தனுஷ், தாப்ஸி பன்னு, நரேன், கிஷோர், வ.ஐ.ச ஜெயபாலன், முருகதாஸ் நடித்த ஆடுகளம் படத்தின் வசனத்தை வெற்றிமாறனுடன் இணைந்து எழுதியவர் விக்ரம் சுகுமாரன் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியவர் வெற்றிமாறன். ஒளிப்பதிவு வேல்ராஜ் இசை ஜீவீ ப்ரகாஷ் குமார் பாடல்களை எழுதியவர்கள் சினேகன், ஏகாதசி, யுகபாரதி, வ.ஐ.ச ஜெயபாலன், யோகிபி.

கதை நடக்கும் களம் மதுரை. திருப்பரங்குன்றம் ஊர் தொடர்ந்து நடக்கும் சேவற்சண்டை. இரண்டு டீம்கள். ஒன்று பேட்டைக்காரன் தலைமையிலான அணி. அடுத்தது இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி அணி. ரத்தினசாமியின் சேவல் பல வருசங்களாக முயற்சி செய்தும் வெற்றி பெற்றதே இல்லை.என்ன செய்தாவது வெற்றிக்கனியை அடைந்தே தீருவது என்று வெறியே கொள்கிறார் பதவியதிகாரமான ரத்தினசாமி. அவருடைய எதிரியான பேட்டைக்காரரின் சிஷ்யப்பிள்ளை கேபி கருப்பு. அவன் சிறுவனாயிருக்கும் போதிலிருந்தே பேட்டைக்காரரின் கண்பார்த்து வளர்ந்தவன். துரை அந்த ஊரில் ஒரு முக்கியஸ்தன். அவனும் பேட்டைக்காரரின் வழித்தோன்றியன் தான். ‘எத்தனை வருசமானாலும் பேட்டைக்காரரின் சேவலை ஒருதடவையாவது அடிக்காமல் என் கட்டை வேகக்கூடாது டா எலே ரத்தினசாமி’ என்று குரல் தருவது அவருடைய மனச்சாட்சி அல்ல எண்பது வயதான அவரது தாயின் நிசக்குரல்தான் அது.

தகப்பனை இழந்த பிள்ளை என்றாலும் தாய் தன் உயிரையே அவன் மீது வைத்திருக்கிறாள். அவனோ பொறுப்பில்லாமல் சேவல் சண்டை என ஊரைச் சுற்றி வருகிறான். அவனது பார்வையில் படுகிறாள் ஐரின் என்ற பேரிலான ஆங்கிலோ இந்தியப் பெண். ஒரு பக்கம் புதிய மலராய்க் காதல் பூக்கிறது. அவளோ அவனை ஏறேடுத்தும் பார்க்கவில்லை. மெல்ல அவளுடன் மோதல் காதலாய்க் கனிகிறது.

பேட்டைக்காரரின் ஆணிவேர் போல இருக்கும் அயூபை விலைக்கு வாங்க முயலுகிறார் ரத்தினசாமி. அவரை ஏளனமாகப் பேசிவிட்டு மறுத்து திரும்பும் வழியில் அயூப் விபத்தில் மரணிக்கிறார். இதற்குக் காரணம் அந்த இன்ஸ்பெக்டர்தான் என வெறியாகும் தன் தரப்பாரை அடக்கி வைக்கும் பேட்டைக்காரர் அயூப் பெயரில் அவர் நினைவாக ஒரு மாபெரும் சேவற்சண்டை டோர்னமெண்டை அறிவிக்கிறார் ஒரு கட்டத்தில் ரத்தினசாமிக்கும் பேட்டைக்கும் நேரடி யுத்தமாகிறது. பேட்டைக்காரர் வேறொரு சேவலைத் தேர்வு செய்வதற்குள் கருப்பு தன் சேவலைக் களமிறக்குகிறான். அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மைக்கில் அறிவிக்கும் பேட்டைக்காரர் கருப்பு தோற்கப் போவதாக நம்புகிறார். மூன்று பந்தயங்களில் அடுத்தடுத்து ஜெயிக்கிறது கருப்பின் சேவல் சிறந்த பயிற்சியாளர் விருதை பெறுகிறான் கருப்பு. அவனுக்கு ஐரினிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த தேவையான பணம் கிடைத்துவிட்டதாக மகிழ்கிறான். ஆரம்பத்தில் ரசிக்கிறாற் போலத் தெரிந்தாலும் பேட்டைக்காரர் பொறாமையாகிறார். அவருடைய அகங்காரம் அவரைத் துன்புறுத்துகிறது. தன் சொல்லை மீறி கருப்பு ஜெயித்தது அவரால் தாங்க முடியாததாகிறது

திட்டமிட்டு காய் நகர்த்துகிறார் பேட்டைக்காரர் அவரை முற்றிலுமாக சந்தேகத்திலிருந்து விலக்கியே பார்க்கும் கருப்பு கடைசி வரைக்கும் நம்புகிறான். துரைக்கும் அவனுக்கும் முட்டிக் கொள்கிறது. எல்லாமே பேட்டைக்காரரின் சூழ்ச்சிகளால் நடக்கிறது. துரையின் சேவலுக்கு பேட்டைக்காரர் வைத்த விஷத்துக்கு கருப்பு மீது சினம் கொள்கிறான் துரை. கருப்பின் அம்மா பணம் முழுவதும் இழந்த சோகத்தில் இறந்து விடுகிறாள். ஐரின் மனதில் நெருப்பை விதைக்கிறார். துரைக்கு துப்புத் தந்து விட்டு கருப்பை கோவிலுக்கு வரவழைக்கிறார் எல்லாவற்றுக்கும் அப்பால் அனைத்து சதிகளுக்கும் காரணம் பேட்டைக்காரர்தான் என்பதைக் கண்டுபிடிக்கிறான் கருப்பு. அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறார். ஆனாலும் பேட்டைக்காரரைக் காட்டிக் கொடுக்க மனமின்றி ஐரினுடன் தொலைதூரத்தில் உள்ள ஊருக்குச் செல்கிறான் கருப்பு.

திருப்பரங்குன்றம் என்ற ஸ்தலம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற பிரசித்தத்தைத் தாண்டி சேவற்சண்டை துவங்கி அந்தச் சிறிய பேரூரின் அசலான குண அதிசயங்களை அருகே சென்று படமாக்கித் தந்தார் வெற்றிமாறன். தனுஷ் முகமொழியாலும் நடிப்பாலும் மட்டுமன்றி நடனம் பேச்சு கண் புருவ அசைவுகள் வரை தெற்கத்திக்காரப் பயலாகவே மாறினார். இரண்டாம் பாதி முழுக்க இயலாமையும் கோபமும் யாரை நொந்துகொள்வதென்று தெரியாத அயர்ச்சியும் ததும்ப தனுஷின் நடிப்பு உக்கிரமாய்த் தோன்றியது. க்ளைமாக்ஸில் எல்லாம் நம்பிக்கைக்குப் பாத்திரமான பேட்டைக்காரர் செயல்தான் என்பதை அறிந்து நொறுங்கும் காட்சியில் தனுஷ் காண்போர் அனைவரையும் கலங்கடித்தார். அந்த வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மலையாள நடிகர் சலீமுடன் ஆடுகளம் படத்திற்காகப் பகிர்ந்து கண்டார் தனுஷ்.

இந்தப் படத்தில் இன்னொரு மனிதரின் பங்கேற்பும் பரிமளிப்பும் தனியே கூறவேண்டிய ஒன்று. வ.ஐ.ச ஜெயபாலன் பேட்டைக்காரர் வேடத்தில் நூறு சதவீதம் பொருந்தினார் என்றால் அதற்குப் பாதிக்கும் அதிகமான சதவீதக் காரணமாக விளங்கியவர் ராதாரவி. தன் முகம் தோன்றாத படத்தில் கூடக் குரல்வழியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவருடைய பின் குரல் பேட்டைக்காரராகவே நம் மனங்களில் நிரம்பிற்று. இந்தப் படத்தைக் கண்களை மூடிப் பார்க்க விழைந்தால் இதன் நாயகர் தனுஷா அல்லது ராதாரவியா என்று தான் குழப்பம் ஏற்படும். அந்த அளவுக்குத் தன் குரலால் வாழ்ந்து காட்டினார் ராதாரவி.

நம்பிக்கை துரோகம் என்பதை எடுத்துச் சொல்ல விழையும் போதெல்லாம் சினிமா அதீதத்தின் பின்னே நின்றுகொள்ளும் அல்லது அதிகதிக உணர்வுகளை எழுப்புவதாக முயன்று சொல்ல வந்தவற்றை சிதறடிக்கும். வெகு சில படங்களே அப்படியான நம்பிக்கை துரோகம் எனும் தனி நபர் சீரழிவுக்குக் காரணவிஷமாய் இருப்பதை மிகச்சரியான விதத்தில் வெளிச்சொல்ல முயன்றிருக்கின்றன. அப்படியான படங்களில் ஒன்றுதான் ஆடுகளம். மதுரை என்றாலே ரத்தமும் குத்துவெட்டுக் கொலைகளும் என்று திரும்பத் திரும்ப காட்சிப்படுத்த முயன்றவர்களுக்கு மத்தியில் வேறொரு நிசமான மதுரையை அதன் மக்களின் வாழ்க்கைத் தருணங்களின் நகர்தலை முன்வைத்துக் காட்டிய படம் ஆடுகளம்.

ஆடுகளம்: மனிதச்சேவல்கள் மண்ணெங்கும் ரத்தம்.

முந்தைய தொடர்: http://bit.ly/2ZfOumL