உன் நண்பர்களை அருகில் வை. உனது எதிரிகளை இன்னும் நெருக்கத்தில் வை

– மிக்கேல் கார்லியோன் வேடத்தில் அல்பஸீனோ தி காட்ஃபாதர் 2 திரைப்படத்தில்

ரஜினி அபூர்வ ராகங்களில் கதவைத் திறந்து கொண்டு விலாசம் விசாரித்துச் சென்ற நடிகராகத் தோன்றிய போது அவர் தான் எம்ஜி.ஆருக்கு அடுத்த சூப்பர் நடிகர் என்று யாராவது நினைத்திருப்பார்களா தெரியாது. ஆனால் அது தான் நடந்தது. ரஜினி தனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்கள் பலரையும் முந்திச் சென்று முதலிடத்தைப் பற்றினார். ஆனால் அதை விடப் பெரிய காரணம் ஒன்று நிகழ்ந்தது. அது என்னவெனில் எல்லோருக்கும் ரஜினி என்ன செய்தாலும் பிடித்தது. தமிழைத் தன் கொஞ்சுமொழியால் ரஜினி அழகாக்கினார். அவரது நடை உடை தொப்பி தொடங்கி தொட்டுக்க தொகையல் சாப்பிட்டால் அது கூடப் பிரபலம் ஆயிற்று. நின்றால் நடந்தால் ஓடினால் ஆடினால் ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல் தான்.

Image result for baatshaஆனால் ஸ்டைல் என்பதைத் தாண்டி ரஜினி ஒரு சாமான்யனைப் பிரதிபலித்து அவனை நட்சத்திரமாக்கினாற் போன்ற தன் பிரத்யேக ஒளிர்தலைக் கொண்டிருந்தது மறுக்க முடியாதது. அவரைப் போன்ற பலருக்கு மத்தியிலிருந்து வந்தாலும் அவர் ஒருவர் தான் இருந்தார். தனித் தனியே உற்றுப் பார்த்தால் மறுதலிப்பதற்கான நூறு தன்மைகளை எடுத்துக் கோர்த்து ரஜினியாக்கினாற் போல் தன்னைக் கட்டமைத்துக் கொண்டவர் ரஜினி.

அவருடைய நடிப்பு வாழ்க்கையில் இருபது வருடங்கள் கழிந்தன. ஒருவழியாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் போட்டிக்கெல்லாம் ஆளே இல்லை என்றாற் போலான பிறகு ரஜினி தன் பட எண்ணிக்கையை வருடத்திற்கு ஒன்று என்றோ இரண்டு வருடங்களுக்கு மூன்று என்றோ ஆக்கிக் கொண்டார். ஆர்.எம்.வீரப்பன் எம்ஜி.ஆரின் தளகர்த்தர். ரஜினியின் அன்புக்குரிய தயாரிப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்தே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ரஜ்னிக்கும் இடையே சில பல கருத்து எதிர்வாதங்கள் இருந்து வந்தன. அதனால் ரஜினி ஜெயலலிதாவுக்கு மாற்றாக அரசியல் சக்தியாக வருவார் என்றும் வரமாட்டார் என்றும் கருதப்பட்ட நிலையில் அவரது படங்கள் முன்பை விட உன்னிப்பாகப் பார்க்கப் பட்டன.

ஹம் ஹிந்தியில் ஒரு பரவாயில்லாமல் வெற்றி பெற்ற பழிவாங்கும் படம். அதன் மைய இழை அமிதாப் மற்றும் அவரது தம்பியர் பிரிந்து எதிரிகளைப் பழிவாங்கி ஒன்றிணைந்து சேர்வதாக இன்னுமொரு இந்திப் படமாக வந்திருந்தது. அதனை உரிமை வாங்கித் தமிழில் மீவுரு செய்ய விழையும் போது அதற்கு பாட்ஷா என்று பேரிட்டார்கள்.வழக்கமான இரட்டைத் தன்மை இருவேடங்கள் என்று எடுப்பது ஒருவிதம் ஒருவனே இருவேறு பேர்களில் ஊர்களில் காலகட்டங்களில் முகவரிகளில் வாழ்க்கை நடத்தி வருவதும் அதற்கான பின்புலக் கதையும் இன்னொரு விதம் அப்படியான படங்களின் தலையெழுத்தையே மாற்றி எழுதியது பாட்ஷா.

மாணிக்கம் அன்பானவன். யாரையும் எதிர்க்காதவன். தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவன்.தன் தந்தை படம் முன் அவன் மனமொழியில் பேசிக்கொள்வதைப் போல் ஒரு தங்கையை நல்ல மாப்பிள்ளைக்கு கட்டி வைத்து இன்னொருத்தியை அவள் கனவுப்படி டாக்டர் ஸீட் பெற்றுத் தந்து ஒரே தம்பியை சீருடைச்செருக்குடன் இன்ஸ்பெக்டராக்கி தன் மாற்றாந்தாய் மக்கள் எனப் பாராமல் தன் உயிரிழைகளாகவே அவர்கள் வாழ்க்கையில் ஸெட்டில் ஆவதைக் கண்டு இன்புறுகிறான். நடு நடுவே அவனுக்கும் பணக்காரப் பெண் ஒருத்திக்கும் அறிமுகம் கிடைக்கிறது. அவள் அவனது வெள்ளந்தி அன்பைக் கண்டு மயங்குகிறாள். நண்பன் குருமூர்த்தி ஒரு சிங் மற்றும் பரிவாரமே ஆட்டோ ஒட்டி கடை நடத்தி மாணிக்கத்தோடே இருக்கின்றனர். அப்படியான மாணிக்கம் தன் தம்பிக்கு பதிலாக அந்த ஏரியா தாதா இந்திரனிடம் அடி வாங்கும் போது அமைதியாக அதை ஏற்கிறான். தன் தங்கையை அதே இந்திரன் வம்பு செய்யப் பார்க்கையில் அவனை அடிக்கிற அடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிருக்குப் போராடுகிற அளவுக்கு துடிக்கின்றனர். கோபமாக வந்து நீ யார் பாம்பேல என்ன செய்திட்டிருந்தே எனக் கேட்கும் தம்பியிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் விழி மூடி நீர்த் திவலை உதிரத் தன் பழைய கதைக்குள் செல்கிறான் மாணிக்கம்

மாணிக்கமும் அவன் அன்புக்குரிய நண்பன் அன்வர் பாட்ஷாவும் மும்பையில் ஒன்றாக வளர்ந்து ஒருங்கே வாழ்பவர்கள். மும்பையின் நிழல் உலக டான் ஆன மார்க் ஆண்டனியின் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்கும் அன்வரைத் தன் ஆட்களை அனுப்பிக் கொன்றுவிடுகிறான் ஆண்டனி.அவனது நம்பர் ஒன் விசுவாசி தான் ரங்கசாமி. அதாவது மாணிக்கத்தின் அப்பா.தன் நண்பன் அன்வரின் கொலைக்குப் பழி வாங்க அவனைக் கொன்ற அடியாட்களைத் தேடிச் சென்று கொல்கிறான் மாணிக்கம். அவனைக் காட்டிக் கொடுக்காமல் மக்கள் அவனைப் பாதுகாக்கின்றனர். மாணிக் பாட்ஷா ஆகிறான் மாணிக்கம். ஆண்டனியின் சாம்ராஜ்யத்துக்கு எதிராகத் தனது ராஜாங்கத்தை நிலை நாட்டி படிப்படியாக ஆண்டனியின் செல்வாக்கை அழித்து தானும் தன் அடையாளங்களை அழித்துக் கொண்டு பாட்ஷா குண்டுவெடித்து இறந்து விட்டதாக புனைவொன்றை நிஜமாக்கி விட்டு சென்னைக்குத் தப்புகிறான். அங்கே தான் மாணிக்கமாக ஆட்டோ ஓட்டுகிறான்.

சிறையிலிருந்து தப்பி வரும் ஆண்டனியை அழித்து எப்படித் தன் குடும்பத்தை அவனிடமிருந்து காப்பாற்றுகிறான் என்பது மீதிக்கதை.

பாட்ஷா ரசிகர்களை வெறியர்களாக மாற்றித் தந்த படம்.ரஜினியின் உச்சபட்ச படமாக அதுவரையிலான சாதனைகளை முறியடித்தது.பாலகுமாரனின் வசனங்கள் முன்பிலாப் புதுமையோடு ஒலித்தன. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி என்று ரஜினி சொல்லும் போதெல்லாம் தன்னை நாலால் பெருக்கிக் கொண்டான் ரசிகன்.கூட்டுக்குள் நத்தை மாதிரி சுருண்டு கிடக்கும் மாணிக்கம் யார் சொல்லியும் மீண்டும் பாட்ஷா என்ற சொல்லையே உச்சரிக்காத மாணிக்கம் ஸீட் கேட்டு செல்லும் தன் தங்கையிடம் தகாத சொற்களைப் பேசும் கல்லூரி ஓனரிடம் தான் யாரென்பதை கோடிட்டு காட்டுவார். அந்தக் காட்சியில் என்ன பேசுகிறார்கள் எனத் தெரியாமல் வெளியே கண்ணாடிக்கு இந்தப் பக்கம் தங்கை பாத்திரத்தோடு நாமும் காத்திருப்போம் அப்போது உள்ளே மெல்ல எழுந்திருப்பார் கல்லூரி ஓனர் சேது விநாயகம். அவரிடம் தன் வரலாற்றுச் சுருக்கத்தை ரஜினி சொல்லி முடிக்கும் போது மாணிக்கத்தின் முன் கைகட்டி நிற்பார் சேது வினாயகம்.

ரசிக சமானத்தின் மீது நட்சத்திரத்தன்மையின் மாபெரிய போர் என்றே இந்தக் காட்சியை சொல்ல வேண்டும். அதாவது பாட்ஷா யார் என்று உரக்க சொல்லியிருந்தால் கூட அந்த இடத்தில் சாதாரணமாய்ப் போயிருக்கும். ரஜினி அங்கே குழுமும் பத்துப் பேரை அடித்து கல்லூரி ஓனரின் நெற்றியில் துப்பாக்கி அல்லது கத்தி இவற்றில் ஒன்றை வைத்து நெம்பி லேசாய்த் திறந்து ரத்தம் பார்த்தபடி எங்கேடா ஸீட்டு எனக் கேட்டு வாங்கினால் கூட அது வழக்கமான இன்னொன்றாக முடிந்திருக்கும். குழந்தையின் கெக்கலிப்புப் போன்ற மௌனத்தில் சேதுவுக்கு மட்டும் தான் யாரென்பதைச் சொல்லி விட்டு வெளில சொல்லிட மாட்டீங்களே என்று கையை சுழற்றி ஒருதடவை சொன்னா வசனத்தை உச்சரித்து விட்டுப் படாரென்று தன் கைகளைத் தட்டி வெளியே போன சேதுவின் அடியாட்களை உள்ளே அழைத்தபடி தன் கைகளைக் கட்டிக் கொள்வார் பாட்ஷா அதுவரையிலான அத்தனை நாயகத்துவத்தையும் தாண்டி இந்த இடத்தில் ஆசியக் கண்டத்தின் மகா மனிதராக தன் மனம் கவர்ந்த ரஜினி காந்தை நினைக்கவும் நம்பவும் ஆரம்பித்தான் சாமான்ய ரசிகன். இத்தனை தூரம் ஒரு பிம்பமதிப்பீட்டை அதிகரிக்கிற படங்கள் அரிதினும் அரிது.

அழகிய வில்லன் மார்க் ஆண்டனியாக ரகுவரன் இந்தியத் திரையின் உன்னதமான நடிக ஆளுமைகளில் முதன்மையான பேர் ரகுவரன். இந்தப்படத்தில் கூட பாட்ஷா என்ற ரஜினி என்ற மகா நடிகரின் மாபெரிய படத்தை ரகுவரன் என்கிற வில்லன் இல்லாமல் கற்பனை கூட செய்திட முடியாது. இன்னும் சொல்லப் போனால் ரஜினி மற்ற எல்லா ஃப்ரேம்களிலும் சிக்ஸ் ஃபோர் என அடித்து நொறுக்கிய படமான இந்த பாட்ஷாவில் கூட ரகுவரனுடன் தான் தோன்றுகிற காட்சிகளில் சற்றே டென்ஷனாகவே தோற்றமளிப்பார். அது ரஜினியின் பிரச்சினை அல்ல. ரகுவரன் அந்த அளவுக்குப் பிறரைக் கலங்கடிக்கிற நடிகன். தன்னிடம் வேலை பார்க்கும் விஜயகுமாரின் மகன் தான் ரஜினி என்பதால் அவரை சரிவரக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே போய்விட்டதை ஒரு காட்சியில் அழகாக வெளிப்படுத்துவார் ரகு.முதன் முதலாக ரஜினியை சந்திக்கும் போது நீ நம்ப ரங்கசாமி புள்ளை இல்லே என்பார். அதில் சிலபல தலைமுறைகளுக்குத் தேவையான ஆணவம் தொனிக்கும்.சூடாவார் ரஜினி

ஜனகராஜ் ரஜினியின் நண்பன் கதாபாத்திரத்துக்கென்றே ஸ்பெஷலாகப் படைக்கப்பட்டிருப்பவர் என்று தைரியமாக சொல்ல முடியும். இந்தப் படத்தில் அவருடைய வழக்கமான நகைச்சுவை நெடி சற்றுக் குறைவென்றாலும் பாட்ஷாவின் குழுமத்தில் அவருக்கடுத்த பவர்ஃபுல் மனிதராக குருமூர்த்தி என்ற பாத்திரத்தில் மின்னினார் ஜனகர்.

தேவா ரஜினி காம்பினேஷனில் இரண்டாவது படம் பாட்ஷா.ரஜினிக்கு பெயர் போடுவதற்கான இசையை ஜேம்ஸ் பாண்டிலிருந்து எடுத்தாண்டதைப் போலவே ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலுக்கும் லேசாய் பாண்ட் எட்டிப்பார்த்தார். தேவாவின் பாடல்கள் அனைத்துமே துல்லியத்திற்குப் பெயர் போனவை. வைரமுத்துவின் எந்த ஒரு வரியின் எந்த ஒரு வார்த்தையும் குழப்பாமல் மனனம் ஆனது. அந்த அளவுக்குப் பளிங்குத் தெளிவு தேவா வைரமுத்து கூட்டணி

ஹம்மை கம்முனு கிட என்றாற் போல் தமிழுக்குப் பெயர்த்ததில் எக்கச்சக்க கதாபுரட்டல்கள் உண்டென்றாலும் கூட சுரேஷ் கிருஷ்ணா ரசிகர்களில் ஒருவராக நின்றபடி படம் இயக்கத் தெரிந்தவர். அடைந்தால் மலையுச்சி வீழ்ந்தால் பாதாளபைரவி என்பது அவரது ஸ்பெஷல். பாட்ஷா பின்னியது.பின் நாட்களில் பாபா பின்னாமற் போனது. என்றபோதும் ரஜினியை அதிகம் விரும்பச் செய்த இயக்குனர்களில் அவருடைய பெயருக்கு நிச்சயம் இடமுண்டு.

இந்தப் படத்துக்கு அப்புறம் கிட்டத் தட்ட எல்லா நடிகர்களுமே தானும் ஒரே ஒரு முறையாவது பாட்ஷா மாதிரியான படத்தில் நடித்து விடவேண்டும் என்று நேர்ந்து கொண்டு இதுவரை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தின் மூலவிதை அதாவது தான் யாரென்பதை மறைத்துக் கொண்டு மாணிக்கமாக வந்து பாட்ஷா என்பதைக் காண்பித்து ஹீரோயிஸ்டிக் ஆக நடிப்பதை மையமாக்கி ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு படங்களாவது வந்திருக்கின்றன என்பதும் இன்னும் வரவிருக்கின்றன என்பதும் சொல்லொணாத் துன்பம்.

அப்படிப் பார்த்தால் தன் சொந்த பங்களாவிலேயே தான் தான் ஓனர் ஜே.பி என்பதை மறைத்துக் கொண்டு யாரோ ஒரு பாலுவாகத் தங்கிப் படத்தின் இறுதியில் அந்த உண்மையை வெளிச்சொன்ன வாத்தியாரின் அன்பேவா தான் பாட்ஷாவுக்கு முன் ஜென்மம்.

பாட்ஷா வன்மத்தின் வாள்