஒழுக்கமான நல்ல இளைஞர்கள் இருக்கிறார்கள்.”

“எங்கள் இளைஞர்கள் கடலுக்குப் போனால் கடலே கலங்குகிறது. சமுத்திரத்தையே கலக்கும் வலிமை உள்ளவர்கள் எங்கள் இளைஞர்கள். மீன்களைக் கொலை செய்யும் மரபினர் நாங்கள். எங்கள் பரதவ இளைஞர்களால் உனக்கு ஆபத்து வரலாம்..”

“கிளம்பு… போ…”

“நீ எங்கள் பரதவப் பெண்ணுக்கு ஏற்றவன் இல்லை.”

உலோச்சனார்
நற்றிணை 45