மலைகள் சூழ்ந்த அமர்வில் என் ஊர் இருப்பதாக முன்பாகவே சொல்லிவிட்டதால் அதனுள் நான் நண்பர்களோடு நுழைய பதினாறு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. வனங்களுக்குள் இருக்கும் அமைதி எப்போதுமே தீவிரத்தன்மையுடையது. நீங்கள் ஒரு காய்ந்துபோன விறகை மிதித்தால்கூட அதன் சப்தம் வினோதமாய் ஒலிக்கும் வனத்தினுள். அதற்கு நீங்கள் தனித்துத்தான் செல்ல வேண்டும்.

வேட்டை என்று ஒரு உடும்பையோ, கீரியையோ, அணில் பிள்ளையையோ துரத்திக்கொண்டு ஓடுகையில் நண்பர்கள் ‘தாய் தூய்’ என்றும் ‘வுடாதே தடியை வீசு’ என்றும் கத்துகையில் வனம் தன் எல்லா அமைதியையும் இழந்துவிடும். அப்படித்தான் முதலாக நான் நண்பர்களோடு வேட்டை என்று இரண்டு வேட்டை நாய்களோடு கரட்டினுள் நுழைந்தது. கரட்டினுள் முழுமையாக நுழைந்து சென்றால் அப்படியொன்றும் அழகான வேட்டையை நிகழ்த்த முடியாது. காட்டோரத்தில் ஓரம்பாரமாகத்தான் கரட்டினுள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. எங்கும் கிலுவை மரங்களும் கள்ளிகளும் நிரம்பிய வனம் அது. போக வெங்கச்சாங்கற்கள் கால் வைக்குமிடமெல்லாம் நிரம்பிக் கிடக்கும் பல இடங்களில்.

முப்பது வருடங்களுக்கும் முன்பாக உள்ளூர் சனம் கரட்டை தங்களின் சொந்தக் கரடு என்று நினைத்து உள்நுழைந்து விறகுகள் வெட்டி வந்தது. விறகுகளைத் தலையில் சுமந்தபடி பெண்கள் ஆறு கிலோ மீட்டர் தூரமுள்ள விஜயமங்கலத்திற்கு விடியும் முன்பாக செல்வார்கள். விஜயமங்கலத்தில் இருக்கும் உணவங்களில் விறகுக்கட்டை விற்றுவிட்டு திரும்பவும் நடந்தே திரும்புவார்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு கட்டு விறகின் விலை அவர்கள் சுமந்து சென்று போட்டதற்கு கட்டுபடி ஆயிருக்குமா? என்று தெரியவில்லை. அப்படிச் சுமந்து சென்றவர்கள் பலர் இன்றில்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேர்களும் வயதாகி வீட்டோடு இருக்கிறார்கள்.

வைத்திருக்கும் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு நிலம் இல்லாத மக்கள் கரட்டினுள்தான் சென்று மேய்ப்பார்கள். மேய்ப்பவர்கள் சிலர் பெண்கள் என்றால் அவர்களைக் காதலிக்க கரடுவரை மெனக்கெட்டுச் சென்று கிலுவை மர நிழலில் அமர்ந்து காதலித்து கல்யாணம் முடித்த ஆண்மகன்களும் உண்டு. காதல் விசயம் கரட்டினுள் எந்த மூலையில் நடந்தாலும் ஊருக்குள் தீயாய்ச் செய்தி பரவிவிடும். அந்தக் காதலைப் பற்றி ஓராயிரம் குசலங்கள் ஊருக்குள் பேசப்படும்.

காதலர்கள் விசாரிக்கப்படுகையில் சத்தியம் செய்வார்கள் அல்லது துண்டைக் கீழே போட்டுத் தாண்டுவார்கள் இல்லவே இல்லையென. பின்பாக மணம் முடித்த பிறகுதான் விசயம் ஓய்வுக்கு வரும். மணம் முடித்த பிறகு அவர்களைப் பற்றியான பேச்சுகள் குறைந்து அடுத்த காதலர்கள் பற்றியான குசு குசு பேச்சுகள் துவங்கியிருக்கும். நகர்ப்புறங்களில் காதலர்கள் சந்தித்து பேசி மகிழ பல இடங்கள் இருக்கலாம். ஆனால் கிராமத்தில் காதலை வளர்த்தெடுக்க காடு கரைகளே காத்திருந்தன.

நான் சிறுவனாய் இருந்த காலத்தில் இரவு நேரங்களில் நரிகளின் ஊளைச் சப்தம் இருள் விழுந்ததும் எங்கெங்கோ கேட்கும். போகப் போக நரிகளின் அழிவு நடந்தேறி விட்டது. பின்பாக வேட்டைக்குச் சென்று முள்ளம்பன்றியை அடித்து வந்த என் முந்தைய செட்டின் சாகசம் தெரியும். முள்ளம்பன்றிக்கறியை ஊரே சாப்பிட்டது. அதன் முட்களை வேண்டாதவன் வீட்டில் போட்டுவிட்டால் அவன் குடும்பமே பிழைக்க வழியின்றி ஊரைக்காலி செய்துபோக வேண்டுமென சொன்னார்கள். அதையும் ஊருக்குள் செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் காலி செய்துபோன வீடுகளெல்லாம் அதன் காரணமாத்தான் சென்றிருக்குமென்பதை யாரும் நம்பவில்லை.
சிறுவயதில் கரட்டினுள் ஏராளமான விலங்கினங்கள் இருப்பதாக ஒரு நம்பிக்கையை நான் வளர்த்துக் கொண்டிருந்தேன். பூச்சாண்டிகள்கூட கரட்டினுள் வாழ்வதாகவும். அவைகள் தான் இரவுக்காலங்களில் ஒவ்வொருமுறை தீயைப் பற்றவைத்துவிட்டு குளிர் காயும் என்றே சொல்வார்கள். திருடர்கள் தங்களைத் தேடிவரும் மோப்ப நாய்களுக்கு தங்கள் வாசத்தைப் போக்கடிக்க தீயைப் பற்றவைத்துவிட்டார்கள் என்றும் சொல்வார்கள்.

வேட்டை என்று நண்பர்களோடு கிளம்புவது தட்டறுப்புகள் முடிந்த மார்கழியில்தான். அல்லது மழை தொடர்ந்து ஒரு வாரம்போல் பெய்த பிறகு. வேட்டைக்கு கிளம்பும் தினத்திற்கு முந்தின இரவு இடியுடன் மழை பெய்திருந்தால் சிறப்பு. எலி வேட்டையாட அற்புதமான நாளாக இருக்கும். காடுகளில் புதிய வங்குகளை எலிகள் உருவாக்கியிருக்கும். அவசரத்திற்கு ஒரே வங்கில் இரண்டு குடும்பங்களும் தங்கியிருக்கும்.

மழை பெய்யும் காலங்களில் வெய்யில் சுள்ளென்று அடிக்கும். தாகம் மிக அதிகமாயிருக்கும். கிடைக்கும் பாறைக்குழிகளில் மழை நீரை அள்ளிப் பருகிக்கொள்ள வேண்டியதுதான். வேட்டை ஒரு முடிவுக்கு வர மாலை மூன்று மணியாகிவிடும். காடுகள் சுற்றிய களைப்பில் கால்கள் ஓய்வு வேண்டுமெனக் கேட்கும். வேட்டையில் கிடைத்த அணில், செம்பூத்து, எலி வகைகளை சுத்தப்படுத்தும் பணி மிகச் சிரமமான ஒன்று. களைப்பில் இருக்கும் அனைவரும் வேட்டையாடிட்டமே! இதுங்களை வீசிட்டா போவது? என்ற சலிப்பில் ஆள் ஆளிற்கு கிடைத்த பொடிக்குச்சிகளைக் கொண்டு தீப்பற்ற வைத்து கறுக்கி சுத்தப்படுத்த வேண்டும். இந்த வேலை ஒரு மணி நேரம் இழுக்கும்.

குடல் குந்தாணி எல்லாவற்றையும் உருவி காக்காய்களுக்கு வீச வேண்டும். வேட்டை முடிந்த களைப்பில் நாய்கள் இரண்டும் தென்னை மரநிழலில் நாக்கு நிலம் தொட கெஸ் கெஸ்ஸென மூச்சு வாங்கிக்கொண்டு கிடக்கும். ஒண்டிவில்லில் வயிற்றில் அடிவாங்கி விழுந்த அணில்களிடம் வாசமே அடிக்கத் துவங்கியிருக்கும் நேரமது. எப்போதும் சமைக்க என்று ஒரு காடு இருக்கிறது எங்களுக்கு. அங்கே நல்லதண்ணீர் கிணறு இருக்கிறது. நண்பர்களே தொகைபோட்டு வாங்கிய வடைச்சட்டி கிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். கிலுவை மர துவாரத்தில் உப்பு பாக்கெட், மஞ்சள் தூள் பாக்கெட் இருக்கும். போக தக்காளி, மிளகாய் வகைகள் வேட்டைக்குச் சுற்றிய காடுகளை ஒட்டியிருந்த தோட்டங்களில் கணிசமாய் பறித்துக்கொண்டு வந்துவிடுவார்கள் நண்பர்கள்.

மசாலப்பொடி வகைகள் அதிகப் புழக்கத்திற்கு வராத காலமது. அதையெல்லாம் காசு கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தால் சாராயத்திற்கு பைசாவிற்கு எங்கே போவது? வடைச்சட்டியை அடுப்பில் வைத்தால்போதும் ஆள் ஆளிற்கு பாக்கெட்டைத் தடவி இருக்கும் பணத்தை கொடுத்து அனுப்பவேண்டியதுதான் சாராயத்திற்கு ஒரு ஆளை. மதியத்தில் எங்கேனும் ஒரு தோட்டத்தில் கொய்யா மரத்திலிருந்த கொய்யாக் காய்கள் இரண்டை மட்டுமே கடித்துத் தின்ற பிறகு காலியாய்க் கிடக்கும் வயிற்றில் சாராயம் ஒரு டம்ளர் இறங்கியதும் ஜிவ்வென ஒரு தூக்கு!

வடைச்சட்டியிலிருந்து கறியை அப்படியே ஆளுக்கு ஒவ்வொரு துண்டாய் எடுத்து மெல்ல வேண்டியதுதான். அல்லது அரசிலை கிடைத்தால் ஈக்குக்குச்சி சிறிதாக ஒடித்து நான்கைந்து இலைகளை ஒட்டு சேர்த்துவிட்டால் இலை தயார். அதில் பங்கிட்டும் சாப்பிடலாம். சிலர் அங்கே சாப்பிடாமல் ‘அம்மாக்கு வேணும், தங்கச்சிக்கி வேணும்’ என்று பொட்டணம் கட்டிக்கொண்டுபோய் விடுவார்கள்.

முயல்கறி எனக்கு ஆகாது. அதை நான் இன்றுவரை தொடுவதில்லை. மசை நாய் கடித்ததால் முயல்கறி பழைய வியாதியையெல்லாம் கிளப்பிக்கொண்டு வந்து விடுமென்ற காரணத்தால் முயல் இந்த வேட்டையில் இருந்தால் அணில் எலி இவைகளோடு அதன் கறியை கலக்காமல் தனித்து அதற்காக ஒரு அடுப்பு பற்றவைத்து விடுவார்கள். போக வீட்டில் கால் மூட்டு வலி என்றிருக்கும் தாயாருக்கோ, தகப்பனாருக்கோ உடும்புக் கறியை தாங்கள் தின்னாமல் தூக்கிப் போவார்கள். எது எப்படியாயினும் காட்டில் வைத்து வறுக்கப்படும் எந்தப் உணவு வகைக்கும் சுவை கூடுதலாஉ இருக்கும். ஒவ்வொருமுறை காரம் அதிகமாகி விடும். உஸ் உஸ் என தண்ணீரை குடித்துக்கொண்டே கறியைக் காலி செய்ய வேண்டி வரும். போக போதையில் சட்டி கழுவும் வேலையில் சண்டை ஆகி விடும்.  ‘நான் ரெண்டு விசுக்கா கழுவியாச்சு! எவனோ கழுவுங்க! நான் என்ன ஆளுக்காரனாடா?’ என்று ஒருவன் முன்பாக குரல் கொடுக்க, மெதுவாக சண்டைக்கான திரி கிள்ளப்படும்.

சண்டையின் முடிவில் வடைச்சட்டி கிணற்றுக்குள் வீசப்படும். ‘எவுனும் இனி கறி வறுக்கப்புடாதுடா இங்கெ! தாயோலிகளா!’ இப்படி பல வடைச்சட்டிகள் கிணற்றுக்குள் மாயமாகி இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் புதிய சட்டி வாங்கி வைப்பது நடக்கும். என் உள்ளூர் நட்பு வட்டத்தோடு வேட்டையானது முடிவுக்கு வந்து விட்டது. பின் வந்த பயல்கள் யாரும் வேட்டைக்கு என்று எங்கும் செல்வதில்லை. வேட்டை என்பது நினைவில் தங்கிய விசயமாகி விட்டன.

சமீபத்தில் ஒரு அண்ணன் உடும்பு ஒன்றைப் பார்த்து துரத்தி அது போய்ப் பதுங்கிய வங்கின் மேல் கல்லை வைத்து விட்டு வந்ததாகச் சொன்னார். என் பங்காளி ஒருவன் உடும்புப் பிடி மன்னன். அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு போட்டேன். பத்து நிமிடத்தில் டிவிஎஸ்ஸில் வந்து சேர்ந்து விட்டான். கடப்பாறை, மம்பட்டியோடு மூவரும் காட்டினுள் நுழைந்தோம். இவத்திக்கி தான் இவத்திக்கி தான் ,என்று ஒன்னரை கிலோ மீட்டர் கூட்டி வந்துவிட்டார் அண்ணன். இங்கே சளி தொந்தரவில் மூச்சு வாங்கிக் கொண்டு வெய்யிலில் நடக்க, தேவையில்லாமல் மாட்டிக் கொண்டேனோ? என்றே நான் நினைத்தேன்.

அண்ணன் கல் வைத்து மூடி வந்த வங்கு பெரிய கூடாரத்தினடியில் இருந்தது. உள்ளே குனிந்த வாக்கில் தான் செல்ல வேண்டும். அதுவும் ஒரு ஆள் நுழைந்து வங்கைப் பறைக்கலாம். உருமாலை கட்டிக் கொண்டு அவர் காய்ந்து போன ஊனாங்கொடிகளை முதலாக கத்தியால் வெட்டி ஒதுக்கி விட்டு வங்கினருகில் அமர்ந்தார். மம்பட்டியால் வெட்ட ஒரு வாகும் சிக்கவில்லை அவருக்கு. எசவில்லாத எடத்தில் தான் வங்குகளை வைத்திருக்கும் சனியன்கள்! என்று முனகிக் கொண்டே கடப்பாரையால் குத்தினார்.

அரைமணி நேரம் பறைத்தும் வங்கு டிமிக்கி கொடுத்து திசை மாறி மாறி சென்று கொண்டேயிருந்தது. அடுத்து பங்காளி கடப்பாறையை எடுத்துக் கொண்டான். நேர் நெத்துக் குத்தலாக வங்கானது இறங்கிற்று. தூரத்தே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆயாள் இங்கேயே பார்வையை வைத்திருந்தது. ‘பாக்குறா பாரு! இங்கென்ன நகை நட்டா பொதச்சி வச்சிருக்காங்க? அமட்டையும் நாங்க தூக்கீட்டு ஓட?’ அண்ணன் தன் வயிற்றெரிச்சலை கொட்டினார்.
மேலும் அரைமணி நேரம் போராடியும் உடும்பின் வால் கூட தாட்டுப்படவேயில்லை. எவ்வளவோ காலம் கழித்து ஒரு வேட்டையை சிறப்பாக முடித்து விடலாமென்ற கணக்கு பொய்த்துப் போனது. வெறும் கையோடு திரும்பினோம்.

உடும்பு வங்கினுள் நுழைந்தால் நேராகத் தான் செல்லும். வங்கின் முடிவில் தலை வைத்துப் படுத்துக் கொள்ளும். முகத்தை மறைச்சிட்டால் எதிரிகளிடமிருந்து தப்பி விடலாம் என்ற கணக்கு தான். அம்மணமாயிருப்பவள் முகத்தை கைகளால் பொத்திக் கொண்டது மாதிரி. இதற்கு உதாரணமும் பெண்ணா? என்று கேட்காதீர்கள். சரி ஆண் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

வாலைப் பிடித்து சாமார்த்தியமாய் இழுந்து உடனே சுழற்றி நிலத்தில் அதன் முகத்தை அடிக்க வேண்டியது தான். உடும்பு காலி. போக நான்கைந்து வருடம் முன்பாக சாலை விபத்தில் இறந்த எனது நண்பன் உடும்பை கண்ணில் கண்டு விட்டான் என்றால் விடவே மாட்டான். தப்புறு குப்புறுவென பெண்கள் இடுப்பாட்டம் ஆடுவது போல் ஆடியபடி ஓடும் உடும்பைத் துரத்திச் செல்பவன் நேராக அதன் மீதே விழுந்து விடுவான். அதன் தலைக்கும் கீழாக முதுகு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு சின்னக் குச்சி வைத்தால் கூட சாதுவாய் படுத்து விடும்.

உடும்புக்கறி சாப்பிடுவதில் கூச்சமே கூடாது தான். என் நண்பர்கள் பலர் அதை ஒவாமையால் சாப்பிடுவதில்லை. ஆனால் எனக்கெல்லாம் கூச்சமாவது ஒன்னாவது. சரவாங்கி வியாதிக்கு சாரைப்பாம்பு தேவை என்பார்கள் சிலர். அன்றைய குடிக்கு பணமாயிற்று என்ற கணக்கில் பாம்பு பிடிக்கும் நண்பனுக்கு கொண்டாட்டம் தான். வேட்டைக்குச் செல்கையில் வேலிகளில் சரசரவென அந்தப் பாம்புகள் தான் செல்லும். அவைகளை துரத்தியோடி வாலைப் பிடித்து இழுத்து ‘வர் வர்ரென’ சப்தம் வர சுழற்றி அதன் தலையை நிலத்தில் அடித்துக் கொன்று கேட்டவர்களுக்கு கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு வர வேண்டியது தான்.

வேட்டை ஆரம்பிப்பதற்கும் முன்பாக பாம்பைப் பார்த்து விட்டால் அன்றைய வேட்டை சுத்தப்படாது தான். பெரும் பெரும் அலைச்சலுக்கு பிற்பாடு தான் ஒரு அணிலாவது கைக்கு கிட்டும். முயல்களை துரத்திப் பிடிப்பதில் நாய்கள் தான் சாமார்த்தியசாலிகள். என்ன இசுக்காப்படுத்த வேண்டும்! உடாதே! உடாதே டாமி! கொரவளிப்புடியாப் புடிச்சா! என்று கத்த வேண்டும். எத்தனை வேலிக்கடவுகளில் முயல் முட்டி ஓடினாலும் நாய்கள் விடாது. சும்மா திரும்பிச் சென்றால் எஜமானன் இடுப்பெலும்பு கத்தரித்துப் போகும்படி மிதிப்பானே! என்ற பயத்திலேயே விரட்டி ஓடும்.

மொசப்புடிக்கிற நாயி மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுமே! என்று பழமை சொல்வார்கள். லட்சுமி என்று என் நண்பன் வளர்த்திய பெட்டை நாய் தான் இருந்ததிலேயே சிறப்பான வேட்டை நாய். பின்பாக டைகர் என்று ஒன்று அமைந்தது. ஆட்கள் வேட்டைக்கு கிளம்பி விட்டார்கள் என்று தெரிந்தால் குதியாட்டம் போட்டு முன்னால் முன்னால் ஓடும் நாய் வேட்டைக்கு ஆகாது! முயலை துரத்தி ஓடுவதை விளையாட்டுச் சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டு சும்மாவுக்கேனும் துரத்தி ஓடி விட்டு ‘நான் துரத்தியே உட்டுட்டேனே முயலை!’ என்று வாயையும் முகத்தையும் காட்டிக் கொண்டு வரும் நாயானது நண்பர்களால் கற்கள் கொண்டு அடிக்கப்பட்டு காட்டிலிருந்தே விரட்டப்படும் நிகழ்வும் நடக்கும்.

தலைமாட்டுல நின்னா தவக்காயாப் போயிடும்! என்பார்கள். அதாவது எலி வங்கை ஒருவர் மம்பட்டியால் பறைத்துக் கொண்டு முன்னேறிச் செல்கையில் ‘எங்கே பாக்குறேன்? என்று ஒருவர் வங்கின் மீதே நின்று பார்க்கக் கூடாது! உள்ளே எலிகளுக்குப் பதிலாக தவளைகள் இருக்குமாம்.
வங்கானது நீளமாகச் சென்றால் வாகான நொச்சி விளாரு ஒடித்து (மெலிசாக, நீளமாக) வங்கின் வாய்ப்பகுதியில் விட்டு உள்ளே சலசலவென ஆட்டுவது. வெளியே இழுத்து இழுத்து “பர்ர்ர்ர்ர் ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!’ என்று ஒலி எழுப்பி உள்ளே களேபாரத்தை உருவாக்குகையில் எலிகள் தங்களுக்கென வைத்திருக்கும் அவசரகால வழிகள் வழியாக பீதியோடு வெளிக்கிளம்பி ஓடத்துவங்கும். அவசரகால வழிகள் அதன் தாய்வங்கிலிருந்து சற்று தூரத்தில் கொஞ்சமாய் மண் மூடி வைத்திருக்கும். அதை பொடத்தி என்பார்கள்.

நண்பர்கள் பல இடங்களில் கையில் வைத்திருக்கும் தடியால் குத்திக் குத்தி பொட்த்திகளையும் கண்டறிந்து விடுவார்கள். அப்படிக் கண்டறிந்து விட்டால் துண்டு வைத்து அழகாக எளிமையாக எலிகளைப் பிடித்துக் கொள்ளலாம். சிலசமயம் வங்கினுள் கண்முழிக்காத குட்டிகள் உடலில் முடிமுளைக்காமல் குட்டியாய் நான்கைந்தென கிடக்கும். அவைகளை அப்படியே வங்கில் விட்டு விட்டு வந்து விடுவார்கள். அவைகளின் அம்மாவோ அதாவது கடுவனோ பொட்டையோ இரண்டுமே அந்த வங்கில் எங்கள் வசம் சிக்கி விட்டால் குட்டிகளின் நிலை அவ்வளவு தான். எறும்புகளே அவைகளை தின்று விடலாம். கடுவன் சிக்கி பொட்டை தப்பித்திருந்தால் குட்டிகள் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆரம்பகாலத்தில் மண்சட்டியின் வாய்ப்பகுதியில் துவாரமிட்டு கயிறு கட்டியிருப்பார்கள் தூக்கிப் போக வசதியாய் . சட்டியின் அடிப்பகுதியில் ஒரு துவாரமிருக்கும். வரண்ட குச்சிகள் போட்டு தீப்பற்ற வைத்து மேலே பச்சை வேப்பை இலைகளை போட்டு விட்டால் புகைந்து கொண்டேயிருக்கும். இதை எலி வங்கின் வாய்ப்பகுதியில் கவிழ்த்தி வைத்து பின்புறமிருக்கும் சிறு துவாரத்தில் வாய் வைத்து ஊதினால் புகையானது வங்கினுள் நேரடியாகச் செல்லும். புகை உள்ளே செல்லச் செல்ல தக்குப்பிடிக்க முடியாமல் எலிகள் பொடத்திகளில் வேகமாய் முட்டி வெளியேறும். அவைகளை விளாரால் அடித்து விடலாம். எளிதான வழி தான் என்றாலும் சட்டியை யார் தூக்கிச் செல்வது வேட்டை முடியும் வரை? என்கிற பிரச்சனையில் சட்டியில்லாமலேயே செல்வதே வாடிக்கையாகி விட்டது.

இரவு வேட்டையில் எந்த சுவாரஸ்யங்களும் இல்லை. வேலிகளில் ஓடிக்கொண்டிருக்கும் எலிகள் டார்ச் வெளிச்சத்தில் அப்படியே ஒளியைப் பார்க்கின்றன. வில்லாளி கல் வைத்து எளிதாக அடித்து விடுவான். இரண்டு இரண்டு பேராய் நான்கு வேலிகள் சுற்றினால் போதுமானது. ஒரு மணி நேரத்தில் எந்தக் களைப்புமின்றி பத்துப்பதினைந்து எலிகளோடு வீடு திரும்பி விடலாம். ஆனால் இவ்வளவு சுலபமாக எலிகளை வேட்டையாடினால் மகிழ்ச்சி ஏது?

தற்போது மான்களின் வரவு பெருத்து விட்டதால் காட்டிலாக அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகி உள்ளூர் சனம் விறகுக்கோ, ஆடுகளை மேய்ப்பதற்கோ கரட்டினுள் செல்வதில்லை. வாய்ப்பாடி எப்போதுமே எழில் சார்ந்த கிராமம் அல்லதான். மழை பெய்தால் மலைப்பகுதி பச்சை வர்ணத்தில் தெரியும்! மலைப்பகுதிகளில் உள்ளூர் ஆட்களின் நடமாட்டமும் பல வருடங்களாகவே குறைந்து விட்டது! கேஸ் எழுதி விடுவார்களோ? என்ற பயம் தான். கடமான்கள், புள்ளிமான்கள் கூட்டம் இரவு விழும் நேரத்தில் சாலைகளில் மீண்டும் திரிகின்றன. கரட்டினுள் மழைக்காலத்தில் பாறைக்குழிகளில் தண்ணீர் கிடக்கும். மான்கள் பசுமைக்காலங்களில் கரட்டை விட்டு வெளிவருவதில்லை.

என் வீட்டின் தென்புறம் முருங்கை மரத்தில் பூக்களோடு காய்கள் பிஞ்சுகளாய் தொங்குகின்றன! இரவில் நரிகளைப் போல மான்கள் துள்ளி வந்து ஆகாரம் முடித்துச் செல்கின்றன. மனைவியிடம் பழைய சேலைகளை மரத்தைச் சுற்றிலும் கட்டிவிடச் சொன்னேன். மான்களுக்கு ஆள் இருப்பதான தோரணையை அது கொடுத்திருக்கிறது. பக்கத்து காட்டில் புகுந்து விட்டது! அவர்களுக்கும் அதே அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது! போக வளர்ந்து கொண்டிருந்த புளிய மரத்தின் பட்டைகளை இழுத்து சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டதால் சுற்றிலும் அடைப்பு போட வேண்டியதாகி விட்டது.

மான்கள் மானத்திலிருந்து நேராக அரசனாமலை கரட்டில் வந்து வீழ்ந்து இனவிருத்தி செய்து விட்டதாக உள்ளூர் சனம் நம்புகிறது. அது போல் பெறுத்துப்போன மான்களை சாப்பிட சிங்கங்கள் மானத்திலிருந்து விழும் நாளை எதிர் நோக்க வேண்டியது தான். பிறகென்ன? டிஸ்கவரி சேனல்காரர்கள் வாய்ப்பாடி வருவாங்கள்ள! எனக்கு பரவாயில்லை! ஒரு முருங்கை மரம்! தோட்டம் காடு பயிர் செய்பவர்கள் நிலைதான் பாவம்! அவர்களெல்லாம் கம்பி வேலி போடவேண்டிய கட்டாயம். கம்பிவேலி என்ன நினைத்தவுடன் போட்டுவிட முடியுமா? அந்தச் செலவுக்கு உள்ளே என்ன தான் விளைவிப்பது? என்னைக் காணவரும் நண்பர்கள் இரவில் உச்சா போக வெளியில் வந்தால் சரக் சரக்கென சத்தம் கேட்டுதுங்க! என்கிறார்கள். டில்லிமுள்ளில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் பழுத்த காய்களை மெல்ல அவைகள் இரவுகளில் வீட்டைச் சுற்றிலும் அலைந்து கொண்டேயிருக்கின்றன.