அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

வளம் கொழிக்கும் ஊருக்கு அதிபதியே…

பொய் இல்லாத வார்த்தைகளுக்குச் சொந்தக்காரனே…

உன் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு இவள் உன்னோடு நடந்து வந்து கொண்டிருக்கிறாள்.

நிமிர்ந்து உயர்ந்திருக்கிற இவள் மார்புகள் சாய்ந்த காலத்திலும், பொன்னிறமான இவள் மேனியில் புரண்டு கொண்டிருக்கிற இவள் கருங்கூந்தலில் நரை தோன்றிய காலத்திலும் நீ இவளைவிட்டுப் பிரியாமல் இவளைப் பாதுகாத்து அருள் செய்.

குடவாயில் கீர்த்தனார்
நற்றிணை 10