சரியாக இருப்பதை விட கருணையோடு இருப்பதையே தேர்வு செய்யுங்கள்

-டாக்டர் வேய்னே டைய்யர்

நல்லவன் வாழ்வான் எனும் பதத்தை எள்ளி நகையாடுவதைப் போலத் தான் செய்தித் தாள்களைத் திறக்கையிலும் தொலைக்காட்சி சானல்களில் லயிக்கையிலும் மீண்டும் மீண்டும் நிகழ்வுகள் வரிசை கட்டுகின்றன. ஃப்ராட் அதாவது எத்தன் எனும் சொல் தூரத்தே இருக்கும் வரை மெலிதான புன்னகையை வரவழைத்து விடுகிறது. அதே சொல் எத்தனைக்கெத்தனை அருகே வருகிறதோ அனல் பூக்கிறது குருதி கசிகிறது. எத்தர்களால் எல்லாவற்றையும் ஏன் உயிரை இழந்தவர்களின் சரித்திரம் சாம்பலான ஏட்டிலெழுதப்படுகிற சாட்சியம்.

கத்தியைக் காட்டிப் பணம் பறிக்கிறவர்களை சாகசக் காரர்களாக சித்தரிக்கிற திரைப்படங்களின் வரிசையில் உண்மையாகவே ரகரகமாக தினுசு தினுசாக மற்றவர்களின் பணத்தை ஏமாற்றிக் கைப்பற்றியபடி அடுத்த அத்தியாயத்தை நோக்கிச் சிட்டாய்ப் பறந்து விடுகிற நிசமான சாகசவிரும்பி ஒருவனது கதை தான் சதுரங்கவேட்டை.  நீரள்ளுவோர்க்கு நீர். நிழல்தின்னுவோர்க்கு நிழல். நியாயம் தர்மம் எல்லாம் ஏட்டிலிருக்கிற சொற்கள்.எடுத்துக் கொள்வோரைப் பொறுத்து மாறலாம்.

ஒருவனது பேராசை அவனது அழிவுக்கும் அவமானத்துக்கும் வீழ்ச்சிக்கும் யாரால் அழைத்துச் செல்லப்படுகிறதோ அந்த நபர் அவமானங்களுக்கு அஞ்சாதவனாகவும் குற்றங்களில் கரைகண்ட மனிதனாகவும் இருந்துவிட்டால் அழிவுகள் அதிகரிக்கும்.பலரும் பாதிக்கப் படுவார்கள்.அடுத்தவனின் பேராசையை சிறு தூண்டிலாக்கி அவனது கைப்பொருளைத் தன்மீன்களாக மாற்றிக் கொண்ட காந்திபாபுவின் கதை தான் சதுரங்க வேட்டை. அவனது வாழ்வத்தியாயங்களே திரையின் கதை.

முதல் களப்பலியின் கதையிலிருந்தே காந்திபாபுவின் கதை தொடங்குகிறது.ஒரு ஊரை அதில் வசிக்கும் ஒரு கடை முதலாளியைக் கண்டறிந்து அவரிடம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தலை மண்ணுள்ளிப் பாம்பு நாலு கிலோவுக்கு யாரிடமாவது இருந்தால் பல கோடி ரூபாய்க்கு விலை போகும் எனவும் அதை ஒருவன் மதிப்பறியாமல் சிலபல லட்சங்களுக்குத் தரவிருப்பதாகவும் பேசாசையைத் தூண்ட அவரும் சப்புக்கொட்டிக் கொண்டு பையுள் பாம்பை வாங்கிக் கொணர்ந்து வீட்டில் வைத்துவிட்டு அல்லோலகல்லோலப் பட்டு உண்மையில் அதன் எடை கம்மி என்றறிந்து அதன் போஷாக்கான வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் என்று மண்ணுளி நலத்திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் போது வெளியூரிலிருந்து வீடு திரும்புகிற மகனும் மனைவியும் சேர்ந்து வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டதாகக் கருதி அதனை அடித்தே கொன்று விடுவதோடு அண்ணாச்சியின் கனாவில் இடி விழுகிறது.

தொழில்முறை ஒளிப்பதிவாளராகத் தன் கணக்கைத் தொடங்கிப் பின் அறியப்பட்ட நடிகரான இளவரசு பலவிதமான வேடங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிக வாழ்வின் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் ஒன்றை இந்தப் படத்தில் ஏற்று வழங்கினார்.ஏமாறுபவனின் அறியாமையை அதற்குண்டான துல்லியத்தோடு பிரதிபலிப்பது நடிகனுக்குச் சவாலான வெகு சில கடினங்களில் ஒன்று. இளவரசுவின் நடிப்பு ஒரு வேடத்தை எப்படி அதற்குண்டான வெட்டுக்கத்திக் கச்சிதத்தோடு அணுகவேண்டும் என்பதற்கான பாடக்குறிப்பைப் போலவே திகழ்ந்தது.

தான் யாரை ஏமாற்றுகிறோம் அதனால் அவர்கள் என்னவாகிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாத இரக்கமற்ற மனிதனாக இந்தக் கதையின் நாயகன் காந்திபாபு எப்போது தன் செய்கையின் விளைவறிந்து மனம் மாறுகிறான் என்பதே கதை.

உலக வரலாற்றின் சுவாரசியமே வெற்றிகரமான வேட்டையாடிகள் விதவிதமான காரணங்களுக்குப் பலியான கதைகள் தான். யாதொரு வேட்டையாடியும் நிரந்தரமாக வென்றதே இல்லை.களப்பலியாவது போரிலும் வேட்டையிலும் வெவ்வேறு இருத்தல்களை ஏற்படுத்தி விடுகின்றன.சதுரங்கத்தின் வேட்டைகளை அப்படியே வாழ்க்கையின் நகர்வுகளாக்கினால் ஆயிரமாயிரம் திரைக்கதைகள் கிடைக்கும்.யூகிக்க முடியாத கெட்டவனாக காண்பவர் அனைவரையும் வசீகரிக்கிற ஒருவனாக இருந்தால் மட்டுமே ஒருவன் மோசடிமனிதன் எனும் அந்தஸ்தை அடைய முடியும்.அவனது கதையறியாதவர்களுக்கு அவன் கனவான். கதை அறிந்தவர்களுக்கு அவன் ஃப்ராட்.பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதன் என்பது அவனைப் பற்றி அவன் சொல்ல விழையும் அடையாள வாசகம்.

இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் அறியப்பட்ட ஒளிப்பதிவாளர் நட்ராஜ் எனும் நட்டி நாளை எனும் படத்தில் நடிகராக அறிமுகமான நட்டியின் நடிப்பாற்றல் சதுரங்க வேட்டை படத்தில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து ஈர்த்தது..சதுரங்க வேட்டை படத்தை நட்ராஜ் எனும் நடிகரை நீக்கி விட்டு யோசிக்கவே முடியாது என்பது வெறும் புகழ்மொழி அல்ல.இந்தப் படத்தின் உள்ளே புகுந்து நட்ராஜ் செய்து காட்டிய சாகசம். ஒவ்வொரு குற்றத்திற்கான முகம் குரல் தொனி மொழி பார்வை ஏன் விரலசைவு வரைக்கும் ஒரே ஒரு காந்திபாபு என்பவன் விதவினோத அவதாரங்களை எடுப்பதன் மீதான காட்சி நம்பகத்தைக் கச்சிதமாக கையாண்டார் நட்ராஜ்.

குற்றம் நிரூபிக்கப் படாமல் விடுதலையாகும் காந்தி பாபு கோர்ட்டுக்குள்ளேயே சிறுதொலைவு நடந்து தனக்காகக் காத்திருக்கும் வாகனத்தை நோக்கி வருவார்.இது வரை எத்தனையோ வில்லத்தனங்களைப் பார்த்திருந்தாலும் அந்த நடையும் அப்போதைய புன்னகையும் அந்தப் படத்திலேயே அதற்கு முன்பின்னாய் வேறெங்கேயும் தோன்றிவிடாத மற்றொன்றாக வழங்கியிருப்பார் நட்ராஜ்

மனிதனுக்குப் பின்னாலிருக்கும் கதை வெற்றியோ தோல்வியோ அவன் சொல்லத் தொடங்கும் போது கொள்பவரின் வரவேற்பு மாறுகிறது.குற்றத்தை இழைத்துப் பிடிபட்டவனுடைய பின் கதை பத்திரிகைகளில் எழுதுவதற்கு சுவையானதாக இருக்கக் கூடும்.அவனிடம் பொருளிழந்தோருக்கு அது எரியும் நெருப்பில் எதெதையோ வார்த்தாற் போல எரிச்சலே தரும். இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பின் வசீகரம் சதுரங்க வேட்டை படத்தை அந்தக் காலத்தோடு உறைந்து விடாமல் அதனை அடுத்த நதிகளிலும் படர்த்திக் கொண்டே சென்றது.தன் முதல் படத்தை இயக்கிய ஹெச் வினோத் கச்சிதமான வேகம் குன்றாத படமாக இதனைத் தந்தார்.

தமிழில் அபூர்வமான இறுகிய நகைச்சுவை வகை படங்களில் சதுரங்க வேட்டையைக் குறிப்பிடலாம். நடிகர்கள் தேர்வும் அவர்களது வழங்கல் விதமும் படத்தின் எந்தக் கட்டத்தையுமே அலுப்பின்றி நிகழாமல் நிகழ்ந்தாற் போன்ற தன்மையைக் காண்பவரிடத்தில் நேர்த்தின.வசனம் இசை ஒளிப்பதிவு போன்ற பலவும் அமைந்து பெருகி அழகான படமானது

சதுரங்க வேட்டை: தன்மீன் தூண்டில்