நானொரு உலகைப் பற்றி கனா கண்டேன். அதை நான் ஒருபோதும் பார்க்கப் போவதில்லை என நினைத்திருந்தேன். பின்னொரு தினம் அதனுள் நான் நுழைந்தேன்.

-ஜெஃப் பிரிட்ஜஸ் (டிரான்)

ஸ்ரீதரின் அறிமுகம்

ஸ்ரீதர் தமிழில் விளைந்த முதல் தனித்துவ இயக்குநர் எனலாம். அது வரையிலான படங்களைத் திரையில் காண்பதற்கான ஒரு முன் தீர்மானத்தை தொடர் அபிமானத்தை நடிகர்களும் இசையமைப்பாளர்கள், கவிஞர் பாடகர்களும் ஏற்படுத்தி வந்தனர். முதன் முறையாக ஸ்ரீதர் படம் என்று கிளம்பி தியேட்டர் சென்ற ரசிகர்களைத் தயாரித்துக் கொண்டவர் ஸ்ரீதர். பின் நாட்களில் கே.பாலச்சந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, ருத்ரய்யா, மணிரத்னம் என அந்தப் பட்டியல் நெடிதோங்கிற்று என்றாலும் அதன் முதற்பெயர் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் மெல்லிய உணர்விழைகளின் மூலமாக காதலின் ஆரம்பத் தயக்கங்களையும் நெடுங்காலத் தைரியமின்மையையும் காதலர்க்கிடையிலான புரிதல் கோளாறுகள் பிறமனிதர்களின் ஊடாட்டம் இன்னபிறவற்றாலெல்லாம் காதலர்களிடையே ஏற்படுகிற அத்தனை கருத்துவித்யாசங்களையும் மென்மையான திருப்பங்களாகக் கொண்டு தன் படங்களை அமைத்தவர். விதவிதமான பாத்திரங்களோ அல்லது மீறல்களோ அவர் படங்களில் தென்பட்டதைவிட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற மாதிரியிலான கதைப்பின்னல்களைக் கையிலெடுப்பதைத் தொடர்ந்தார். குறிப்பாக முக்கோணக் காதல் கதைகள் ஸ்ரீதரின் விருப்ப சினிமாக்களின் விளைநிலங்களாகின. கல்யாணப் பரிசு ஸ்ரீதரின் இயக்கத்தில் முதற்படம்

பாஸ்கர், வசந்தி மற்றும் கீதா

பாஸ்கரும் வசந்தியும் காதலர்கள். வசந்தியின் அக்கா கீதாவுக்கு அது தெரியாது. கீதா ஒருதலையாய் பாஸ்கரை விரும்பத் தொடங்குகிறாள். அக்காவுக்காகத் தன் காதலை மறக்கிறாள் வசந்தி. கீதாவுக்கும் பாஸ்கருக்கும் திருமணமாகிறது. பாபு பிறக்கிறான். கீதா நோய்வாய்ப்படுகிறாள். இறக்கும் தருவாயில்தான் பாஸ்கரும் வசந்தியும் முன்பு காதலித்த விசயமே அவளுக்குத் தெரிகிறது. முன்பே வசந்தியை அவள் திட்டியதில் எங்கே சென்றாள் எனத் தெரியாமல் போகிறது. கீதா இறக்கும் தருவாயில் வசந்தியை பாஸ்கர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி மரிக்கிறாள். வசந்தியைத் தேடி வரும் பாஸ்கர் அவளை நெடுங்காலமாய் ஒருதலையாய் காதலிக்கும் ரகுவின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் திருமணம் நிகழவிருப்பதை அறிந்து அங்கே செல்கிறான். திருமணம் முடிந்திருக்கிறது. கல்யாணப் பரிசாக பாபுவை அவர்கள் வசம் தந்துவிட்டு தானும் தன் காதலுமாய் நீங்குகிறான்.

இரண்டாம் உலகம்

பாஸ்கரின் நிஜ உலகத்தினுள்ளே சம்பத்தின் பொய்யுலகமும் ததும்புவதே கல்யாணப் பரிசு படத்தின் கதைக்கட்டுமானம்.
நிசம் நிறையவே கிடைக்கும் இந்த நாட்டில் இப்படி ஒரு பரிசுத்தப் பொய்மை அபூர்வமானது. ஆகவே சம்பத்தின் உலகம் இங்கே முக்கியமானதாகிறது.

சம்பத்தின் முன் கதை

சம்பத் படித்தவன். ஆனால் படிப்பை முடித்தவனல்லன். விளைவை யோசிக்காமல் பொய் சொல்லி விடுகிற சுயநலவாதி. அவன் பாஸ்கரின் நண்பன் பாஸ்கர்தான் கல்யாணப்பரிசு படக்கதையின் நாயகன் என்றாலும் சம்பத்தின் கதையில் எதிரே வருகிற எல்லோருக்கும் இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று சம்பத்தின் பொய்களைத் தெரிந்து நாளும் படபடத்துத் திரியலாம் அல்லது அவன் பொய்களை அறியாமல் அவற்றுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கலாம். பாஸ்கர் உள்ளிட்ட வெகு சிலரே அவனது பொய்களினுள்ளே வந்து செல்பவர்கள். பிற எல்லோருடைய சஞ்சாரமும் வெளியேதான்.

திட்டமிட்ட சதிகளல்ல சம்பத்தினுடையவை. அவன் போகிற போக்கில் அவிழ்த்து விடுகிற டூப்புகள் ஆரவாரம் அடங்குவதற்குள் அவற்றிற்கான பலாபலன்களை அவனுக்குத் தந்து விடுபவை. சோப்புக்குமிழிகளின் ஜீவிதமும் சம்பத்தின் பொய்களின் உயிர்த்தலும் ஒரே போன்றவைதான். அவனுக்குத் தான் செப்பிய பொய்களின்மீது எந்தப் பிடிப்பும் இருப்பதில்லை. அவை நேர்த்திக் கொடுக்கிற சொகுசுகளுக்குள் ஒய்யாரமாகத் திரிவதே அவனது வேலை. துளையிடப்பட்ட பலூனாய் வெடித்துச் சிதறுகையில் படாரென்று தரையில் வீழும் கணத்தில் அங்கே இருந்து எழுந்தோடுவதற்காகத் தன் அடுத்த பொய்யை விசிலடித்துப் பற்றிக்கொண்டு படபடக்கும் பொய்களின் ஸ்பைடர்மேன் தான் சம்பத். அவனுக்குத் தன் பழைய பொய்கள் குறித்து எந்தப் பயமும் இருப்பதில்லை. எடு அடுத்த பொய்யை ஏன் அப்டி செய்தேன் தெரியுமா என்பதிலிருந்து அதனை விரி. நம்பி விட்டார்களல்லவா போகிறவரை போகட்டும் என்று விட்டேத்தியாய் முன் நகர்கிற ஞானம் அவனுடையது.

மாலினி மணாளன்

மாலினியின் தந்தை அவளுக்குப் படித்த நல்ல வேலையிலிருக்கிற பட்டணத்து மாப்பிள்ளையை வரனாய்ப் பார்க்கிற சேதி தெரிந்ததும் நானே நல்வரன் என்று படிக்காத படிப்பை பார்க்காத வேலையை தனது என்று நிலைநிறுத்தி அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான் சம்பத். பட்டணத்தில் ஜாகை. தினமும் மாலினி சமைத்துத் தருகிற மதிய மாலை உணவுகளை கட்டி எடுத்துக் கொண்டு ஆளில்லாத பார்க்குக்கு வந்து சேர்பவன்தான் மட்டும் ஆடுகிற சீட்டாட்டத்தை பகல் உணவு வரை ஆடுவான். பிறகு லன்ச்சை முடித்துக் கொண்டு நல்ல தூக்கம் தூங்குவான். அப்புறம் எழுந்து ஃப்ளாஸ்கில் இருக்கிற காஃபி டிபன் இத்யாதிகளை உட்கொண்டானென்றால் சலிக்க அலுக்க வேலை முடித்த பாவனையில் ஏழு மணி வாக்கில் கிளம்பி வீட்டுக்குச் செல்வான். அங்கே யதேச்சையாக சந்திக்கும் தன் கல்லூரி நண்பன் பாஸ்கரைத் தன் வீட்டின் தனியறையில் தங்குவதற்காக உள்வாடகைக்கு அழைத்துச் செல்கிறான்.

பொய் நிஜம் மற்றும் சேல்ஸ் மேனேஜர்கள்

மன்னார் அண்ட் கம்பெனியில் சம்பத்தாகிய தான் தான் மேனேஜர் என்கிற தன் பெரும்பொய்யின் உப-பொய்யாக பாஸ்கரை அதே கம்பெனியின் சேல்ஸ் மேனேஜராகத் தன் மனதார நியமித்த சம்பத்தின் பொய்யுலகில் நடுநடுங்கியபடியே திரிகிறான் பாஸ்கர்.வினை எப்படி வருகிறது என்றால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத மாலினியின் உறவுக்காரர் அவர்களை திருமணம் விசாரிக்க வீட்டுக்கு வருகிறார்.அவர் தான் சென்னையிலிருக்கக் கூடிய ஒரே மன்னார் அண்ட் கம்பெனியின் மேனேஜர் என்பது தெரியவருகிறது.பாஸ்கர் தான் மடும் தப்பி ஓடிவிடுகிறான். வந்த மாமன் மாலினியிடம் எச்சரித்துவிட்டுச் செல்கிறார்.அவர் சொல்வது சரிதான்.மன்னார் அண்ட் கம்பெனிக்கும் சம்பத்திற்கும் எள் நுனி அளவும் சம்மந்தம் இல்லை என்பது தான் நிசமாயிற்றே.

மனைவி மாலினியிடம் உண்மைகளை ஒப்புக்கொள்கிறவன் ஒரு மாதம் டைம் கேட்கிறான். அதற்குள் நல்லதோர் வேலையை அமைத்துக் கொள்வதாக சத்தியம் செய்து அப்போதைக்கு சமரசம் செய்து கொள்கிறான்.

அடுத்து அவன் எடுப்பது தான் அவதாரவிபரீதம்

எழுத்தாள அவதாரம்

இதுவரை தனது முகத்தைக் காட்டியிராத எழுத்தாளர் பைரவன் என்பதுதானே என்று தன் மனைவியிடம் அளந்து விடுகிறான். சென்ற பொய்யாவது பர்ஸனல். திஸ் டைம் தி பொய் இஸ் சோஷியல் ஆல்ஸோ அல்லவா மாலினி பாவம்.தன் கணவன் உண்மையாகவே எழுத்தாளன் தான் என்று நம்புகிறாள். தன் தோழிகளிடத்திலெல்லாம் பின் விளையப்போகும் சாத்தான் பூக்களைப் பற்றிக் கொஞ்சமும் எண்ணாமல் எழுத்தாளர் பைரவன் தன் கணவர் தான் என்று அகமகிழ்கிறாள்.

நேர்காணல் படலம்

தோழியர் எல்லோரும் வீட்டுக்கு வந்து அவனைச் சந்திக்கிறார்கள். எழுத்தாளர் பைரவனுக்கான அவர்களது ரசிகைகளின் கேள்விகளுக்குப் பொய்யை ஒரு அங்கி போலணிந்த சம்பத் அளிக்கும் பதில்கள் சகட்டு மேனிக்கு அமைகின்றன.ஒருவழியாக நேர்காணல் படலத்திலிருந்து
நீங்கித் தப்பித்தோன் பிழைத்தோம் என்று நிம்மதி ஆகிறான் சம்பத்

வந்தது யுத்தம்

எழுத்தாளர் பைரவனுக்குப் பாராட்டு விழா நடக்கப் போகிறது பொன்முடிப்பெல்லாம் வழங்கப் போகிறார்கள் என ஊரே திமிலோகப்படுகிறது.சம்பத் கலங்குகிறான். ஒரு பொய்யை சொல்லி விட்டு உள்பக்கமாய்த் தாளிட்டுக் கொண்டு சற்று நிம்மதியாக இருக்க விடுகிறதா இந்த உலகம் என்ற விசனத்தோடு என்ன நடக்கிறது என்பதை ஒரு கை பார்க்கத் துணிகிறான்.நான் போயி பாராட்டு விழாவுல கலந்துகிட்டு வந்துர்றேன் என்று எளிய முறையில் தானும் வந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மாலினியை சமாளித்து விட்டு எங்கே ஊர்சுற்றி விட்டு மாலை செண்டு சகிதம் வீடு திரும்புகிறான்

கிழிந்த பொய்த்திரை

எப்படி நடந்தது என்று கேட்கும் மாலினியிடம் தன் மனதிலிருந்து பாரபட்சமில்லாமல் பலநூறு பொய்களை எடுத்து விரிக்கிறான்.ஏகமாய்ப் புளுகித் தள்ளுகிறான் பைரவன் சேவை நாட்டுக்குத் தேவைன்னாறு கமிட்டி சேர்மன் டூ அவர்ஸ் நான் பேசினேன் என்கிறான் பைரவன் எல்லாவற்றையும் கேட்ட மாலினி இந்த மாலைக்கும் செண்டுக்கும் எவ்ளோ குடுத்தீங்க என்று கேட்பதன் மூலமாய் முடித்து வைக்கிறாள்.
பிடிபட்ட சம்பத் உடல் நடுங்கி வீழ்கிறான்.

ஊர் ஊராய்த் தேநீர்

மனம் திருந்தினானா அல்லது இனிப் பொய்களுக்கு வழியில்லை என்பதால் மனம் மாறினானா என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியாது.டீ கம்பெனியின் ஏஜன்ஸி எடுத்து அவனும் மாலினியும் கைக்குழந்தையைக் கையோடு அழைத்துக் கொண்டு சொந்த வேனில் ஊர் ஊராய்ச் சென்று தேநீர் விற்று ஜீவனம் போற்றுகிறதாக முடிவடைகிறது சம்பத்தின் பொய் களைந்த கதை.

தனக்கென்று எந்த அறமும் அற்ற சம்பத் மாதிரியான மனிதர்கள் நம்மைச் சுற்றியெல்லாம் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை முற்றிலுமாகத் துண்டித்து விட்டு ஒரு உலகத்தை நம்மால் கற்பனை செய்துவிடவே முடியாது. நம்மையே இடுபொருளாக்கி நாம் செய்து பார்க்க விழையும் கேளிக்கையின் நாயகர்கள் சம்பத்கள் தானே பிறகெப்படி அவர்களை அகலுவதும் நீங்குவதும்

கதைக்குள் கதை

ஸ்ரீதரின் நகைச்சுவை உணர்வு அளவுகடந்தது. தன் படத்தின் கதையில் எத்தனை சதவீதத்தை நகைச்சுவைக் காட்சிகளின் கரங்களில் ஒப்படைப்பது என்ற விஷயத்தில் அவர் கண்டிப்புக் காட்டியதே இல்லை. அவரது பல படங்கள் அதன் மையத் தன்மையைத் தகர்த்து அவற்றின் நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே காலம் கடந்து இன்றளவும் நினைவுக்கூரப்படுவதும் விரும்பப்படுவதுமாகத் தொடர்வதன் ரகசியமும் ஸ்ரீதரின் நகைச்சுவை உணர்வும் அதனை அவர் நம்பிய விதமும்தான். காதலிக்க நேரமில்லை ஊட்டிவரை உறவு என நிறைய உதாரணங்களைச் செப்ப முடியும் என்றாலும் கதைக்குள் கதையாகத் தன் முதல் படத்தில் அவர் வடித்து வைத்த மினியேச்சர் உலகம் அபாரமானது. இன்னும் எத்தனை காலமானாலும் தகர்க்க முடியாத பேரெழிலாக உறைந்திருப்பது.

கல்யாணப் பரிசு உணர்ச்சிப் பூர்வமான காதலை மறக்க முடியாத காதல் நாயகனின் சிலிர்க்க வைக்கும் கதையாக சொல்ல விழைந்த படம். மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஏ.எம்.ராஜா அதுவரை பாடகராக அறியப்பட்டிருந்தாலும் கல்யாணப் பரிசு மூலமாக அவர் இசை அமைப்பாளராகத் தோற்றமெடுத்தார். வாடிக்கை மறந்ததும் ஏனோ துள்ளாத மனமும் துள்ளும் காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட போன்ற காலத்தால் அழியாத பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பேனாவழி சாத்தியம் செய்தார் ஏ.எம்.ராஜா., ஜெமினி கணேசன், சரோஜாதேவி, கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.சரோஜா, நாகேஸ்வரராவ் ஆகியோரின் தோன்றல்களினால் பரிமளம் பூத்தது கல்யாணப் பரிசு.

இவ்வாறாக ஸ்ரீதர யுகம் தோன்றியது. கல்யாணப் பரிசு காலகால வைரம்.

முந்தைய தொடர்: http://bit.ly/2M13Qto